Election bannerElection banner
Published:Updated:

சென்னை: திருமண இணையதளம் மூலம் வந்த வரன்! - ஆசிரியையை ஏமாற்றிய 3 குழந்தைகளின் தந்தை

திருமணம்
திருமணம் ( Representational Image )

ஏற்கெனவே நடந்த திருமணத்தை மறைத்து, தன்னை ஏமாற்றி இரண்டாவதாகத் திருமணம் செய்துவிட்டதாக கணவர்மீது ஆசிரியை புகார் அளித்திருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்தவர் அனுசுயா (31). இவர் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், ``நான் அப்பா, அம்மாவோடு வசித்துவருகிறேன். வீட்டில் நான்தான் மூத்த பெண். எனக்குக் கீழ் இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள். நான் நந்தம்பாக்கத்திலுள்ள பள்ளியில் ஆசிரியையாகக் கடந்த ஓராண்டாகப் பணியாற்றிவந்தேன். என்னுடைய அப்பா திருமண இணையதளம் மூலம் எனக்கு வரன் தேடினார். 26.1.2020-ம் தேதி சென்னை விருகம்பாக்கம், காந்தி நகர், கம்பர் குறுக்குத்தெருவைச் சேர்ந்த மஞ்சு மீனா என்பவர் என்னுடைய அம்மாவிடம் செல்போனில் திருமணம் சம்பந்தமாகப் பேசினார்.

திருமணம்
திருமணம்
representational image

என்னுடைய அம்மா சம்மதம் தெரிவித்து என்னைப் பெண் பார்க்க வரச் சொன்னார்கள். 27.1.2020-ல் என்னைப் பெண் பார்க்க எங்கள் வீட்டுக்கு மஞ்சு மீனா, மீனாவின் அம்மா மங்கையர்க்கரசி உறவினர் அபிநயா ஆகிய மூன்று பேரும் வந்தனர். 29.1.2020-ல் மீண்டும் அவர்கள் வந்தார்கள். மாப்பிள்ளை லோகநாத ரவிகுமார் மட்டும் வீட்டுக்கு வரவில்லை. பின்னர் பெண் பிடித்திருப்பதாகக் கூறிவிட்டு அவர்கள் சென்றார்கள். ஆனால், எங்கள் வீட்டுத் தரப்பில் மாப்பிள்ளையைப் பார்க்காமல் நாங்கள் பெண் தர மறுத்துவிட்டோம். அதனால் 12.2.2020-ல் மாப்பிள்ளையைப் பார்க்க வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு வரும்படி மாப்பிள்ளை வீட்டினர் எங்களிடம் கூறினர். அதன்படி நாங்களும் கோயிலுக்குச் சென்று மாப்பிள்ளையைப் பார்த்தோம்.

பின்னர் இரு வீட்டினர் சம்மதத்துடன் 22.3.2020-ல் நிச்சதார்த்தம் செய்ய முடிவெடுத்தோம். அப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக நிச்சயதார்த்தத்தை ரத்து செய்தோம். அதன் பிறகு 8.5.2020-ல் தாம்பூலம் மாற்றிக்கொண்டோம். 30.8.2020-ல் கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயிலில் திருமணத்தை நடத்தத் திட்டமிடப்பட்டது. ஊரடங்கு காரணமாக திருமணத்தை விருகம்பாக்கத்திலேயே நடத்தினோம். திருமணத்துக்குப் பிறகு மறுவீட்டு அழைப்பும் நடந்தது. அதன்பிறகு நான் என்னுடைய கணவருடன் வாழ்ந்துவந்தேன். என்னுடைய கணவர் இன்ட்டீரியர் டிசைனர் வேலை செய்துவருகிறார். 9.9.2020-ல் காலை 9 மணியளவில் வேலைக்குச் செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றவர் பின்னர் வீட்டுக்கு வரவில்லை. ஒரு வாரத்துக்குப் பிறகு எனக்குச் சந்தேகம் வந்ததால், அவரை நான் போனில் திட்டினேன். அப்போதுதான் அவருக்கு ஏற்கெனவே திருமணம் நடந்த தகவல் எனக்குத் தெரியவந்தது. மேலும், அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதும் தெரிந்தது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டேன்.

திருமணம் செய்வதாக மாணவி சிறார் வதை... தோழியுடன் எஸ்கேப் ஆன பா.ஜ.க பிரமுகரின் மகன்!
முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை

இதையடுத்து என்னுடைய கணவரிடம் போனில் பேசியபோது என்னைக் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். என் மாமியார், மாமனார், நாத்தனார் ஆகியோரிடம் நியாயம் கேட்டபோது, `உன்னை நாங்கள் வைத்துக் காப்பாற்றுகிறோம் நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது’ என்று அவர்கள் மிரட்டினர். திருமணத்தின்போது எனக்கு வரதட்சணையாகக் கொடுத்த 10 சவரன் தங்கநகைகளை என் மாமியார், மாமனார் பிடுங்கி வைத்துக்கொண்டார்கள். சீர்வரிசைப் பொருள்கள், கையில் வாங்கிய ஒரு லட்சம் ரூபாய் ஆகியவை மாப்பிள்ளை குடும்பத்தாரிடம் இருக்கின்றன. எனவே, என்னை ஏமாற்றியதோடு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல்விடுத்து எனது வாழ்க்கையைக் கேள்விகுறியாக்கிய லோகநாத ரவிகுமார் மற்றும் மாமியார் மங்கையர்க்கரசி, மாமானார் அழகப்பன். நாத்தனார் மஞ்சு மீனா, உறவினர்கள் மணிகண்டன், அவரின் மனைவி அபிநயா, மஞ்சு மீனாவின் கணவர் சரவணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொன்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா, 498 (A), 406, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு