Published:Updated:

சென்னை: செல்போன் சிக்னல்; கார்கள்! - 3 பேர் சுட்டுக் கொலையில் மருமகள் சிக்கியது எப்படி?

மருமகள் ஜெயமாலா
மருமகள் ஜெயமாலா

சென்னை சௌகார்பேட்டையில் மாமனார், மாமியார், கணவர் என மூன்று பேரைக் சுட்டுக்கொலை செய்த வழக்கில் மருமகள் ஜெயமாலா, அவரின் சகோதரர் உட்பட மூன்று பேரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

சென்னை சௌகார்பேட்டை, விநாயக மேஸ்திரி தெருவில் வசித்துவந்தவர் தலில்சந்த் (74). ஃபைனான்ஸ் தொழில் செய்துவந்தார். இவரின் மனைவி புஷ்பா பாய் (68). இவர்களின் மகன் சித்தல்குமார் (40). இவர்கள் மூன்று பேரும் கடந்த 11-ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இது குறித்து தலில் சந்த்தின் மகள் பிங்கி, யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், பூக்கடை துணை கமிஷனர் மகேஷ்வரன் ஆகியோர் மேற்பார்வையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தலில்சந்த் குடும்பத்தினர்
தலில்சந்த் குடும்பத்தினர்

போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் புனேவைச் சேர்ந்த ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ் (32), கொல்கத்தாவைச் சேர்ந்த ரவீந்தரநாத் கர் (25), விஜய் உத்தம் கமல் (28) ஆகிய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கார் மற்றும் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். கைதான மூன்று பேரையும் போலீஸார், போலீஸ் காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தேடப்பட்ட சித்தல்குமாரின் மனைவி ஜெயமாலா, அவரின் இன்னொரு சகோதரர் விலாஷ், ராஜூ சிண்டே ஆகியோரை ஆக்ராவில் வைத்து போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

ஏற்கெனவே போலீஸ் காவலில் எடுக்கப்பட்டவர்களிடம் விசாரித்தபோது, ஜெயமாலாவுக்கு பாலியல்ரீதியான தொல்லை கொடுத்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. `அதனால்தான் குடும்பத்தோடு மூன்று பேரையும் கொலை செய்தோம்’ என அவர்கள் தெரிவித்ததாக போலீஸார் கூறினர். தற்போது ஜெயமாலா போலீஸாரிடம் சிக்கியிருப்பதால், அவரிடம் அது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. ஜெயமாலா அளிக்கும் தகவல்களைப் பொறுத்தே மூன்று பேர் கொலை செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீஸார் எதிர்பார்க்கின்றனர்.

கொலை செய்யப்பட்டவர்கள்
கொலை செய்யப்பட்டவர்கள்

இது குறித்து தனிப்படை போலீஸாரிடம் கேட்டபோது, ``இந்தக் கொலையில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, லைசென்ஸ் பெற்றது. அது, முன்னாள் ராணுவ வீரர் ஒருவருக்குச் சொந்தமானது என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அதனால், அவர் குறித்த விவரங்களைச் சேகரித்துவருகிறோம். அந்த ராணுவ வீரரும், ஜெயமாலாவின் சகோதரரும் நண்பர்கள். அதன் அடிப்படையில்தான் துப்பாக்கி இந்தக் கும்பலுக்கு கிடைத்திருக்கிறது. ஜெயமாலாவின் சகோதரர் மீது சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அது தொடர்பாகவும் விசாரணை நடத்திவருகிறோம். ஜெயமாலா உட்பட மூன்று பேரை தமிழகத்துக்கு அழைத்து வர ஏற்பாடுகள் நடந்துவருகின்றன" என்றனர்.

சென்னை: 3 பேர் சுட்டுக் கொலையில் மருமகள் எங்கே? -  புனேவில் நடந்த கார் சேஸிங்

ஜெயமாலாவும் அவரின் சகோதரர் விலாஷ் உட்பட மூன்று பேர் போலீஸ் பிடியிலிருந்து புத்திச்சாலித்தனமாகத் தப்பிய தகவல் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``சௌகார்பேட்டையில் மூன்று பேரைக் சுட்டுக் கொலை செய்துவிட்டு அனைவரும் காஞ்சிபுரத்துக்கு காரில் சென்றிருக்கின்றனர். பின்னர்தான் இரண்டு கார்களில் அவர்கள் தப்பியிருக்கிறார்கள். ஆனால், தனிப்படை போலீஸார் ஒரே ஒரு காரை மட்டுமே பின்தொடர்ந்து சென்று கைலாஷ் உட்பட மூன்று பேரைக் கைதுசெய்திருக்கின்றனர். அதனால், ஜெயமாலா, அவரின் சகோதரர் விலாஷ் ஆகியோர் அடிக்கடி காரை மாற்றி வட மாநிலங்களில் சுற்றிவந்திருக்கின்றனர்.

சடலமாக புஷ்பா பாய்
சடலமாக புஷ்பா பாய்
சென்னை: 3 பேர் சுட்டுக் கொலையில் மருமகள் எங்கே? -  புனேவில் நடந்த கார் சேஸிங்

இந்தச் சமயத்தில்தான் தனிப்படை போலீஸாருக்கு ஒரு ரகசியத் தகவல் கிடைத்தது. ஜெயமாலாவுக்கும் அவரின் சகோதரருக்கும் மகராஷ்டிராவைச் சேர்ந்த விலாஷின் நண்பர் ஒருவர் உதவி செய்த தகவல் கிடைத்ததும், அவரின் செல்போன் நம்பரை சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் கண்காணித்தோம். அப்போது புதுப் புது செல்போன் நம்பர்களிலிருந்து விலாஷ், அந்த நண்பருடன் பேசிய தகவல் கிடைத்தது. மேலும், அந்தச் செல்போன் நம்பர் மகராஷ்டிரா, குஜராத் ஆகிய இடங்களைக் காட்டியது. அங்கு சென்றபோது ஜெயமாலா, அவரின் சகோதரர் விலாஷ் ஆகியோர் தப்பிச் சென்றுவிட்டனர். இந்தச் சமயத்தில்தான் ஜெயமாலா, விலாஷின் புதிய செல்போன் நம்பரின் சிக்னல் டெல்லி ஆக்ரா பகுதியைக் காட்டியது. உடனடியாக வாட்ஸ்அப் மூலம் டெல்லி போலீஸாருக்கு தகவல் கொடுத்து, அவர்களைச் சுற்றி வளைத்தோம். வழக்கமாக போலீஸார்தான் குற்றவாளிகளை செல்போன் நம்பர் சிக்னல் மூலம் கண்டறிவார்கள். ஆனால், ஜெயமாலாவின் சகோதரர் விலாஷ், வழக்கறிஞர் என்பதால் சென்னை தனிப்படை போலீஸாரின் செல்போன் நம்பர்களின் சிக்னல் மூலம் தப்பி வந்திருக்கிறார். இருப்பினும் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவர்களைக் கைதுசெய்திருக்கிறோம். அவர்களிடமிருந்து 10 சிம்கார்டுகள், ஐந்து செல்போன்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு