Published:Updated:

` அவனோட தொல்லை தாங்க முடியல!' - மனைவி புகாரால் சென்னை ரவுடியைக் கொன்ற கணவன்

பெண்ணிடம் ஏற்பட்ட தவறான பழக்கத்தால் ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சுரேஷ்
சுரேஷ்

சென்னை ரெட்டேரியை சேர்ந்த கலா (54) என்பவர் கொரட்டூர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு சென்ற எனது மகன் சுரேஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டுக் கொண்டார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுரேஷை தேடி வந்தனர்.

இந்தநிலையில், சந்தேகத்தின் பேரில் ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, சுரேஷைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கொடுத்த தகவலின்பேரில் உடலை கைப்பற்றிய கொரட்டூர் போலீஸார், ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக பெண் உட்பட 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரட்டூர் காவல்நிலையம்
கொரட்டூர் காவல்நிலையம்

இதுகுறித்துப் போலீஸாரிடம் பேசினோம். "சென்னை ரெட்டேரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். ஆட்டோ டிரைவரான இவருக்கு, பாடி கலைவாணர் நகரைச் சேர்ந்த கார்த்திகா (31) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நீண்ட காலமாக தொடர்ந்துள்ளது. இந்தநிலையில், சுரேஷிடம் பேசுவதை கார்த்திகா தவிர்த்து வந்துள்ளார். தொடர்பை துண்டிக்க முடியாமல் கார்த்திகா வீட்டுக்குத் தொடர்ந்து வந்துள்ளார் சுரேஷ். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சுரேஷ் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக தனது கணவர் ஜெயக்கொடியிடம் கூறியுள்ளார். இதையடுத்து, காவாங்கரையை சேர்ந்த ராஜா, கொருக்குப்பேட்டையை சேர்ந்த சுந்தரகண்டன் ஆகியோருடன் சேர்ந்து சுரேஷை ஆட்டோவில் கடத்தியுள்ளார் ஜெயக்கொடி. செங்குன்றம் அருகே உள்ள விளாங்காடுபாக்கம் அருகே சுரேஷின் தலையை வெட்டியுள்ளனர். உடலை அருகில் இருந்த முட்புதரில் வீசிவிட்டு, தலையை ஆட்டோவில் எடுத்துச் சென்றுள்ளனர். அந்தத் தலையை எங்கு வீசினார்கள் என விசாரித்து வருகிறோம்" என்றனர்.

அதிவேகமாகப் பறந்த கார்; துப்புக் கொடுத்த கேட்டரிங் ஊழியர்! - கேரளாவை அதிரவைத்த தொழிலதிபர் கொலை

யார் இந்த சுரேஷ்

பாடியில் உள்ள ஆட்டோ ஸ்டேன்டில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார் சுரேஷ். கடந்த 2010-ம் ஆண்டு குடிபோதையில் தனது தாய்மானைக் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவர் மீது கொளத்தூர், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

பெண்ணுடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தால் ஆட்டோ டிரைவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.