Published:Updated:

“அவன் ஒரு செக்ஸ் சைக்கோனு அப்போ எனக்குப் புரியலை!”

பாலியல் வழக்கு
பிரீமியம் ஸ்டோரி
News
பாலியல் வழக்கு

கண்ணை மறைத்த காமம்... களவு கொடுத்த 65 லட்சம்!

‘‘பாலியல் அத்துமீறல் வழக்கை விசாரிக்கும் முறையா இது?’’ - சென்னை சைதாப்பேட்டை ஒன்பதாவது மாஜிஸ்ட்ரேட் சமீபத்தில் காவல்துறையினரை நோக்கிக் கக்கிய அனல் வார்த்தைகள் இவை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கடந்த 2016-ம் ஆண்டு கொடுத்த புகாரைக் கிடப்பில் போட்டு, அதை நீர்த்துப்போகச் செய்து, நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியிருக்கிறது சென்னை காவல்துறை. “நான்கு வருடங்களாக நான் ஏமாற்றப்பட்டதையும், செக்ஸ் டார்ச்சர் அனுபவித்ததையும் விலாவாரியாகக் குறிப்பிட்டும், வழக்கு ஒரு இன்ச்கூட நகரவில்லை’ என்கிறார் புகார் கொடுத்த பெண். “அந்தப் பெண்தான் என்னை மிரட்டி தன் கன்ட்ரோலில் வைத்திருந்தார்” என்கிறார் புகாருக்குள்ளான ஆண். என்னதான் நடந்தது?

புகார் கொடுத்த பெண்ணிடம் பேசினோம். ‘‘விருதுநகர் மாவட்டத்துல இருக்கு என்னோட சொந்த ஊர். அப்பா பெரிய தொழிலதிபர். சென்னை அடையார்லயே எனக்கு அஞ்சு வீடுகள் இருக்கு. அந்த வீடுகளையெல்லாம் வாடகைக்கு விட்டுட்டு இப்போ லண்டன்ல இருக்கேன். பிறந்ததுல இருந்து எந்தக் கஷ்டத்தையும் என் அப்பா, அம்மா எனக்குக் கொடுத்ததில்லை. அதனாலேயோ என்னவோ, சேர்த்துவெச்சு எல்லா கஷ்டத்தையும் மொத்தமா அனுபவிச்சுட்டேன்.

1993-ல ஒரு டாக்டரோட எனக்குத் திருமணமாச்சு. ஒரு பெண் குழந்தையும் பிறந்துச்சு. லண்டன்ல இருக்குற தேசிய சுகாதார சேவை மையத்துல பத்து வருஷம் வேலை பார்த்தேன். கணவருக்கும் எனக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, சட்டப்படி 2011-ம் வருஷம் பிரிஞ்சுட்டோம். லண்டன் நீதிமன்றம் மூலமா, என் மகளைப் பராமரிக்கும் பொறுப்பை நானே ஏத்துக்கிட்டேன். தனிமை, வெறுமைனு விரக்தி என்னை துரத்திக்கிட்டிருந்த நேரத்துலதான் ராஜ்குமார் அய்யாசாமி என் வாழ்க்கையில வந்தான்.

“அவன் ஒரு செக்ஸ் சைக்கோனு அப்போ எனக்குப் புரியலை!”

அப்பவே திட்டம்... அடுத்த நாளே மெசேஜ்

ராஜ்குமாரும் என்னோட ஊரைச் சேர்ந்தவன் தான். அம்பத்தூர்ல இருக்குற சாஃப்ட்வேர் நிறுவனத்துல வேலை பார்க்கிறான். அவனுக்குக் கல்யாணமாகி ரெண்டு குழந்தைங்க இருக்கு. எனக்கு தூரத்துச் சொந்தமும்கூட. வேலை சம்பந்தமா 2012-ம் வருஷம் லண்டன் வந்த ராஜ்குமார், என்னைப் பார்க்குறதுக்காக வீட்டுக்கு வந்தான். மனசு இறுகிப்போயிருந்த சூழல்ல சொந்த ஊர்க்காரரைப் பார்த்தது மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு. என் கணவரைப் பிரிஞ்சிருக்குற விஷயம், பெண் குழந்தையோட தனியாளா கஷ்டப்படுறதுனு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டான். பேச்சுவாக்குல என்னோட சொத்து விவரங்களையும் அவன்கிட்ட நான் சொல்லிட்டேன். அப்பவே திட்டம் போட்டுட்டான்போல... என் மூளைக்குத்தான் சுத்தமா உறைக்கலை. என்னோட போன் நம்பரை வாங்கிட்டுப் போனவன், அடுத்த நாளே மெசேஜ் பண்ண ஆரம்பிச்சுட்டான்.

முதல்ல டீசன்ட்டாதான் மெசேஜ் வந்தது. பிறகு, கொஞ்சம் கொஞ்சமா ‘நீ இல்லாம என்னால வாழ முடியாது. என் வாழ்க்கையும் நல்லாயில்லை. மனைவியை விவாகரத்து செய்யறதுக்காக மனு போட்டிருக்கேன். எனக்கு நீ வேணும். உன்னை கல்யாணம் செஞ்சுக்குறேன்...’ - இப்படி தினமும் மெசேஜ் பண்ணுவான். அதைக் கடுமையாகக் கண்டிச்சேன். ‘மறுபடியும் ஒரு திருமணத்தை என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை. என்னை விட்டுரு’னு சொல்லியும் அவன் கேட்கவே இல்லை. விடாம என்னை மெசேஜால துரத்திக்கிட்டே இருந்தான். ஒருகட்டத்துல என் வாழ்க்கைக்கும் ஒரு பிடிப்பு தேவைனு பட்டுச்சு. மனசு மாறி ராஜ்குமார்கூடப் பழக ஆரம்பிச்சேன். அங்கே ஆரம்பிச்சுது என்னோட பிரச்னை...

போகப் போக செக்ஸியா மெசேஜ் பண்ண ஆரம்பிச்சான். ‘எனக்கு இப்பவே உன்னோட நிர்வாண போட்டோவை அனுப்பு’னு சொல்லுவான். நான் மறுத்தாலும் விட மாட்டான். வேற வழியில்லாம நானும் அனுப்பிடுவேன். பிறகு நேரங்காலம் இல்லாம கேட்க ஆரம்பிச்சான், அதிகாலை 4 மணிக்கு கால் பண்ணி வீடியோ கேட்பான்... அவனோட டார்ச்சர் தாங்க முடியாம அனுப்பிவெச்சிருக்கேன். அவன் ஒரு செக்ஸ் சைக்கோனு அப்போ எனக்குப் புரியலை.

லண்டன்ல இருந்து சென்னைக்குத் திரும்பினவன், 2013-ம் வருஷத்துல இருந்து என்னோட அடையார் வீட்டுலதான் குடியிருந்தான். புருஷனா வரப்போறவர் தானேனு நானும் அதைக் கண்டுக்கலை. 2014-ல, ‘மனைவியோட டைவர்ஸ் ஆகிடுச்சு, கோர்ட் பேப்பருக்காக வெயிட் பண்றேன்’னு சொன்னான். கடுமையா வற்புறுத்தின பிறகு 2014, செப்டம்பர் 15 அன்னிக்கு அடையார் அனந்த பத்மநாபசாமி கோயில்லவெச்சு தாலி கட்டினான். என்னோட அம்மா, அக்காவுக்கு இதுல உடன்பாடு இல்லை. ‘தப்பு பண்றே’னு சொன்னாங்க. நான்தான் கேட்கவே இல்லை. என்னோட அடையார் வீட்டுல ரெண்டு பேரும் குடித்தனம் நடத்தினோம்.

கல்யாணத்துக்குப் பிறகு ராஜ்குமாரோட செக்ஸ் டார்ச்சர் ரொம்ப ரொம்ப அதிகமாச்சு. செக்ஸ்வெச்சுக்கும்போது சொல்ல முடியாத இடங்கள்ல கண்டபடி அடிப்பான். வெளியே சொல்லவே கூசுற மாதிரி மோசமா நடந்துக்கு வான். எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டேன். வீட்டுல அடிக்கடி திருட்டுப் போனதால, வேலைக்காரி மேல சந்தேகப்பட்டு சிசிடிவி கேமராவெச்சேன். அதுக்குப் பிறகுதான், ராஜ்குமார்தான் எல்லாத்தையும் திருடியிருக்கான்னு தெரிஞ்சுது.

“அவன் ஒரு செக்ஸ் சைக்கோனு அப்போ எனக்குப் புரியலை!”

65 லட்சம் அபேஸ்

விசா முடிஞ்சு நான் லண்டன் போனப்ப, அடையார் வீட்டுக்குப் பொண்ணுங்களைக் கூட்டிட்டு வந்து கூத்தடிச்சிருக்கான். இந்த விஷயம் எனக்குத் தெரிஞ்சவுடனேயே அவனைக் கண்டிச்சேன். நவம்பர் 2014-ல, ராஜ்குமாரோட மனைவி எனக்கு மெசேஜ் பண்ணி, ‘என் புருஷனை விட்டுப் போயிடு’னு சொன்னாங்க. அப்போதான் இவனுக்கும் இவன் மனைவிக்கும் டைவர்ஸ் ஆகாததே எனக்குத் தெரிஞ்சுது.

ராஜ்குமாரையும் அவன் மனைவியையும் என்னோட அடையார் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து பேசினேன். ‘ரெண்டு பேரையும் சேர்த்தே வெச்சுக்குறேன்’னு சொன்னான் ராஜ்குமார். நான் மறுத்துட்டேன். சில நாள்கள் கழிச்சு, நாங்க பேசிட்டு இருந்த சிசிடிவி காட்சியைப் போட்டுப் பார்த்தப்போ ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. நான் முகம் கழுவுறதுக்காக ரூமுக்கு போனப்போ, என்னோட போனை எடுத்து ராஜ்குமார் எதையோ செக் பண்றான். அவன் மனைவி, தொடையைத் தட்டி அவனைக் கூப்பிட்டு, ‘பணம் கிடைக்க லையா?’னு சைகையில கேக்குறாங்க. அப்போதான் பணத்துக்காக மொத்தக் குடும்பமும் சேர்ந்து நாடக மாடுறாங்கனு புரிஞ்சுக்கிட்டேன். என்னோட பேங்க் பேலன்ஸை செக் செஞ்சப்போ, கிட்டத்தட்ட 65 லட்ச ரூபாயை ராஜ்குமார் எடுத்திருக்கிறது தெரியவந்துச்சு. அவன் பணம் எடுத்ததைக்கூட உணராம மந்திரிச்சுவிட்டவ மாதிரி இருந்திருக்கேன்.

மார்ச், 2016-ல அடையார் உதவி கமிஷனர் அலுவலகத்துல ராஜ்குமார் மற்றும் அவனோட குடும்பத்தினர் மேல புகார் கொடுத்தேன். நீண்ட விசாரணைக்குப் பிறகு நவம்பர் மாசம் ராஜ்குமாரை கைது செஞ்சாங்க. ஆனா, பத்தே நாள்ல அவன் வெளியில வந்துட்டான். உயர் நீதிமன்றம் போன பிறகுதான் வழக்குல சார்ஜ் ஷீட் போட்டாங்க. அதுவும் குற்றத்துக்குத் தொடர்பில்லாத டம்மி பிரிவுகள்ல வழக்கு பதிவுசெஞ்சிருந்தாங்க. மறுபடியும், சைதாப்பேட்டை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துல 2019-ம் வருஷம் மனு போட்டேன். ஏமாற்றி செக்ஸ்வெச்சுக்கிட்டதால, ராஜ்குமார்மீது ஐ.பி.சி 375 பிரிவின்கீழ் பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யணும்கிறதுதான் என்னோட கோரிக்கை. வாய்ஜாலம் பேசுறவங்களை நம்பி, என்னை மாதிரி யாரும் ஏமாந்துடக் கூடாது’’ என்றார் கண்ணீரோடு.

‘‘உறவு இருந்தது உண்மைதான்!’’

புகார்கள் குறித்து விளக்கமறிய ராஜ்குமாரிடம் பேசினோம். “அந்தப் பெண்ணோட உறவு இருந்தது உண்மைதான். அது அவரோட சம்மதத்தோடதான் இருந்தது. செக்ஸ் டார்ச்சரெல்லாம் கொடுக்கலை. செக்ஸியாக அவரும்தான் எனக்கு மெசேஜ் அனுப்பினார். அதையெல்லாம் அவரைப்போல நான் சேர்த்துவெக்கலை. மூணு வருஷம் என்னைக் கட்டாயப்படுத்தி அவரோட தங்கவெச்சிருந்தார். எனக்கு விருப்பமில்லைனு சொன்னப்ப, ‘உன்மேல போலீஸ்ல புகார் கொடுப்பேன்’னு சொன்னார்.

என் மனைவியோட சமாதானம் பேச வந்தப்போ, ரெக்கார்ட் ஆன வீடியோவுல அவர் போனை நான் செக் செய்யும்போது ‘என்ன பார்க்குறீங்க?’னு என் மனைவி சைகையால் கேட்டதைத்தான் பணம் கேட்டதாகத் திரிச்சுட்டார். மத்தபடி அவர்கிட்ட பணம் எதையும் நான் ஏமாத்தலை. புத்தி மாறி தப்பு செஞ்சுட்டேன். அதுக்காக நான் அனுபவிக்கும் கொடுமைங்க ஏராளம்” என்றார்.

இருவரும் பரஸ்பரம் அடுத்தவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள். முறையற்ற ஓர் உறவால் இரண்டு குடும்பங்களும் இன்று சின்னா பின்னமாகியிருக்கின்றன. சொற்ப நிமிட சந்தோஷத்துக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையைத் தொலைக்க நினைப்பவர்களுக்கு இந்த வழக்கு ஒரு பாடம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்ட சூழலில், “நான் ஏமாற்றப்பட்டேன்... செக்ஸ் டார்ச்சர் அனுப வித்தேன்!” என்று சொல்லும் ஒரு பெண்ணின் குரலுக்கு கவனம் கொடுத்தே ஆக வேண்டும்!