Published:Updated:

சென்னை: இல்லற வாழ்க்கைக்கு இடையூறு! - தாயின் 2-வது கணவரால் விபரீத முடிவை எடுத்த மாணவி

மாணவி தற்கொலை
மாணவி தற்கொலை ( Representational Image )

சென்னையில் தாயின் இரண்டாவது கணவரின் அவதூறான பேச்சால் விபரீத முடிவை மாணவி எடுத்திருக்கிறார். இந்த வழக்கில் தாயின் புகார் அடிப்படையில் இரண்டாவது கணவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். நான் கேட்டரிங் வேலை செய்துவருகிறேன். கடந்த 2003-ம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. 2004-ல் மகனும் 2007-ல் தீபிகா என்ற மகளும் பிறந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக 2007-ம் ஆண்டு எங்களைப் பிரிந்து வேறு ஒரு பெண்ணை என் கணவர் திருமணம் செய்துகொண்டார். அப்போது அவர் இரண்டு குழந்தைகளையும் அழைத்துச் சென்றுவிட்டார்.

திருமணம்
திருமணம்
Representational Image

பின்னர் பெரியவர்கள் மூலம் பேசி தீபிகாவை மட்டும் வீட்டுக்கு அழைத்து வந்தேன். நான் விருகம்பாக்கத்தில் தங்கி கேட்டரிங் வேலை செய்துவந்தேன். அப்போது பிரபாகரன் என்பவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. 2014-ம் ஆண்டு முதல் நானும் பிரபாகரனும் கணவன் மனைவியாக வாழ்ந்துவருகிறோம். தற்போது என்னுடன் வாழ்ந்துவரும் பிரபாகரன், கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபிகாவை `டீ போட்டுக் கொடு, சமையல் செய்து வை, வீட்டில் இருந்தா இந்த வேலையை செய்துவெக்க மாட்டீயா...’ என்று திட்டிவந்தார். மேலும் அவதூறாகவும் பேசிவந்தார். அதனால் தீபிகா மனஉளைச்சலில் இருந்துவந்தார்

இந்தநிலையில் கடந்த 8.5.2021-ல் நான் வேலைக்கு சென்றிருந்தபோது தீபிகாவிடம் டீ போட்டுத் தரும்படி பிரபாகரன் கேட்டிருக்கிறார். அதற்கு தீபிகா, டீ போட்டுக் கொடுக்க முடியாது என கூறியிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், தீபிகாவை அடித்ததோடு, ஆபாசமாகப் பேசிவிட்டு வெளியில் சென்றிருக்கிறார். வீட்டுக்கு வந்த பிறகு தீபிகா என்னிடம் சொல்லி அழுதார். உடனே நான் விருகம்பாக்கத்திலுள்ள கணவர் வீட்டுக்குச் சென்று கண்டித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை

பின்னர் நான் தீபிகாவை வீட்டில் பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு நண்பரின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்றுவிட்டேன். விழா முடிந்து நள்ளிரவில் வீட்டுக்கு வந்து மகளை அழைத்தேன். பதில் தெரிவிக்காததால் ஸ்கிரீனைத் திறந்து பார்த்தபோது ஹாலில் தீபிகா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியோடு தீபிகாவை இறக்கிப் பார்த்தபோது மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார். என் மகள் மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்திருக்கிறார். அதற்குக் காரணமன என் கணவர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 306-ன் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து அரும்பாக்கம் போலீஸார் கூறுகையில், ``முதல் கணவரைப் பிரிந்து வாழ்ந்த சரஸ்வதி, இரண்டாவதாக பிரபாகரன் என்பவருடன் வாழ்ந்துவருகிறார். முதல் கணவருக்குப் பிறந்த தீபிகாவை ஆபாசமாக பிரபாகரன் பேசிவந்திருக்கிறார். அதனால் தீபிகா மனஉளைச்சல் அடைந்திருக்கிறார். இவர் 10-ம் வகுப்பு படித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்திருக்கிறார்.

கைது
கைது
மும்பை: ஆண் நண்பர்களுடன் செல்ஃபி; கணவன் சந்தேகத்தால் மனைவி ரயில் முன்பாய்ந்து தற்கொலை

சரஸ்வதி வீட்டில் இல்லாத சமயத்தில் பிரபாகரன், தீபிகாவை அடித்திருக்கிறார். அப்போது `உன்னால் (தீபிகாவைப் பார்த்து) என் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. எங்களுடைய இல்லற வாழ்க்கைக்கு நீ இடையூறாக இருக்கிறாய்’ என்று திட்டியிருக்கிறார். அதனால்தான் தீபிகா இந்த விபரீத முடிவை எடுத்ததாக சரஸ்வதி அளித்த புகாரின் அடிப்படையில் பிரபாகரனைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு