Published:Updated:

கத்தியை சுழற்றிய `ரூட் தல' மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!

எஸ்.மகேஷ்

சென்னை அரும்பாக்கத்தில் ரூட் தல மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் சுதீர், மதன் ஆகியோர், கைமுறிந்த நிலையில் காவல் நிலையத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ரூட் தல மாணவர்கள்
ரூட் தல மாணவர்கள்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபலமான கடையின் அருகே பெரம்பூரிலிருந்து திருவேற்காடு பகுதிக்குச் செல்லும் அரசு பஸ் (வழித்தடம் எண் 29 இ) பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது, சிலர் அந்த பஸ்ஸுக்குள் ஏறினர். அவர்களின் கையிலிருந்து பட்டா கத்தி, அரிவாள், டியூப் லைட், கிரிக்கெட் மட்டை ஆகியவற்றைக் கொண்டு பஸ்ஸுக்குள் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களில் சிலரை சரமாரியாக தாக்கத் தொடங்கினர். அதைப்பார்த்த பயணிகள், அலறியடித்துக்கொண்டு பஸ்ஸை விட்டு கீழே இறங்கினர்.

ரூட் தல மோதல்
ரூட் தல மோதல்

உயிரை காப்பாற்றிக்கொள்ள பஸ்ஸுக்குள் இருந்த மாணவர்களும் கீழே இறங்கி சாலையில் ஓட்டம்பிடித்தனர். இருப்பினும் அவர்களை சிலர் விடாமல் துரத்தினர். பட்டப்பகலில் நடந்த இந்தப் பயங்கர சம்பவம்குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர். காயமடைந்த மாணவர்களை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம்குறித்து அரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் விசாரணை நடத்தினார். அப்போது, மாணவர்களைத் தாக்கியது மாணவர்கள் என்றும் ரூட் தல பிரச்னை காரணமாக இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்ததும் தெரியவந்தது. இதனால் மாணவர்களைத் தாக்கிய ரூட் தல மாணவர்கள் குறித்து விசாரணை நடந்தது. அதில், மாணவர்கள் ரவிவர்மன், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதீர், மதன் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். போலீஸார், சுதீரையும் மதனையும் பிடிக்க முயன்றபோது, அவர்கள் இருவரும் கீழே தவறி விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டது.

ரூட் தல மோதல்
ரூட் தல மோதல்

இதையடுத்து, இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. கை முறிவுக்கு கட்டுபோடப்பட்டுள்ளது. அதன்பிறகு, தாக்குதல் நடத்திய மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச் சூழ்நிலையில், அரை நிர்வாண கோலத்தில் மாணவர் ஒருவர் குறிப்பிட்ட பஸ் ரூட்டுக்கு ஜே என்று கூறும் வீடியோ வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையும் கல்லூரி நிர்வாகமும், அந்த வீடியோ வெளியிட்டது யார் என்று விசாரணை நடத்திவருகின்றனர்.

அரும்பாக்கத்தில் நடந்த பஸ் ரூட் தல மோதல் சம்பவத்தையடுத்து, காவல்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுடன் ஆலோசனை நடத்தினர். மேலும், கல்லூரி நிர்வாகத்துடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இனிமேல் ரூட் தல மோதலில் ஈடுபடும் மாணவர்கள்மீது குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை இணை கமிஷனர் சுதாகர் எச்சரித்துள்ளார்.

ரூட் தல மோதல்
ரூட் தல மோதல்

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``கல்லூரிகளில் ரூட் தல பிரச்னை தொடர்கதைபோல நடந்துவருகிறது. சென்னையில் உள்ள குறிப்பிட்ட சில கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், புறநகர் ரயில், அரசு பஸ்களில் வருகின்றனர். அவர்கள் வரும் ரயில், பஸ்களில் ரூட் தல என்று ஒருவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த ரூட் தல பதவிக்கு மற்ற கல்லூரிகளைச் சேர்ந்தவர்களும் ஒரே கல்லூரிகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிடுகின்றனர். ரூட் தல பதவியைப் பெற கெத்து காட்ட புத்தகங்கள் பிடிக்கின்ற கைகளில் கத்தியைப் பிடிக்கின்றனர்.

சென்ட்ரலிலிருந்து திருவள்ளூர் செல்லும் புறநகர் ரயிலில் பயணித்த மாணவர்கள், பிளாட்பாரத்தில் கத்தியை உரசிச் செல்லும் வீடியோ வெளியானது. இதையடுத்து, கத்தியை உரசிய மாணவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூட் தல மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் எதிர்கால நலன்கருதி இதுவரை போலீஸார் அமைதியாக இருந்துவந்தனர். அரும்பாக்கம் சம்பவத்துக்குப்பிறகு, ரூட் தல மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதனால், கல்லூரிகளின் எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் பணியாற்றம் காவல்துறை அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர்.

இனிமேல் ரூட் தல மோதலில் ஈடுபடும் மாணவர்கள்மீது குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும்
இணை கமிஷனர் சுதாகர்

சென்னையில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் முழு விவரங்களைச் சேகரித்துள்ளோம். பஸ், ரயில்களில் வருவோர்களின் விவரங்களைப் பெற்றுள்ளோம். 'ரூட் தல'யாக செயல்படும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இனிமேல் நடந்துகொள்ளும் ரூட் தல மாணவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாணவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். எனவே, இதற்கு மேல் ரூட் தல மோதல் சம்பவம் சென்னையில் ஏற்படாது என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

அரும்பாக்கம் ரூட் தல மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் சுதீர், மதன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில், சுதீர் என்ற மாணவன், 29 இ என்ற பஸ்சின் ரூட் தலயாக இருந்துள்ளார். தற்போது, சுதீரும் மதனும் கை முறிந்தநிலையில் பரிதாபமாக காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம், 'இனிமேல் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோம்' என்று உறுதிமொழியை போலீஸார் பெற்றுள்ளனர். மாணவன் சுதீர், மதன் மீது பொது சொத்தை சேதப்படுத்துதல், கொலை முயற்சி, கொலை மிரட்டல், பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் என 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரூட் தல பதவியைப் பெற கெத்து காட்ட, புத்தகங்கள் பிடிக்கின்ற கைகளில் கத்தியைப் பிடிக்கின்றனர்.
போலீஸ்

ரூட் தல பதவிக்காகக் கெத்துக்காட்ட, அரும்பாக்கத்தில் அரசு பஸ்ஸில் பயணித்த மாணவர்களை சிலர் பயங்கரமாகத் தாக்கினர். கத்தியைப் பிடித்த அந்த மாணவர்களில் சுதீர், மதனின் கைகள் முறிந்துள்ளன. தற்போது, அவர்கள் சாப்பாடு சாப்பிடக்கூட அடுத்தவர்களின் தயவை எதிர்பார்க்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கை முறிவுக்குக் காரணம், தவறி விழுந்ததே என்று காவல் துறை தரப்பு கூறுகிறது. ஆனால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை சட்டத்தைத் தன் கையில் எடுத்து இதுபோன்ற கை முறிவுகளுக்குக் காரணமாக இருப்பதும் கண்டிக்கப்பட வேண்டிய வன்முறைதான் என்று சமூக ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கருத்துகளை வெளியிட்டு வருவதும் கவனிக்கத்தக்கது.