Published:Updated:

சென்னை: 2 வது திருமணம்; தங்கையைப் பெண் கேட்ட ரவுடி! - அம்மிக் கல்லால் கொலை செய்த அண்ணன்

ரவுடி மணிகண்டன்
ரவுடி மணிகண்டன்

சென்னை ஆதம்பாக்கத்தில் தங்கையை பெண்கேட்ட ரவுடியின் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு அண்ணன் கொலை செய்தார்.

சென்னை ஆலந்தூரை அடுத்த ஆதம்பாக்கம் ஆபீஸர்ஸ் காலனி 5-வது தெருவைச் சேர்ந்தவர் அப்பு என்ற மணிகண்டன் (34). இவர் மீது கொலை வழக்கு உட்பட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. மணிகண்டனின் மாமா குட்டான் என்ற ஆபிரகாம் என்பவரின் மகன் கார்க் என்ற எட்வின்(25). மணிகண்டனுக்கும் எட்வினுக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்துவந்தது.

மணிகண்டன்
மணிகண்டன்

இந்தநிலையில், மணிகண்டன் ஆதம்பாக்கம் மண்ணடியம்மன் கோயில் 2-வது தெருவில் உள்ள எட்வின் வீட்டுக்கு நேற்று சென்றார். அங்கு எட்வினுடன் மணிகண்டன் மது அருந்தி உள்ளார். அப்போது எட்வினிடம், உன் தங்கையை எனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று போதையில் கூறியுள்ளார். மது அருந்திய பின் எட்வின் வீட்டிலேயே மணிகண்டன் படுத்துறங்கினார்.

அதிகாலையில் கண்விழித்த எட்வின், ஏற்கெனவே மணிகண்டனுடன் சொத்துப் பிரச்னை உள்ளது. தற்போது தங்கையைப் பெண் கேட்கிறாரே என மணிகண்டன் மீது ஆத்திரப்பட்டுள்ளார். பிரபல ரவுடியான மணிகண்டனுக்கு தன்னுடைய தங்கையைத் திருமணம் செய்து கொடுக்க எட்வினுக்கு மனம் இல்லை. பெண் கொடுக்கவில்லை என்றால் தன்னையும் அவர் கொலை செய்துவிடுவார் என எட்வின் கருதியுள்ளார்.

வேலூர்: மிரட்டல் விடுத்த ரவுடி ஜானி! - போலீஸ் பாதுகாப்பில் டெல்லி முரளி

அதனால் மணிகண்டனை கொலை செய்ய எட்வின் திட்டமிட்டார். வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த மணிகண்டனின் தலையில் அம்மிக் கல்லை எடுத்துப் போட்டார் எட்வின். இதில் மணிகண்டனின் தலைநசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் எட்வின் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

எட்வின் வீட்டுக்குள் மணிகண்டன் இறந்து கிடப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருக்கும் எட்வினை போலீஸார் தேடிவந்தனர். அவர் தலைமறைவாக இருந்த இடம் குறித்த தகவல் தெரிந்ததும் இன்று அவரை போலீஸார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

எட்வின்
எட்வின்
சென்னை: மகனின் ஆசை; கொலையில் முடிந்த கோழிச்சண்டை

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ரவுடி மணிகண்டன் மீது 2010-ல் கொலை வழக்கு உள்ளது. எட்வினுக்கும் அவரின் உறவினர்களுக்கும் சொத்து தகராறு இருந்துவருகிறது. உறவினர்களை மணிகண்டன்தான் தூண்டிவிடுவதாக எட்வினுக்கு சந்தேகம் இருந்தது. ஆனாலும் இருவரும் சேர்ந்து மது அருந்துவார்கள். ஏற்கெனவே திருமணமான மணிகண்டன், எட்வினின் தங்கையை 2-வதாகத் திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். அது பிடிக்காததால் மணிகண்டனை கொலை செய்ததாக எட்வின் விசாரணையின்போது தெரிவித்தார். இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். எட்வினிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு