Published:Updated:

`மனைவிக்குத் தொல்லை கொடுத்தார்; கொன்று புதைத்துவிட்டேன்!' -ஆந்திராவில் கொலையான சென்னை சமூக சேவகர்

சென்னையிலிருந்து ஆந்திராவுக்குச் சென்ற சமூகசேவகர், அங்கு கொலை செய்யப்பட்டு தோட்டத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட  கார்த்திகேயன்
கொலை செய்யப்பட்ட கார்த்திகேயன்

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர், லேபர் பள்ளி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). எலெக்ட்ரிக் வேலை செய்துவந்தார். இவரின் மனைவி தேவி. இவர், சென்னையில் உள்ள பல்கலைக்கழகத்தில் சூப்பர்வைஸராகப் பணியாற்றிவந்தார். இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள். இந்தநிலையில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி அன்று வீட்டைவிட்டு வெளியில் சென்ற கார்த்திகேயன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரைப் பல இடங்களில் உறவினர்கள் தேடினர்.

சமூக சேவகர் கார்த்திகேயன்
சமூக சேவகர் கார்த்திகேயன்

இதையடுத்து கார்த்திகேயனின் அம்மா அமராவதி, கடந்த 30-ம் தேதி சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் துணை கமிஷனர் பிரபாகர் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் தேவராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பரகத்துல்லா, சப்-இன்ஸ்பெக்டர் செல்வமணி மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். கார்த்திகேயனின் செல்போன் அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியில் சிக்னல் காட்டியது. மேலும், கார்த்திகேயன், ஒரே நம்பருக்குத் தொடர்ந்து பேசியதும் தெரியவந்தது.

அதனால். போலீஸார் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு கார்த்திகேயன் குறித்து விசாரித்தனர். முதலில் அந்த எண்ணில் பேசியவர் கார்த்திகேயன் யாரென்று கேட்டுள்ளார். அப்போது சங்கர் நகர் போலீஸார், கார்த்திகேயனைக் காணவில்லை. அவர் இந்த நம்பருக்குத்தான் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி பலதடவை பேசியுள்ளார் என்று கூறினர். இதையடுத்து, `கார்த்திகேயன், என் மனைவிக்குத் தொல்லை கொடுத்தார். அதனால் அவரைக் கொலை செய்து தோட்டத்தில் புதைத்துவிட்டேன்' என்று அந்த நபர் கூறினார். அதைக்கேட்டு சங்கர் நகர் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

மனைவியுடன்  கார்த்திகேயன்
மனைவியுடன் கார்த்திகேயன்

கார்த்திகேயன் கொலை செய்யப்பட்ட தகவல் அவரின் குடும்பத்தினருக்குத் தெரிந்ததும் அவர்கள் கதறி அழுதனர். கொலை நடந்த இடத்துக்கு சங்கர் நகர் போலீஸாரும் கார்த்திகேயனின் மனைவி மற்றும் குடும்பத்தினரும் சென்றனர். சிவக்குமார், மாதேஸ்வரி அடையாளம் காட்டிய இடத்தில் கார்த்திகேயனின் சடலத்தை போலீஸார் மீட்க உள்ளனர்.

இந்தநிலையில் போனில் பேசிய நபர் யாரென்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் சிவக்குமார் சித்தூர், அடதிபூதூர் என்று தெரியவந்தது. கார்த்திகேயனுக்கும் சிவக்குமாருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்று போலீஸார் விசாரித்தபோது பல தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``சிவக்குமாரின் சகோதரர் அருண், அனகாபுத்தூரில் கார்த்திகேயனின் வீட்டின் அருகில் குடியிருந்துவருகிறார். சிவக்குமார் கொத்தனார். அதனால் சில மாதங்களுக்கு முன், தன்னுடைய மனைவி மாதேஸ்வரியுடன் அனகாபுத்தூருக்கு வந்துள்ளார். அங்கு தங்கி வேலை பார்த்துள்ளார். அப்போதுதான் கார்த்திகேயனுடன் சிவக்குமாரின் குடும்பத்தினருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மாதேஸ்வரி
மாதேஸ்வரி

கார்த்திகேயன், எலெக்ட்ரிக் வேலையோடு சிறிய அளவில் ஃபைனான்ஸ் கொடுத்துவந்துள்ளார். அதோடு சமூக சேவையிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் அனகாபுத்தூரில் கார்த்திகேயன் பிரபலமானவராக இருந்தார். இந்தச் சூழ்நிலையில்தான் சிவக்குமாருக்கு 20,000 ரூபாயை கார்த்திகேயன் கொடுத்துள்ளார். அதற்கு சிவக்குமார் வட்டியும் கொடுக்கவில்லை. இந்தச் சமயத்தில்தான் அந்தப் பணத்தை வாங்க கார்த்திகேயன், ஆந்திராவுக்குச் சென்ற இடத்தில்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த இடம் ஆந்திரா என்பதால் ஆந்திர மாநில போலீஸார் கொலை வழக்கை விசாரிப்பார்கள்" என்றார்.

இதற்கிடையில், `கார்த்திகேயனை எதற்காக கொலை செய்தீர்கள்?' என்று சிவக்குமாரிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சிவக்குமாரின் மனைவி மாதேஸ்வரி குளிக்கும்போது அதை கார்த்திகேயன் வீடியோ எடுத்ததாகவும் பின்னர் அதைவைத்து மிரட்டி வந்ததாகவும் கூறியுள்ளார். இந்தத் தகவல் சிவக்குமாருக்குத் தெரிந்ததும் கார்த்திகேயனையும் மனைவி மாதேஸ்வரியையும் அவர் கண்டித்துள்ளார்.

சிவக்குமார்
சிவக்குமார்

ஆனால், கார்த்திகேயன் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் அவரை வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். சிவக்குமார் கூறுவதைப் போல கார்த்திகேயனின் செல்போனில் மாதேஸ்வரியின் வீடியோ உள்ளதா என்று விசாரித்துவருகிறோம். விசாரணை முடிவில்தான் கார்த்திகேயன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவரும்" என்றனர்.

இதுகுறித்து கார்த்திகேயனின் மனைவி தேவியிடம் பேசினோம். ``என் கணவர் சமூக சேவகர். அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் சிவக்குமார், மாதேஸ்வரி எப்படிப்பட்டவர்கள் என்பது எனக்குத் தெரியும். மாதேஸ்வரியின் குளியல் வீடியோ என் கணவரின் செல்போனில் இருப்பதாகச் சொல்வது பொய். கடனை வசூலிக்கச் சென்ற இடத்தில் அவரைக் கொலை செய்துவிட்டு அதை மறைக்க தவறான தகவல்களைச் சொல்லி எங்கள் குடும்பத்தை அசிங்கப்படுத்துகிறார்கள்" என்றார் கண்ணீருடன்