சென்னை, ஜாபர்கான்பேட்டை, ஆர்.வி.நகர், 6-வது தெருவிலுள்ள குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பில் குடியிருப்பவர் ரௌடி தினேஷ். இவர் பிரபல ரௌடி ஒருவரின் கூட்டாளி. தினேஷ்மீது 10-க்கும் மேர்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தினேஷின் மனைவி ஆதிலட்சுமி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆதிலட்சுமியின் அப்பா புண்ணியகோட்டி (65), அம்மா இந்திரா. இவர்கள் இருவரும் ஆதிலட்சுமியின் வீட்டில் குடியிருந்துவருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், வேளச்சேரியில் நடந்த செயின் பறிப்பு வழக்கில் ரௌடி தினேஷ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று அதிகாலை ரௌடி தினேஷைத் தேடி அவரின் நண்பர் ரௌடி கணேஷ் என்பவர் வந்தார். வீட்டில் புண்ணியகோட்டி இருந்தார். அவரிடம், `தினேஷ் எங்கே?’ என்று கேட்டிருக்கிறார் கணேஷ். அதற்கு புண்ணியகோட்டி, `உனக்கு தெரியாதா... அவனைத்தான் போலீஸ் கைது செய்துவிட்டார்களே... தெரிந்துகொண்டே கிண்டல் பண்ணுகிறாயா?’ என்று கூறியுள்ளார். அதற்கு கணேஷ், புண்ணியகோட்டியிடம், `உங்கள் மருமகன் தினேஷ் தேவையில்லாமல் என் வாழ்க்கையில் விளையாடுகிறான். என் மனைவியைக் காணவில்லை. அவளைத் தேடித்தான் இங்கு வந்தேன்’ என்று கூறியிருக்கிறார்.
அதைக் கேட்ட புண்ணியகோட்டி, `என் மருமகனுக்கும் உன் மனைவிக்கும் என்ன சம்பந்தம்? தேவையில்லாமல் பிரச்னை செய்யாதே...’ என்று சொல்லியிருக்கிரார். அதற்கு ரௌடி கணேஷ், `நான் சிறையிலிருந்த நாள்களில் என் மனைவியுடன் தினேஷுக்குப் பழக்கம் இருந்தது’ எனக் கூறியுள்ளார். அதனால் புண்ணியகோட்டிக்கும் கணேஷுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து புண்ணியகோட்டியின் தலையில் வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் புண்ணியகோட்டி கீழே சரிந்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிலுள்ளவர்கள் வெளியில் வந்திருக்கிறார்கள். உடனே கணேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து புண்ணியகோட்டியை மீட்டு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் புண்ணியகோட்டி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து குமரன்நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், புண்ணியகோட்டியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். புண்ணியகோட்டியைக் கொலை செய்த வழக்கில், ரௌடி கணேஷை போலீஸார் தேடிவருகின்றனர்.
இது குறித்து குமரன் நகர் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``ரௌடி கணேஷ் சிறைக்குச் சென்ற சமயத்தில் கணேஷின் மனைவிக்கும், தினேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், ரௌடி கணேஷை விட்டு அவரின் மனைவி பிரிந்து சென்றிருக்கிறார். அதற்கு தினேஷ்தான் காரணம் எனக் கருதியுள்ளார். சிறையிலிருந்து வெளியில் வந்த கணேஷ், ரௌடி தினேஷைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், தினேஷ் சிறைக்குள் இருப்பதால் அவரின் மாமனார் புண்ணியகோட்டியைக் கொலை செய்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கணேஷிடம் விசாரித்தால்தான் என்ன நடந்தது என்று தெரியவரும்" என்றனர்.
மருமகனுக்கு பதிலாக மாமனாரைக் கொலை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.