Published:Updated:

சென்னை: `பெட் ஷீட்னு நினைச்சேன்!'- காவலாளி தலைமீது ஏறி இறங்கிய ஆடி கார்; தொழிலதிபர் மகள் கைது

விபத்து நடந்த இடம்
விபத்து நடந்த இடம்

சென்னை பட்டினப்பாக்கத்தில் ஆடி காரை நிறுத்தும்போது அங்கு படுத்திருந்த காவலாளிமீது ஏறி இறங்கியது. அதில் காவலாளி உயிரிழந்தார்.

சென்னை பட்டினப்பாக்கம், லீத் கேஸ்டில் வடக்குத் தெருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்துவந்தவர் சிவப்பிரகாசம். ஓய்வுபெற்ற அரசு ஊழியர். சம்பவத்தன்று அந்தக் குடியிருப்பில் இரவு நேரப் பணிக்கு வழக்கமாக வரும் காவலாளிக்கு பதிலாக சிவப்பிரகாசம் பணியிலிருந்தார். அதனால், இரவுப் பணி காவலாளிகள் தூங்கும் இடத்தில் படுக்காமல் காரை பார்க் செய்வதற்கான பாதையில் சிவப்பிரகாசம் படுத்திருந்தார்.

உயிரிழந்த காவலாளி சிவப்பிரகாசம்
உயிரிழந்த காவலாளி சிவப்பிரகாசம்

அப்போது அந்தக் குடியிருப்பில் வசித்துவரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பழனியப்பன் என்பவரின் மகள் அபர்ணா, தனது ஆடி காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்தினார். அப்போது சொகுசு கார், அங்கு தூங்கிக்கொண்டிருந்த காவலாளி சிவப்பிரகாசம் தலையில் ஏறிச் சென்றது. அதை கவனிக்காத அபர்ணா, காரை பார்க்கிங் செய்துவிட்டு வீட்டிற்குள் சென்றார். அதன் பிறகு அபர்ணாவின் சகோதரி பார்க்கிங் பகுதிக்கு வந்தார். அப்போது, சிவப்பிரகாசம் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு பட்டினப்பக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.

பட்டினப்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். காவலாளி சிவப்பிரகாசத்தின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிவப்பிரகாசத்தின் மீது கார் ஏறியதற்கான காயங்கள் இருந்தன. இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் அபர்ணா காரை நிறுத்தும்போதுதான் சம்பவம் நடந்தது என்பது தெரியவந்தது.

ஆய்வு நடத்தும் போலீஸ்
ஆய்வு நடத்தும் போலீஸ்

இதையடுத்து அபர்ணாவிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், காரை பார்க்கிங் செய்தபோது டயர் ஏறி இறங்கியது தெரியவந்தது. ``பார்த்தபோது பெட்ஷீட் கிடந்தது. அதன்மீதுதான் காரின் டயர் ஏறி இறங்கியதாகக் கருதி வீட்டுக்குள் சென்றுவிட்டேன். செக்யூரிட்டி சிவப்பிரகாசம் மீது காரின் டயர் ஏறி இறங்கியதைக் கவனிக்கவில்லை’’ என்று கூறியுள்ளார். அபர்ணா மீது 304 ஏ (அஜாக்கிரதையால் மரணம் ஏற்படுத்துதல்) என்ற பிரிவின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது அவரைக் கைது ய்தனர். விபத்து ஏற்படுத்திய சொகுசு காரையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை: `பெட்ஷீட்டுக்கு ரூ.12 லட்சம், சொகுசு கார்!’ - ஆசையைத் தூண்டி வலைவிரித்த கும்பல்

காவலாளி சிவபிரகாசத்தின் மனைவி அன்பரசி, பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``என் கணவர் சிவபிரகாசத்துக்கு 69 வயதாகிறது. எங்களுக்கு திருமணமாகி 40 ஆண்டுகள் ஆகின்றன. எங்களுக்கு மூன்று பிள்ளைகள். என் கணவர் தலைமைச் செயலகத்தில் வருவாய்ப் பிரிவில் வேலை பார்த்து 2009-ம் ஆண்டு ஓய்வு பெற்றுவிட்டார். குடும்பக் கஷ்டம் காரணமாக காவலாளியாக வேலை பார்த்துவந்தார். என் கணவர், இரவு பணிக்காக கடந்த 2-ம் தேதி சென்றார்.

ஆடி கார்
ஆடி கார்
சென்னை:`திருட்டு கார் விபத்து; காட்டிக்கொடுத்த சர்வீஸ் சென்டர்' - போலீஸில் சிக்கிய நபர்

3-ம் தேதி அதிகாலையில் என் கணவர் இறந்துவிட்டதாகவும், அவரின் சடலம் ராயப்பேட்டை பிணவறையில் இருப்பதாகவும் எனக்குத் தகவல் வந்தது. உடனே அங்கு சென்று பார்த்தபோது என் கணவரின் தலை, வயிறு, முட்டி ஆகியவற்றில் காயங்கள் இருந்தன. என் கணவர் வேலை பார்த்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அபர்ணா என்ற பெண், காரை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டியபோது என் கணவர்மீது மோதியதில் உயிரிழந்தது தெரியவந்தது. எனவே, சம்பந்தப்பட்டவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பீர்பாஷா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

காவல் நிலையத்தில் அன்பரசி, ``என்னுடைய மகளுக்கும் அவரின் கணவருக்கும் விவகாரத்து ஏற்பட்டு குழந்தைகளுடன் எங்களுடன் வசித்துவருகிறார். அவருக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தை வைத்து குடும்பத்தை நடத்துவதில் சிரமம் இருந்தது. அதனால்தான் இந்த வயதில் அவர் செக்யூரிட்டி வேலைக்குச் சென்றார். இன்றைக்கு அவரை இழந்து தவித்துக்கொண்டிருக்கிறோம்’’ என்று கண்ணீர்மல்க கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு