சென்னை: புத்தாண்டுக்கு பிரியாணி கேட்ட மாணவி - விபரீத முடிவை எடுத்ததால் குடும்பத்தினர் சோகம்

புத்தாண்டு தினத்தன்று பிரியாணி சமைத்துத் தரும்படி தாயிடம் பள்ளி மாணவி கேட்டிருக்கிறார். அதில் ஏற்பட்ட தகராறில் மாணவி, தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னையை அடுத்த குன்றத்தூர், கிழக்கு குளக்கரைத் தெருவைச் சேர்ந்தவர் பழனி. கார் டிரைவர். இவரின் மனைவி தேவி. இந்தத் தம்பதியரின் மகள் தீபிகா (12). குன்றத்தூரிலுள்ள அரசுப் பெண்கள் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவந்தார் புத்தாண்டு தினத்தன்று அசைவ பிரியாணி சமைக்கும்படி தீபிகா, தேவியிடம் கூறியிருக்கிறார். அதற்கு இந்த ஆண்டு புத்தாண்டு வெள்ளிக்கிழமையில் வருவதால், அசைவ பிரியாணி சமைக்க முடியாது என்று தேவி தெரிவித்திருக்கிறார். அதனால், மாணவி தீபிகாவுக்கும் தேவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனவருத்தத்தில் தீபிகா இருந்திருக்கிறார். பின்னர் அறைக்குச் சென்ற தீபிகா, நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. அதனால் சந்கேமடைந்த குடும்பத்தினர் தீபிகாவின் அறைக் கதவைத் தட்டியிருக்கின்றனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.
அதனால், கதவை உடைத்து உள்ளே சென்றபோது தீபிகா, தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, தீபிகாவை மீட்டு குடும்பத்தினர் முதலுதவி அளித்தனர். பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தீபிகா ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இதையடுத்து குன்றத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தீபிகாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தீபிகாவின் மரணம் குறித்து வழக்கு பதிந்த போலீஸார், அவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் பிரியாணி தொடர்பாக வீட்டில் தகராறு ஏற்பட்ட தகவல் தெரியவந்தது.