சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் வசிப்பவர் அமுதவல்லி. கணவரை இழந்த இவர், செங்குன்றத்திலுள்ள காய்கறிக் கடையில் வேலை செய்துவருகிறார். இவரின் மகன் லோகேஸ்வரன் (12). இவர் சென்னையிலுள்ள உறவினர் வீட்டில் தங்கி 7-ம் வகுப்பு படித்துவந்தான். கொரோனா காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி கற்றுவந்தான்.

மேலும் பள்ளி விடுமுறை என்பதால் செங்குன்றத்துக்கு லோகேஸ்வரன் வந்திருந்தான். ஆன்லைன் வகுப்புக்காக வாங்கிக் கொடுத்த செல்போனில் லோகேஸ்வரன், படம் பார்த்ததாகத் தெரிகிறது. அதை கவனித்த அமுதவல்லி மகனைக் கண்டித்திருக்கிறார். அதன் பிறகு அமுதவல்லி வழக்கம்போல கடைக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த லோகேஸ்வரன், அம்மா திட்டியதால் மனமுடைந்து காணப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதனால் வீட்டிலிருந்த நைலான் கயிற்றால் தூக்குப் போட்டு லோகேஸ்வரன் தற்கொலை செய்துகொண்டான். மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்த அமுதவல்லி, மகன் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அமுதவல்லி கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர்.

இது குறித்து செங்குன்றம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் லோகேஸ்வரனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.