Published:Updated:

``பிரியாணி, ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்து மாணவன் கடத்தல்!" - போதையில் தூங்கியதால் சிக்கிய டிரைவர்

டிரைவர் லோகேஷ்வரன்
டிரைவர் லோகேஷ்வரன்

டியூசனுக்குச் சென்ற இடத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் டிரைவர் லோகேஷ்வரனை போலீஸார் கைது செய்தனர். ஆனால், அந்த டிரைவரோ நான் கடத்தவில்லை என்று கூறியுள்ளார்.

சென்னை வில்லிவாக்கம், ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் வினோத் குமார் (45). ரயில்வே ஊழியர். இவரின் மகன், சூரப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளியிலிருந்து கொளத்தூர், அனுசுயா நகரில் டியூசன் படிக்க மாணவன் சென்றான். பின்னர் அவன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவனின் பெற்றோர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தினார்.

representational image
representational image

இந்தநிலையில், அம்பத்தூர் சண்முகபுரம் பாரதிதாசன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து சிறுவன் ஓடிவந்தான். அவன், அந்தப்பகுதியில் இருந்த ஆட்டோ டிரைவர்களிடம் தன்னை ஒருவர் கடத்தி வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்த தகவலைப் பதற்றத்துடன் கூறினான்.

உடனே ஆட்டோ டிரைவர்கள் அந்தச் சிறுவனை அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அம்பத்தூர் போலீஸார் விசாரணை நடத்தியபோது அந்தச் சிறுவன்தான் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமாரின் மகன் எனத் தெரியவந்தது. இதையடுத்து அந்தச் சிறுவனை அம்பத்தூர் போலீஸார் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, சிறுவனிடம் ராஜமங்கலம் போலீஸார் விசாரித்தபோது டியூசனுக்குச் சென்ற இடத்தில் காரில் வந்த அங்கிள் ஒருவர், என்னை வலுக்கட்டாயமாகக் கடத்தி வீட்டுக்குள் அடைத்துவைத்திருந்தார். போதையில் அந்த நபர் கதவைப் பூட்டி தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் நான் தப்பி ஓடிவிட்டேன். என்னைக் கடத்திய அந்த அங்கிள் 10 லட்சம் ரூபாயை என் பெற்றோரிடம் கேட்க முடிவு செய்திருந்தார் என்று கூறினார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், சிறுவன் கூறிய முகவரிக்குச் சென்றனர். அங்கு போதையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தவரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர்.

`என் அன்பைப் புரியவைக்க இப்படிச் செய்துவிட்டேன்!’- கடத்தல் வழக்கில் சிக்கிய சென்னை மாணவர்

விசாரணையில் அந்த நபரின் பெயர் லோகேஷ்வரன் என்றும் டிரைவராக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. மேலும் அவர்தான் காரில் மாணவனைக் கடத்தியதும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து லோகேஷ்வரனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது கோவையில் ஒரு கொலை வழக்கு உட்பட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

போலீஸாரிடம் லோகேஷ்வரன், ``நான் அந்தச் சிறுவனைக் கடத்தவில்லை. காரில் வருகிறாயா என்றுதான் கேட்டேன். அதற்கு அந்தச் சிறுவன் சம்மதித்தான். எனக்கு குழந்தைகள் என்றால் ரொம்பப் பிடிக்கும்.

அதனால் அவனை அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றேன். அங்கு பிரியாணி, ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்தேன். இரவு நேரமானதால் அவனை என் வீட்டுக்கு அழைத்துச் சென்று தூங்க வைத்தேன். போதையில் நானும் தூங்கிவிட்டேன்" என்று கூறியுள்ளார். உண்மை நிலவரம் குறித்து தற்போது போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பின் செல்ல