Published:Updated:

`கேங்ஸ்டர் கேர்ள்ஸ்' வாட்ஸ்அப் குரூப்!- மாயமான 4 சென்னை மாணவிகளை பெங்களூருவில் மீட்ட போலீஸ்

சென்னை ரயில் நிலையம்
சென்னை ரயில் நிலையம் ( Representational image )

சென்னை ஆவடியிலிருந்து பெங்களூருக்கு ரயிலில் சென்ற 4 பள்ளி மாணவிகளை போலீஸார் மீட்டுள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சென்னை ஆவடியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளைக் காணவில்லை என ஆவடி காவல் நிலையத்தில் கடந்த 20-ம் தேதி புகார் கொடுக்கப்பட்டது. ஒரே நேரத்தில் பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற மாணவிகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் சத்யநாராயணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். மாணவிகளின் பெற்றோர்களிடமும் பள்ளியிலும் மாணவிகளின் தோழிகளிடமும் போலீஸார் விசாரித்தனர்.

ரயில்
ரயில்

விசாரணையில் மாணவிகள் குறித்த தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``ஆவடியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளில் 3 பேர் ஆவடி பகுதியைச் சேர்ந்தவர்கள். ஒரே ஒரு மாணவி பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் 4 பேரும் நெருங்கிய தோழிகள். இந்த மாணவிகள் `கேங்ஸ்டர் கேர்ள்ஸ்' என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றில் உள்ளனர். அதில் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். இந்தச் சமயத்தில் பள்ளியிலும் வீட்டிலும் 4 மாணவிகளைச் சரியாகப் படிக்கவில்லை என்று கண்டித்துள்ளனர். அதனால், கடந்த 20ம் தேதி காலையில் பள்ளிக்குச் செல்வதாக வீட்டில் கூறியவிட்டுச் சென்றவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை. மாணவிகள் குடியிருக்கும் பகுதி, பள்ளி அமைந்துள்ள இடம் ஆகியவற்றில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

மாயமான மாணவிகளை பத்திரமாக மீட்க ஒவ்வொருவரின் புகைப்படங்களை காவல் நிலையங்களுக்கு அனுப்பி விசாரித்தோம். இந்தச் சமயத்தில் மாயமான மாணவி ஒருவர், தன்னுடைய செல்போனை எடுத்துச் சென்றிருக்கும் தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த செல்போன் சிக்னலை ஆய்வு செய்தோம். அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் சிக்னலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் அந்த செல்போன் நம்பரைத் தொடர்ந்து கண்காணித்துவந்தோம். அப்போது 21ம் தேதி பிற்பகலில் மாணவியின் செல்போன் ஆன் செய்யப்பட்டது. உடனே அந்த செல்போன் சிக்னலை நாங்கள் ஆய்வு செய்தபோது பெங்களூரு ரயில் நிலையத்தைக் காட்டியது.

பெங்களூரு ரயில் நிலையம்
பெங்களூரு ரயில் நிலையம்

உடனடியாக அந்த செல்போன் நம்பருக்குத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது 4 மாணவிகளும் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருக்கும் தகவல் தெரியவந்தது. அதனால், பெங்களூரு காவல் துறையைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தோம். 4 மாணவிகளையும் பெங்களுரு காவல்துறையினர் மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்தத் தகவல் கிடைத்த பிறகே மாணவிகளின் பெற்றோர் நிம்மதியடைந்தனர். இதையடுத்து மாணவிகளை பெங்களூருவிலிருந்து சென்னை அழைத்துவந்தோம். அவர்களிடம் விசாரித்தபோது சில தகவல்களைத் தெரிவித்தனர். தங்களைக் கண்டித்த பெற்றோர்களைப் பயமுறுத்ததான் பெங்களூரு சென்றதாகக் கூறினர். அதன்பிறகு 4 மாணவிகளுக்கும் கவுன்சலிங் அளித்துள்ளோம்" என்றார்.

பின் செல்ல