Published:Updated:

`என் வீடியோ வேணும்னா, முதலில் நீ அனுப்பு!' -இன்ஸ்டாகிராம் நட்பால் சிக்கலில் மாட்டிய சென்னை மாணவர்

சென்னை இன்ஜினீயர் மாணவனை ஏமாற்றிய சேட்டிங்
சென்னை இன்ஜினீயர் மாணவனை ஏமாற்றிய சேட்டிங்

``ஹலோ, நான் ரியா பேசுகிறேன், உன்னுடைய வீடியோவை எனக்கு அனுப்பினால் நான் என்னுடைய வீடியோவை உனக்கு அனுப்புகிறேன்" என்றதும் தன் வீடியோவை அனுப்பி சிக்கலில் மாட்டியிருக்கிறார் சென்னை மாணவர் ஒருவர்.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த இன்ஜினீயரிங் படிக்கும் மாணவனுக்கு வயது 20. இவரின் பெற்றோர், தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ளனர். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் அதிக நேரத்தை மாணவன் செலவழிப்பதுண்டு. இந்தச் சமயத்தில் ரியா என்ற பெயரில் ஒரு பெண்ணின் போட்டோவோடு மும்பை என்ற முகவரியில் இன்ஸ்டாவில் ஓர் அக்கவுன்ட்டை மாணவன் பார்த்தார். அந்த அக்கவுன்டில் ரியா, தன்னை மியூஸீசியன் என்று குறிப்பிட்டிருந்தார்.

ரியாவின் இன்ஸ்டா பக்கம்
ரியாவின் இன்ஸ்டா பக்கம்
``3 சிம்கார்டுகள்; ஒரே ஒரு செல்போன்!"- விடிய விடிய பெண் குரலில் பேசிய நெல்லை இன்ஜினீயர்

ரியாவுடன் மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது. இருவரும் சேட்டிங் செய்ய ஆரம்பித்தனர். இருவரின் பொதுவான தகவல்களையும் செல்போன் நம்பர்களையும் பகிர்ந்துகொண்டனர். அடுத்த ஒரு சில நிமிடங்களில் மாணவனின் செல்போனில் ரியா தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, `ஹலோ நான் ரியா... நீ எப்படியிருக்க' என்று தொடங்கிய உரையாடல் நீடித்தது. மாணவனும் ரியாவும் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

அப்போது ரியா, `உன்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளதாக' மாணவனிடம் கூறினார். அதைக்கேட்ட மாணவனும், `எனக்கும் உன்னைப் பார்க்க வேண்டும்' என்று தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார். அதன்பிறகு இருவரும் தங்களின் போட்டோக்களைப் பகிர்ந்துகொண்டனர். மாணவனின் போட்டோவைப் பார்த்த ரியா, `நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். அதனால் உன்னை எனக்குப் பிடித்துவிட்டது' என்று கூறியுள்ளார். அதற்கு மாணவனும், `எனக்கும் உன்னைப் பிடித்திருக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

மாணவன்
மாணவன்

இதையடுத்து பழகிய ஒரு மணிநேரத்துக்குள் இருவரும் நெருக்கமாகியுள்ளனர். அதைப் பயன்படுத்திக் கொண்ட ரியா, `டேய், உன்னுடைய போட்டோ, வீடியோவை எனக்கு அனுப்பு' என்று கூறியுள்ளார். அதற்கு சம்மதித்த மாணவன், `நீயும் உன்னுடைய போட்டோ, வீடியோவை அனுப்பு' எனக் கூறியுள்ளார். `முதலில் நீ அனுப்பு, அதன்பிறகு நான் அனுப்புகிறேன்' என்று ரியா சொல்ல... அடுத்த சில நிமிடங்களில் மாணவன், தன்னுடைய வீடியோவை முகம் தெரியும்படி ரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ரியாவின் வீடியோவுக்காக மாணவனும் ஆவலோடு காத்திருந்துள்ளார்.

மாணவனின் வீடியோ ரியாவின் செல்போனுக்குச் சென்றதும் அவரின் பேச்சு மாறத் தொடங்கியுள்ளது. `உன்னுடைய இந்த வீடியோவை சமூகவலைதளத்திலும் உன் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பட்டுமா?' என்று ரியா கேட்டுள்ளார். அதைக் கேட்டு மாணவன் அதிர்ச்சியடைந்துள்ளார். அடுத்து ரியா, `உன்னுடைய வீடியோவை வெளியிடாமலிருக்க வேண்டும் என்றால் நான் சொல்லும் அக்கவுன்டுக்கு 60,000 ரூபாய் உடனே அனுப்பு' என்று கூறியுள்ளார். ரியாவின் மிரட்டலையடுத்து வேறுவழியின்றி மாணவனும் 59,000 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார்.

`பெண் குரலில் வலை; வெளிநாட்டு கஸ்டமர்கள்!' -சென்னை போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நெல்லை இன்ஜினீயர்
இன்ஸ்ட்ராகிராம்
இன்ஸ்ட்ராகிராம்

அதன்பிறகும் ரியாவின் மிரட்டல் தொடர்ந்துள்ளது. பொறியில் சிக்கிய எலியாக மாணவன் தவித்துள்ளார். ஒருகட்டத்தில் ரியாவின் தொல்லை அதிகரிக்கவே, பெற்றோரிடம் நடந்த சம்பவத்தைகூறியுள்ளார். உடனே மாணவனை அழைத்துக்கொண்டு பெற்றோர், அயனாவரம் காவல் நிலையத்துக்குச் சென்றனர். இன்ஸ்பெக்டர் நடராஜனிடம் விவரத்தைக் கூறி, ரியாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட், பணம் அனுப்பிய வங்கி அக்கவுன்ட், ரியாவும் மாணவனும் சேட்டிங் செய்த மெசேஜ் ஆகியவற்றைக் கொடுத்தனர்.

உடனடியாக ரியாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் குறித்து ஆய்வு செய்ய சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியை அயனாவரம் போலீஸார் நாடியுள்ளனர். சைபர் க்ரைம் போலீஸார் ரியாவின் அக்கவுன்ட்டை ஆய்வு செய்தபோது அது போலி என்பதைக் கண்டறிந்துள்ளனர். இருப்பினும் ஐபி முகவரியை வைத்து ரியா குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர். பழகிய ஒரு மணிநேரத்துக்குள் 59,000 ரூபாயை இழந்ததோடு அவமானத்தையும் சந்தித்துள்ளார் சென்னை இன்ஜினீயரிங் மாணவன்.

`உன் பெயர் இனிமேல் பிரியா; வாட்ஸ்அப் காலுக்கு ரூ.1,000' -`பெண் குரல்' இன்ஜினீயரின் வாக்குமூலம்

இதுகுறித்து சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், ``இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தைச் சிலர் தவறாகப் பயன்படுத்தி மோசடி வேலையில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னை மயிலாப்பூர் போலீஸார், கடந்த சில தினங்களுக்கு முன் நெல்லை மாவட்டம், பணகுடியைச் சேர்ந்த வளன் ராஜ்குமார் ரீகன் என்பவரைக் கைது செய்தனர். இவர், பெண் குரலில் பேசி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி பணத்தைப் பறித்துள்ளார். தற்போது சென்னையைச் சேர்ந்த இன்ஜினீயரிங் மாணவனிடம் ரியா என்ற பெயரில் அறிமுகமான நபர், 59,000 ரூபாயை ஏமாற்றியுள்ளார். மாணவனிடம் ரியா என்ற பெயரில் அறிமுகமானவர் யாரென்று விசாரித்துவருகிறோம். அறிமுகம் இல்லாதவர்களிடமும், சமூகவலைதளத்தில் தங்களின் தனிப்பட்ட போட்டோஸ், வீடியோக்களை யாரும் பகிர வேண்டாம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு