Published:Updated:

சென்னை: ரெம்டெசிவிர் விற்பனை; சிக்கியவர்களின் ஏடிஎம் கார்டிலிருந்து பணம் எடுத்த எஸ்.ஐ., காவலர்!

ரெம்டெசிவிர் மருந்து
ரெம்டெசிவிர் மருந்து

ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தவர்களின் ஏடிஎம் கார்டிலிருந்து பணத்தை எடுத்த எஸ்.ஐ., காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரத்தை அடுத்த திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (23). இவரும் மணி என்பவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை விடுதியில் தங்கி ஒப்பந்த அடிப்படையில் மருத்துவமனையில் வேலை பார்த்துவந்தனர். பாலகிருஷ்ணனின் நண்பரான புரசைவாக்கத்தைச் சேர்ந்த முகமது இர்பான் திருவல்லிக்கேணி பகுதியில் மெடிக்கல் வைத்திருக்கிறார்.

ரெம்டெசிவிர் மருந்து
ரெம்டெசிவிர் மருந்து

இவர்கள் மூன்று பேரும் ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் விற்க முடிவு செய்தனர். இதையடுத்து ரெம்டெசிவிர் மருந்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து பாலகிருஷ்ணனும் மணியும் திருடி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கலில் (35),முகமது ஜாவித், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஆரிப் உசேன் ஆகியோருடன் சேர்ந்து திருவல்லிக்கேணியிலுள்ள மெடிக்கல் ஷாப்பில்வைத்து விற்பனை செய்துவந்திருக்கின்றனர்.

இது குறித்துத் தகவல் கிடைத்ததும் சென்னை கிழக்கு மண்டல காவல் இணை கமிஷனர் பாலகிருஷ்ணனின் தனிப்படையினர், மணியைத் தவிர மீதமுள்ள ஐந்து பேரையும் கைதுசெய்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தலைமறைவாக இருக்கும் மணியை போலீஸார் தேடிவருகின்றனர். இந்தநிலையில், கைதுசெய்யப்பட்டவர்களின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி ஒரு லட்சம் ரூபாய் பணத்தைக் கையாடல் செய்ததாக தனிப்படை உதவி ஆய்வாளர் சுதாகர், தலைமைக் காவலர் சரவணன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

 சஸ்பெண்ட்
சஸ்பெண்ட்

இது தொடர்பாக இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். அப்போது கைது ய்யப்பட்டவர்களின் ஏடிஎம் கார்டிலிருந்து எஸ்.ஐ- சுதாகரும், தலைமைக் காவலர் சரவணனும் பணம் எடுத்தது உறுதியானது. இது தொடர்பாக உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் பணியடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். ஏற்கெனவே சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஒருவரும் கைதானவர்களின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். தற்போது ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் விற்றவர்களின் ஏடிஎம் கார்டிலிருந்து தனிப்படைக் காவலர்கள் பணம் எடுத்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு