Published:Updated:

`ஸ்பாட்டுக்கு வராமல் பயத்தைக் காட்டுவார்!' - ரௌடி இளநீர் சங்கர் செய்த கொடூரக் கொலைகள்

ரௌடி சங்கர்
ரௌடி சங்கர்

சென்னையில் போலீஸரால் என்கவுன்டர் செய்யப்பட்ட ரௌடி இளநீர் சங்கர் குறித்த முழுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. `ஸ்பாட்டுக்கே வராமல் பயத்தைக் காட்டுவான் சங்கர்’ என்கின்றனர் போலீஸார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை ஆவடி நியூரோட்டில் இன்று அதிகாலை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த தோட்டாக்கள், பிரபல ரௌடி இளநீர் சங்கரின் உடலைத் துளைத்திருந்தன. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரௌடி இளநீர் சங்கருக்கும் போலீஸாருக்கும் நடந்த மோதலில் காவலர் முபராக் காயமடைந்தார். அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

`யார் இந்த ரௌடி இளநீர் சங்கர்?’ என்று காவல்துறையில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம். ``தனக்கென ஒரு டீமை வைத்துக்கொண்டு சென்னையில் ரௌடி சாம்ராஜ்ஜியத்தை ஏற்படுத்தியிருந்தார் இளநீர் சங்கர்’’ என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.

ரௌடி சங்கர்
ரௌடி சங்கர்

இது குறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் சிலரிடம் பேசினோம். ``ரஇளநீர் சங்கர் பிறந்து வளர்ந்ததெல்லாம் அயனாவரம் கே.கே.நகர் பகுதிதான். சங்கர் என்ற பெயரில் ரவுடிகள் இருந்ததால், தன்னுடைய பெயருக்கு முன்னால் ஊரின் பெயரை சங்கர் சேர்த்துக் கொண்டார். அதனால் அயனாவரம் காவல் நிலைய சரித்திர குற்றப் பதிவேட்டில் `அயனாவரம் சங்கர்’ என்றே பதிவு செய்திருந்தோம். 1996-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை இவர் மேல் அயனாவரம் காவல் நிலையம், திரு.வி.க நகர், பூந்தமல்லி, திருமுல்லைவாயில் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 51 வழக்குகள் உள்ளன.

மாமூல் கேட்டு மிரட்டுவது முதல் கஞ்சா பிசினஸ் வரை அயனாவரம், கீழ்ப்பாக்கம் பகுதியில் ரௌடி சங்கர் கொடிகட்டிப் பறந்தார். அவரின் கண்ணசைவு இல்லாமல் எதுவும் நடக்காது என்றே சொல்ல வேண்டும். சங்கருடன் எப்போதும் ஒரு டீம் இருக்கும். பல வழக்குகளில் அவரைத் தேடி வந்தோம். சென்னையில் `சம்பவ’த்தைச் செய்துவிட்டு வேறு மாநிலத்துக்குச் சென்று பதுங்கிக்கொள்வதை சங்கர் வழக்கமாக வைத்திருந்தார். சங்கர், அவரின் தம்பி கதிர்வேலுவுக்கும் அயனாவரத்தைச் சேர்ந்த ஞானம் மற்றும் நொண்டி கார்த்திக் ஆகியோருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுவந்தது. இந்தச் சமயத்தில் அயனாவரத்தில் நடந்த ஓர் இறுதி ஊர்வலத்தில் சங்கருக்கும் ஞானம், நொண்டி கார்த்திக் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், சங்கரை ஞானம், நொண்டி கார்த்திக் டீம் வெட்டியது. அதிர்ஷ்டவசமாக சங்கர் உயிர்பிழைத்துக் கொண்டார். அதன் பிறகுதான் சங்கர் தரப்பும் ஞானம், நொண்டி கார்த்திக் தரப்பும் அடிக்கடி மோதிக்கொண்டன. மேலும், இந்த இரண்டு டீம்களுக்கும் இடையே கஞ்சா விற்பதில் நீண்டகாலமாக முன்விரோதம் இருந்துவந்தது.

என்கவுண்டர் நடந்த இடம்
என்கவுண்டர் நடந்த இடம்

இந்தச் சமயத்தில் சங்கரின் தம்பி கதிர்வேலை, பிரபல ரௌடி யமஹா பாலாஜி மூலம் நொண்டி கார்த்திக், ஞானம் டீம் கொலை செய்தது. அதனால், யமஹா பாலாஜியைக் கொலை செய்ய சங்கர் தரப்பு திட்டமிட்டது. அயனாவரத்தில் நொண்டி கார்த்திக் டீமால் உயிருக்கு ஆபத்து எனக் கருதிய சங்கர், அங்கிருந்து இடத்தை மாற்றினார். அதேபோல நொண்டி கார்த்திக்கின் சித்தப்பா விஜியும் அயனாவரத்திலிருந்து திரு.வி.க நகருக்கு இடம்பெயர்ந்தார். 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் சங்கர் கும்பலால் விஜி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் உள்ளது. விஜி கொலைக்கு பழிக்குப் பழி வாங்க நொண்டி கார்த்திக் டீம் காத்திருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னை: `மூன்று கொலைகள்; 51 வழக்குகள்' - ரௌடி சங்கர் என்கவுன்ட்டர் பின்னணி

தலைமறைவாக இளநீர் சங்கர் இருந்தாலும் அயனாவரம், கீழ்ப்பாக்கம் பகுதியில் தன்னுடைய கூட்டாளிகள் மூலம் வியாபாரிகளை மிரட்டிப் பணம் பறிப்பதை மட்டும் அவர் நிறுத்தவில்லை. ஸ்பாட்டுக்கே வராமல் பயத்தைஜ் காட்டுவதுதான் இளநீர் சங்கரின் ஸ்டைல். இந்தச் சமயத்தில் தம்பியின் கொலைக்கு பழிக்குப் பழிவாங்க யமஹா பாலாஜியின் நகர்வுகளை சங்கர் கண்காணித்து வந்திருக்கிறார். ரவுடி யமஹா பாலாஜி, தன்னுடைய அப்பா சண்முகம் ரயிலிலிருந்து தவறிக் கீழே விழுந்து இறந்ததால் அவருக்கு கொள்ளிபோட, கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமுல்லைவாயிலுக்கு வந்தார்.

ரௌடி சங்கர்
ரௌடி சங்கர்

இந்தத் தகவல் தெரிந்ததும் இளநீர் சங்கர் நேரிடையாக திருமுல்லைவாயிலுக்கு கூட்டாளிகளோடு வந்தார். நண்பர்களோடு திருமுல்லைவாயில் ரயில் நிலையம் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் யமஹா பாலாஜி பேசிக்கொண்டிருந்தபோது அதிரடியாக உள்ளே புகுந்தது சங்கரின் டீம். மண்டபத்துக்குள்ளேயே வைத்து யமஹா பாலாஜியைக் கொடூரமாகக் கொலை செய்தது சங்கரின் டீம். இந்த வழக்கில் திருமுல்லைவாயல் போலீஸார் சங்கர் உட்பட அவரின் கூட்டாளிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியில் வந்த சங்கர், மீண்டும் தலைமறைவாகினார். பூந்தமல்லி காவல் நிலையத்தில் சங்கர்மீது கொலை வழக்கு உள்ளது. சங்கர்மீது கொலை வழக்குகளைவிட மிரட்டல், கஞ்சா வழக்குகள்தான் அதிகம். அவற்றில், சில வழக்குகளிலிருந்து அவர் விடுதலையாகியுள்ளார். இன்னும் சில வழக்குகளில் சங்கருக்கு தண்டனையும் கிடைத்துள்ளது"என்றனர்.

திருவள்ளூர்: `தண்டவாளத்தில் ரவுடி தலை; தோப்பில் சடலம்' - மாணவன் கொலைக்குப் பழிக்குப் பழி?

`இளநீர் சங்கர்’ என்கவுன்ட்டரோடு தமிழகத்தில் முக்கியமான ரௌடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவரங்கள்...

1996-ம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் ரௌடி ஆசை தம்பி

2003-ம் ஆண்டு வெங்டேச பண்ணையார்

2003-ல் அயோத்திக்குப்பம் வீரமணி

2004-ம் ஆண்டில் சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் அவரின் கூட்டாளிகள்

2006-ல் சைதாப்பேட்டையைச் சேர்ந்த பங்க் குமார்

2007-ல் வெள்ளை ரவி மற்றும் மணல்மேடு சங்கர்

2008-ல் காசிமேடு பாபாசுரேஷ்

2010-ல் கோவையில் டிரைவர் மோகன்ராஜ் (சிறுவர்கள் கடத்தி கொலை)

காவலர் முபராக்
காவலர் முபராக்

2012-ல் சென்னை வேளச்சேரியில் பீகார் இளைஞர்கள் ஐந்து பேர் (வங்கிக் கொள்ளை)

2015-ல் ரௌடி கிட்டப்பா

2017-ல் ரௌடி கோவிந்தன் (ராமநாதபுரம்)

2018-ல் ரௌடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் (மதுரை)

2018-ல் ரௌடி ஆனந்தன் (சென்னை தரமணி)

2018- ரௌடி கதிர்வேல் (சேலம்)

2019-ல் ரௌடி வல்லரசு (சென்னை)

இந்தப் பட்டியலில் ரௌடி இளநீர் சங்கரின் பெயரும் இன்று இடம்பிடித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு