Published:Updated:

சென்னை: ரூ.10 லட்சம் கடனை வாங்கச் சென்ற ரெளடி; வழிமறித்த கும்பல்! - பழிக்குப் பழி கொலை கொடூரம்

ரெளடி சிவக்குமார்
ரெளடி சிவக்குமார்

சென்னையில் கொடுத்த கடனை வாங்கச் சென்ற பிரபல ரெளடி சிவக்குமாரை ஒரு கும்பல் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கிறது.

சென்னை அசோக்நகர், போஸ்டல் காலனி, 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஜஸ்டின். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். கொரோனா காலகட்டத்தில் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஜஸ்டினுக்கு 10 லட்சம் ரூபாய் கடனாகக் கொடுத்திருக்கிறார். பணத்தை வாங்க சிவக்குமார் நேற்றிரவு அசோக்நகருக்கு சென்றிருக்கிறார்.

கொலை
கொலை
representational image

அப்போது அவரை வழிமறித்த ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. பின்னர் அங்கிருந்து அந்தக் கும்பல் தப்பிச் சென்றது. சிவக்குமாரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்துத் தகவலறிந்ததும் அசோக்நகர் போலீஸார் சிவக்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எதற்காக சிவக்குமார் கொலை செய்யப்பட்டார் என்று போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், `` மயிலாப்பூரைச் சேர்ந்த சிவக்குமார் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் என 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பிரபல ரெளடியாக வலம்வந்த சிவக்குமாருக்கு சூர்யா என்ற மனைவி இருக்கிறார். குழந்தைகள் இல்லை. சென்னை மாநகர காவல்துறையில் ரெளடிகள் பட்டியலில் ஏ ப்ளஸ் பிரிவில் சிவக்குமாரின் பெயர் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாப்பூர் பகுதியில் வீட்டுக்குள்வைத்து பெண் ஒருவரை எரித்துக் கொலை செய்த வழக்கில் சிவக்குமார் கைதுசெய்யப்பட்டிருந்தார். அந்த வழக்கில் ஜாமீனில் அவர் வெளியில் வந்திருந்தார். கடனாகக் கொடுத்த பணத்தை வாங்க சில தினங்களாக அசோக்நகருக்கு சிவக்குமார் சென்றிருக்கிறார்.

சென்னை: மாமியாருக்கு வைத்த குறி; சிக்கிய மருமகள்! - நகைக்காக நடந்த கொடூரக் கொலை
கொலை
கொலை

நேற்றிரவு ரியல் எஸ்டேட் அதிபர் அலுவலகத்தின் முன் சிவக்குமார், தன்னுடைய கூட்டாளிகளுடன் இருந்தபோது பின்தொடர்ந்து வந்த கும்பல் சிவக்குமாரின் தலையிலேயே வெட்டி அவரைக் கொலை செய்திருக்கிறது. அதைத் தடுக்கச் சென்ற சிவக்குமாரின் கூட்டாளிகளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்திருக்கிறது. சிவக்குமாருக்கும் அவரின் எதிர்க்கோஷ்டிக்கும் நீண்டகாலமாக முன்பகை இருந்துவந்தது. அந்த முன்விரோத்தில்தான் சிவக்குமாரால் பாதிக்கப்பட்ட ரெளடி ஒருவரின் மகன் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். விரைவில் சிவக்குமாரைக் கொலை செய்தவர்களைப் பிடித்துவிடுவோம். தனிப்படை போலீஸார் தீவிரமாக அவர்களைத் தேடிவருகின்றனர்’’ என்றார்.

இந்தக் கொலை பழிக்குப் பழியாக நடந்திருப்பதை போலீஸார் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். ரெளடி சிவக்குமாரைக் கொலை செய்தவர்கள் நீதிமன்றத்தில் சரணடையப்போவதாகவும் தகவல் போலீஸாருக்கு கிடைத்திருக்கிறது. அவர்களின் நடவடிக்கைகளை போலீஸார் ரகசியமாக கண்காணித்துக்கொண்டிருக்கின்றனர்.

பிரபல ரெளடி சிவக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு