Published:Updated:

`பாம்பு நாகராஜை இப்ப மிரட்டிட்டுதான் வர்றேன்!' - கெத்து காட்டியதால் கொல்லப்பட்ட சென்னை ரவுடி

சென்னை எர்ணாவூரில் பாம்பு நாகராஜை இப்பதான் மிரட்டிவிட்டு வருகிறேன் எனக் கெத்து காட்டிய சென்னை ரவுடியை 9 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது.

சென்னை எர்ணாவூர் காந்தி நகரைச் சேர்ந்த சிவா (35) எண்ணூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, `நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். நான். எர்ணாவூரில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். மேலும், ஆட்டோக்களை சொந்தமாக வாங்கி வாடகைக்கு விட்டு வருகிறேன். என்னிடம் சின்னமுத்து என்பவர் ஆட்டோ ஓட்டிவந்தார். சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு வந்ததால் ஊரடங்கு உத்தரவால் மார்ச் மாதத்திலிருந்து ஆட்டோவை ஓட்டாமல் வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். ஆட்டோ ஓடாததால் அடிக்கடி என்னிடம் செலவுக்கு பணம் வாங்கிச் செல்வார்.

`ஃபேஸ்புக் லைவ்; ரவுண்ட் கட்டப்பட்ட சென்னை ரௌடி' - ஒரே இரவில் நடந்த 2 அதிர்ச்சி சம்பவங்கள்

16-ம் தேதி இரவு 9 மணியளவில் நானும் என் அண்ணன் பிரேம், என் நண்பர்கள் ஹேம்நாத், ராயபுரத்தைச் சேர்ந்த பிரேம், அலி ஆகியோருடன் எர்ணாவூர் காந்தி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அந்த வழியாக சின்னமுத்து வந்தார்.

எங்களைப் பார்த்ததும், என்னிடம் செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர், பேச்சுவாக்கில் எங்களிடம் எர்ணாவூரைச் சேர்ந்த பாம்பு நாகராஜ் கட்டை தொட்டி கடையில் மாமூல் கேட்டு மிரட்டியதாகக் கூறினார். அதனால், தனக்கு தெரிந்த கட்டை தொட்டி கடையின் உரிமையாளர் மாமூல் கேட்பதை தன்னிடம் கூறியதும் பாம்பு நாகராஜை அழைத்து மிரட்டி அனுப்பியதாக சின்னமுத்து எங்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

ரவுடி சின்னமுத்து

நாங்கள் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்தின் அருகில் பாம்பு நாகராஜ் மற்றும் அவரின் கூட்டாளிகள் 9 பேர் அங்கு வந்தனர். அவர்கள், சின்னமுத்துவை கத்தி முனையில் சுற்றி வளைத்தனர். பின்னர் அனைவரும் சின்னமுத்துவின் தலை, முகம், கைகளில் வெட்டினர். அதைப் பார்த்த நாங்கள் அங்கிருந்து தப்பி ஓடினோம். அப்போது என்னுடைய அண்ணன் பிரேமின் பாக்கெட்டிலிருந்து ஆப்பிள் ஐபோன் கீழு விழுந்துவிட்டது. அந்தப் போனை பாம்பு நாகராஜ் எடுத்துக்கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றுவிட்டார்.

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்த சின்னமுத்துவின் அருகில் சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார். முகம் சிதைந்து இருந்தது. எனவே, சின்னமுத்துவை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி 147, 148, 341, 294 பி, 302 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகிறார்.

`பொய் சொன்னேன், கணவர் கொலை செய்துவிட்டார்'- ரவுடி கொலையில் சிக்கிய அம்மு வாக்குமூலம்!
சடலமாக சின்னமுத்து
சடலமாக சின்னமுத்து

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட சின்னமுத்து, திருவொற்றியூர் அருகே உள்ள எர்ணாவூர், கண்ணி லால் பகுதியில் குடியிருந்து வந்தார். கடந்த நான்கு நாள்களுக்கு முன்புதான் இந்த வீட்டுக்கு வந்துள்ளார். இவருக்கென்று குடும்பம் எதுவும் இல்லை. தனியாக வசித்து வந்த சின்னமுத்துவை 9 பேர் கொண்ட மர்ம கும்பல் இரண்டு ஆட்டோக்களில் வந்து கொலை செய்துள்ளது.

2003-ம் ஆண்டில் எண்ணூரில் சின்னமுத்து பிரபல ரவுடியாக வலம் வந்தவர். ஆள்கடத்தல், கொலை முயற்சி, மாமூல் கேட்டு மிரட்டுதல் எனப் பல்வேறு வழக்குகள் எண்ணூர், சாத்தாங்காடு ஆகிய காவல் நிலையங்களில் சின்னமுத்து மீது உள்ளன. மாமூல் கேட்ட பாம்பு நாகராஜை மிரட்டியதாக ரவுடி சின்னமுத்து கெத்து காட்டிய சூழலில் கொலை செய்யப்பட்டுள்ளார். பாம்பு நாகராஜ் உட்பட 9 பேரைத் தேடிவருகிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு