Published:Updated:

சென்னை: `நான் சாகப் போகணும்; ஏனென்றால் நான் நல்லவள்!' - ஏரியில் சடலமாக மிதந்த ஆசிரியை

ஆசிரியை புவனேஸ்வரி
ஆசிரியை புவனேஸ்வரி

சென்னை ஆவடி அருகே உள்ள சேக்காடு ஏரியில் ஆசிரியை சடலமாக மிதந்தார். அவரின் 8 மாதக் கைக்குழந்தையை போலீஸார் தேடிவருகின்றனர்.

சென்னை ஆவடியை அடுத்த சேக்காடு டி.ஆர்.ஆர்.நகர், திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் வசந்தகிருஷ்ணன். இவரின் மகள் புவனேஸ்வரி (25.) இவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பாலாஜிக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பாலாஜி, டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இந்தத் தம்பதியிக்கு மூன்று மகள்கள். மூத்தவள் இளவரசி, 2வது குழந்தை நிகிதா, 3-வது தபித்தால் (8 மாதம்). கடந்த 25-ம் தேதி புவனேஸ்வரி, மகள் தபித்தாலை தூக்கிக்கொண்டு வெளியில் சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

குடும்பத்தினருடன் ஆசிரியை புவனேஸ்வரி
குடும்பத்தினருடன் ஆசிரியை புவனேஸ்வரி

அதனால் ஆவடி காவல் நிலையத்தில் 27-ம் தேதி புவனேஸ்வரின் தம்பி செல்வம் புகார் அளித்தார். அதில் `என்னுடைய அக்காவுக்கும் அவரின் கணவர் பாலாஜிக்கும் அடிக்கடி தகராறு நடக்கும். என் அக்காள் மீது சந்தேகப்பட்டு அக்காள் கணவரும் மாமியார் ஜெயபாக்கியமும் சண்டைபோடுவார்கள். அப்போது நானும் அம்மாவும் சமரசம் செய்வோம். கடந்த 24-ம் தேதி அக்காளுக்கும் அவரின் வீட்டின் அருகில் குடியிருக்கும் ஸ்டெல்லா என்பவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது

அதன்பின் அக்காள் கணவர் பாலாஜி, ஸ்டெல்லா முன் அக்காளை அசிங்கமாகத் திட்டியுள்ளார். அதனால் அக்காள் மன உளைச்சலில் இருந்தார். எங்களிடம் ஸ்டெல்லா முன் என்னை திட்டியது கேவலமாக இருக்கிறது என்று புலம்பினாள். மன உளைச்சலிலில் இருந்த அக்காள் 25-ம் தேதி குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு தபித்தாலை மட்டும் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டாள். அவளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே, அவளையும் குழந்தையையும் கண்டுபிடித்து தரும்படி கேட்டுள்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் காளிராஜ் வழக்குபதிவு செய்து புவனேஸ்வரி மற்றும் குழந்தையைத் தேடிவந்தார்.

புவனேஸ்வரி சடலத்தை மீட்கும் தீயணைப்பு வீரர்கள்
புவனேஸ்வரி சடலத்தை மீட்கும் தீயணைப்பு வீரர்கள்

இந்தநிலையில், சேக்காடு கோவிந்தன்தாங்கல் ஏரியில் இளம்பெண் சடலம் மிதப்பதாக ஆவடி காவல் நிலையத்துக்கு 27-ம் தேதி தகவல் வந்தது. உடனடியாக போலீஸார், அங்கு சென்று சடலத்தை மீட்டனர். அந்தப் பெண் குறித்து விசாரித்தபோது அது மாயமான புவனேஸ்வரி எனத் தெரியவந்தது. புவனேஸ்வரியின் குடும்பத்தினரும் அதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து அவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏரியிலிருந்து புவனேஸ்வரியின் சடலம் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. கைக்குழந்தை தபித்தாலை போலீஸார் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் எஸ்.டி.எஸ்.டென்னி கூறுகையில், ``பாலாஜி, புவனேஸ்வரி என இருவரையும் எனக்கு சின்ன வயதிலிருந்தே நன்றாகத் தெரியும். பள்ளியில் படிக்கும்போதுதான் புவனேஸ்வரி, பாலாஜியை காதலித்துள்ளார். இந்தத் தகவல் கிடைத்ததும் இருவரும் மேஜராகிய பிறகு திருமணம் செய்து வைத்தோம். திருமண முடிந்த சில மாதங்களிலேயே புவனேஸ்வரி தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பான புகாரில் ஆவடி போலீஸார் விசாரித்தபோது அது விபத்து என்று புவனேஸ்வரி வாக்குமூலம் அளித்தார்.

வழக்கறிஞர் எஸ்.டி.எஸ்.டென்னி
வழக்கறிஞர் எஸ்.டி.எஸ்.டென்னி
சென்னை: `என்னோட ராட்சஷிக்கு தகவல் சொல்லிடுங்க!' - ஆன்லைன் விளையாட்டால் மாணவன் தற்கொலை

அதனால், புவனேஸ்வரியின் கழுத்து பகுதியில் தீக்காய தழும்புகள் இருக்கும். பாலாஜியும் புவனேஸ்வரியும் சந்தோஷமாகத்தான் குடும்பம் நடத்திவந்தனர். இந்தச் சமயத்தில்தான் புவனேஸ்வரி, ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவளின் மகள் தபித்தால் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. புவனேஸ்வரி அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவந்தார். தைரியமான பொண்ணு. அவர் தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு கோழை அல்ல. அவளின் மரணம் குறித்து போலீஸார் விசாரிக்க வேண்டும்" என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, நேரிடையாக விசாரித்து வருகிறார். புவனேஸ்வரி சடலமாகக் கிடந்த ஏரியில் போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் குழந்தை தபித்தாலை தேடிவருகின்றனர். ஆனால், குழந்தை குறித்த தகவல் கிடைக்கவில்லை. மேலும், புவனேஸ்வரியின் செல்போன் மற்றும் சிக்னல் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. புவனேஸ்வரியின் தம்பி செல்வம் அளித்த புகாரின்பேரிலும் பாலாஜி மற்றும் அவரின் அம்மாவிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். அதோடு புவனேஸ்வரியிடம் சண்டைபோட்ட ஸ்டெல்லாவிடமும் விசாரணை நடந்துள்ளது. வீட்டை விட்டு சென்ற பிறகு புவனேஸ்வரிக்கு வந்த போன் அழைப்புகள் குறித்தும் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.

சென்னை:`சீக்ரெட் கோடு; சிக்கிய நடிகர் ஷாம்!' - நள்ளிரவில் பரபரப்பான அப்பார்ட்மென்ட்
புவனேஸ்வரி எழுதிய டைரி
புவனேஸ்வரி எழுதிய டைரி

புவனேஸ்வரி, டைரியில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், `நான் சாகப் போகணும். ஏனென்றால் நான் நல்லவள். என்னுடைய நல்ல குணம் தினமும் சீரழிந்துகொண்டிருக்கிறது. அதனால், நான் காலையில் இறைவனிடம் பிராத்தனை செய்வேன். அதன்பிறகு அனைத்து பிரச்னைகளையும் மறந்துவிடுவேன். மற்றவர்கள் என்னைக் கிண்டல் செய்கின்றனர். எனவே அரசு, மக்களுக்காக ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்' என எழுதப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் 23 ஜூலை வியாழக்கிழமை எழுதப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலும் விசாரணை நடந்துவருகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு