Published:Updated:

`உடல் முழுவதும் டாட்டூ; மிஸ்ஸான செல்போன்'- பிங்கி கொலையில் துப்பு துலங்கியது எப்படி?

எஸ்.மகேஷ்

சென்னை அண்ணாநகரில் பெண் தொழிலபதிரும் டாட்டூ ஆர்டிஸ்ட்டுமான பிங்கி, குளியலறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்தக் கொலை வழக்கு துப்பு துலங்க செல்போனும் சிசிடிவி கேமராவும் முக்கிய காரணமாக இருந்துள்ளது.

பிங்கி
பிங்கி

சென்னை அண்ணாநகர், ஹெச் பிளாக், 18-வது தெருவில் உள்ள பங்களா டைப் வீட்டில் குடியிருந்துவந்தவர் பிங்கி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர், தொழிலதிபர், டாட்டூ ஆர்டிஸ்ட். இவர், குளியலறையில் இறந்து கிடப்பதாக திருமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. உதவி கமிஷனர் சிவக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ், பாண்டி, தலைமைக் காவலர் ஜோசப், கண்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீஸார் பிங்கியின் சடலத்தைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

பிங்கி
பிங்கி

கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இரண்டு வாலிபர்கள் பிங்கியின் வீட்டிலிருந்து வெளியில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவர்களைப் பிடித்த போலீஸார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் பிங்கியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது முக்கிய தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. செல்போன் மற்றும் சிசிடிவி கேமரா உதவியால் பிங்கியின் கொலையை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிங்கிக்குத் திருமணமாகிவிட்டது. கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பிங்கி, இந்த வீட்டுக்குக் குடிவந்துள்ளார். இவர், வீட்டிலேயே வசதி படைத்த ஆண்கள், பெண்கள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு டாட்டூ வரைந்து பணம் சம்பாதித்துவந்துள்ளார். அதோடு வடமாநிலப் பெண்கள் அணியும் சேலைகளை மொத்தமாக வாங்கி விற்று வந்துள்ளார்.

பிங்கி குடியிருந்த வீடு
பிங்கி குடியிருந்த வீடு

இந்தச் சமயத்தில் ஒடிசாவைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவருடன் பிங்கிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா, ஹோட்டலில் வேலை பார்த்துவந்துள்ளார். கிருஷ்ணாவும் பிங்கியும் ஒரே வீட்டில் கடந்த 6 மாதங்களாகத் தங்கியிருந்தனர். பிங்கியின் அனைத்து நடவடிக்கைகளும் கிருஷ்ணாவுக்குத் தெரியும். வீட்டுக்கு வாடிக்கையாளர்கள் வந்துவிட்டால் கிருஷ்ணா வெளியில் சென்றுவிடுவது வழக்கம். சம்பவத்தன்று வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வந்ததும் கிருஷ்ணா வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிட்டார். பிறகு அவர் வீட்டுக்கு வந்தபோதுதான் பிங்கி, குளியலறையில் இறந்துகிடந்துள்ளார். உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்த கிருஷ்ணா மீது முதலில் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும் அவரிடம் விசாரித்தபோது பிங்கி கொலைக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது.

குளியலறையில் பெண் தொழிலதிபர் கொலை - சிசிடிவியில் சிக்கிய 2 பேர்!

பிங்கியின் வீட்டுக்கு வந்த வடமாநில வாலிபரின் பெயர் விகாஷ் சர்மா. இவர், மாதவரத்தில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் பணியாற்றுகிறார். பிங்கிக்கும் விகாஷ் சர்மாவுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இருவரும் சேர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சம்பவத்தன்று பிங்கியின் வீட்டிற்கு விகாஷ் சர்மா வந்துள்ளார். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். இந்தச் சமயத்தில்தான் பிங்கியுடன் இருந்துவிட்டு விகாஷ் சர்மா குறைந்த பணத்தைக் கொடுத்துள்ளார். இதனால் பிங்கிக்கும் விகாஷ் சர்மாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விகாஷ் சர்மா, பிங்கியைத் தள்ளிவிட்டுள்ளார்.

டாட்டூ வரைவதில் பிங்கி கைதேர்ந்தவர். தத்ரூபமாக டாட்டூ வரைவார் என்பதால் அவருக்கு பணக்கார வாடிக்கையாளர்கள் பலர் இருந்தனர்.

நிலைதடுமாறிய பிங்கி, வாஷ்பேஷனில் மோதி விழுந்துள்ளார். அப்போது பிங்கியின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. உடனே போலீஸிடம் `உன்னைப் பிடித்துக் கொடுத்துவிடுவேன்' என்று விகாஷ் சர்மாவை பிங்கி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விகாஷ்சர்மா, `இனிமேலும் பிங்கி உயிரோடு இருந்தால் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவாள்' என்று கருதி, தலையணையால் அவரின் முகத்தில் அமுக்கியுள்ளார். இதில் மூச்சுத்திணறி பிங்கி இறந்துவிட்டார்.

இதையடுத்து குளியலறையில் பிங்கி வழுக்கி விழுந்து இறந்தது போல் இருப்பதற்காக அவரின் சடலத்தை குளியலறைக்குள் இழுத்துச் சென்றுள்ளார் விகாஷ்சர்மா. பிறகு குளியலறையில் உள்ள தண்ணீர்த் தொட்டிக்குள் பிங்கியின் சடலத்தைப் போட்டுவிட்டு தண்ணீரை திறந்துவிட்டுள்ளார். போலீஸிடம் சிக்கிக் கொள்ளாமலிருக்க பிங்கியின் செல்போனையும் அவர் திருடிச் சென்றுள்ளார். வீட்டில் வெளியில் காத்திருந்த நண்பரிடம் பிங்கியின் செல்போனை விகாஷ் சர்மா கொடுத்துள்ளார்.

ஒடிசாவைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவருடன் பிங்கிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா, ஹோட்டலில் வேலை பார்த்துவந்துள்ளார். கிருஷ்ணாவும் பிங்கியும் ஒரே வீட்டில் கடந்த 6 மாதங்களாக தங்கியிருந்தனர். பிங்கியின் அனைத்து நடவடிக்கைகளும் கிருஷ்ணாவுக்கு தெரியும்.
போலீஸ் விசாரணை அதிகாரி

பிங்கி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரின் செல்போனை வீடு முழுவதும் தேடினோம். அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. வீட்டில் எந்தப் பொருள்களும் கொள்ளையடிக்கப்படவில்லை. இதனால் இது, ஆதாயக் கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று கருதினோம். சிசிடிவி கேமராவில் சிக்கிய இரண்டு வடமாநில வாலிபர்களின் உருவமும், பிங்கியின் செல்போனையும் மையமாக வைத்து இந்த வழக்கை விசாரித்தோம். விசாரணையில் விகாஷ்சர்மா சிக்கிக் கொண்டார். அவரும் பிங்கியைக் கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். இதையடுத்து விகாஷ் சர்மா மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளோம். இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளோம்" என்றார்.

போலீஸார் கூறுகையில், ``குளியலறையில் கிடந்த பிங்கியின் சடலத்தில் காயங்கள் இருந்தன. இதனால் அவர் வழுக்கி விழுந்து இறந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதினோம். மேலும், பிங்கியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் இதனை உறுதிப்படுத்தினர். இதையடுத்து பிங்கி குறித்த முழுவிவரங்களைச் சேகரித்தோம். அவர், நடிகைகள், டாட்டூ பிரியர்கள் என அவருக்கு பெரியளவில் நட்பு வட்டாரம் இருந்தது. பிங்கி, தன்னுடைய உடல் முழுவதும் டாட்டூ வரைந்துவைத்துள்ளார். இந்த வழக்கில் சிக்கிய விகாஷ் சர்மா மற்றும் அவரின் நண்பர் என இருவரிடம் விசாரணை நடத்திவருகிறோம். விசாரணைக்குப்பிறகு கொலையில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

சிசிடிவியில் சிக்கிய விகாஷ் சர்மா
சிசிடிவியில் சிக்கிய விகாஷ் சர்மா

பிங்கி இறந்த தகவலை அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு போலீஸார் போன் மூலம் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் சென்னை வந்தனர். பிங்கியின் சடலத்தைப் பார்த்து அவர்கள் கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு பிங்கியின் சடலம் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. பிங்கியின் வாழ்க்கை திசைமாறியதற்கு முக்கிய காரணம் உள்ளதாக பிங்கியின் உறவினர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

பிங்கியின் சில பழக்க வழக்கங்களால் அவரின் வாழ்க்கை திசைமாறியுள்ளது. குறிப்பாக டாட்டூ வரைவதில் பிங்கி கைதேர்ந்தவர். தத்ரூபமாக டாட்டூ வரைவார் என்பதால் அவருக்கு பணக்கார வாடிக்கையாளர்கள் பலர் இருந்தனர். வாடிக்கையாளர்களின் விருப்பப்படி பிங்கி நடந்து கொள்வார். மது அருந்தும் பழக்கமும் அவருக்கு இருந்துள்ளது. தனக்கு பாதுகாப்பாகத்தான் கிருஷ்ணாவை தன்னுடைய வீட்டில் தங்க வைத்திருந்தார் பிங்கி. ஆடம்பரமாகவும் விருப்பம் போல வாழவும் பிங்கி, தன்னுடைய வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொண்டார்.

கைது செய்யப்பட்டுள்ள விகாஷ் சர்மா
கைது செய்யப்பட்டுள்ள விகாஷ் சர்மா

இந்தச் சமயத்தில்தான் பிங்கியின் சகோதரியின் குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடையாறு புற்று நோய் மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவர்களும் பிங்கியின் வீட்டில்தான் தங்கியிருந்துள்ளனர். கைநிறைய பணம் சம்பாதித்தாலும் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் குடும்பத்தினர் வாழ்க்கையிலும் ஏற்பட்ட சில சம்பவங்களால் பிங்கி நிம்மதியில்லாமல் வாழ்ந்துள்ளார். குறிப்பாக, சகோதரியின் மகளின் எதிர்கால வாழ்க்கையைக் கருதி பிங்கி அதிகளவில் வருத்தப்பட்டுவந்ததாக போலீஸாரிடம் பிங்கியின் குடும்பத்தினர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.