Published:Updated:

`குடிக்கு அடிமை; பேசுவதை நிறுத்திய காதலி!' -காலதாமதத்தால் போலீஸ் பூத்தில் குண்டுவீசிய காதலன்

வெங்கடேசன்
வெங்கடேசன்

சென்னையில் உள்ள கல்லூரி வாசலில் காதலியைக் கொலை செய்ய உணவு டெலிவரி செய்யும் நபரான காதலன் காத்திருந்தார். ஆனால் அவள் வரவில்லை. இதனால் போலீஸ் பூத் மீது பெட்ரோல் குண்டை வீசினார்.

சென்னை தேனாம்பேட்டை பாவா நகர், பி பிளாக்கைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரின் மகன் வெங்கடேஷ் (25). இவர் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்துவருகிறார். இவரும் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர். இந்த நிலையில், காதலியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் அவரைக் கொலை செய்வதற்கு வெங்கடேஷ் திட்டமிட்டார்.

வெங்கடேசன்
வெங்கடேசன்
`காதலைத் துண்டித்த காதலி!' - பெண்ணின் சகோதரிக்கு அதிர்ச்சி கொடுத்த கோவை இளைஞர் #TamilnaduCrimeDiary

இதையடுத்து, நேற்று மாலை பைக்கில் அந்தப் பெண் படிக்கும் கல்லூரிக்குச் சென்றார் வெங்கடேசன். கல்லூரி வாசலில் அவருக்காகக் காத்திருந்தார். ஆனால், கல்லூரி முடிந்தும் அவர் வெளியில் வரவில்லை. இதனால் வெங்கடேசன், பைக்கில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து வீசினார். அது, அந்தப்பகுதியில் உள்ள போலீஸ் பூத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. அதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீஸ் பூத்தில் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பெட்ரோல் குண்டை வீசிய வெங்கடேசனைப் பிடிக்க பொதுமக்கள் முயன்றனர். ஆனால், அவர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினார்.

இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தையும் சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். வாகனத்தின் பதிவு நம்பரை வைத்து வெங்கடேசனை அரை மணி நேரத்தில் பிடித்தனர்.

representational image
representational image

இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் கூறுகையில், ``தேனாம்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். பள்ளியில் படிக்கும்போதே அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்துவந்துள்ளார். தற்போது அந்தப் பெண், கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்துவருகிறார். வெங்கடேசன், குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். மேலும், அவர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வெங்கடேசனை நல்வழிப்படுத்த அவரின் காதலியான கல்லூரி மாணவி முயற்சி செய்தார். ஆனால் வெங்கடேசன் திருந்தவில்லை. மனம்போன வாழ்க்கை வாழ்ந்தார். இதனால் அவருக்கும் வெங்கடேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அந்தப் பெண், `நீ குடிப்பதால் நான், உன்னை விட்டுவிட்டு வேற ஒருவரைக் காதலிக்கப் போகிறேன்' என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். அதைக்கேட்டு வெங்கடேசன் அதிர்ச்சியடைந்துள்ளார். அதோடு வெங்கடேசனிடம் பேசுவதையும் அந்தப் பெண் தவிர்த்துள்ளார். அதனால் மனவேதனையடைந்த வெங்கடேசன், தொடர்ந்து மது அருந்தியுள்ளார்.

வெங்கடேசன்
வெங்கடேசன்

மதுபோதையில் தனக்குக் கிடைக்காத அந்த மாணவியை கொலை செய்யத் திட்டமிட்டார். இதற்காக யூடியூபில் பெட்ரோல் குண்டு தயாரிப்பது குறித்துத் தேடியுள்ளார். பெட்ரோல் குண்டு தயாரிக்கும் முறை குறித்து யூடியூபில் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மது பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி குண்டு தயாரித்துள்ளார்.

அதை பைக்கில் எடுத்துக்கொண்டு கல்லூரி முடியும் நேரத்துக்கு அங்கு சென்றுள்ளார். குடிபோதையில் இருந்த வெங்கடேசனுக்கு நேரம் செல்லச் செல்ல ஆத்திரம் தலைக்கேறியது. அதனால் அந்த மாணவி வருவதற்கு முன்பே பெட்ரோல் குண்டை எடுத்து வீசிவிட்டு தப்பியுள்ளார். சரியாக மாலை 4.30 மணியளவில் பெட்ரோல் குண்டை வீசினார். அடுத்த அரைமணி நேரத்தில் அவரைப் பிடித்துவிட்டோம்" என்றனர்.

காவல் நிலையத்தில் குடிபோதையிலிருந்த வெங்கடேசன், `என்னை அவள் ஏமாற்றி விட்டாள். இனிமேல் அவள் உயிரோடு இருக்கக் கூடாது. என்னை விடுங்கள். அவளைக் கொலை செய்ய வேண்டும்' என்று புலம்பியுள்ளார்.

தேனாம்பேட்டை காவல் நிலையம்
தேனாம்பேட்டை காவல் நிலையம்

போதை தெளிந்த பிறகு வெங்கடேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அவரைச் சிறையில் அடைத்துள்ளனர்.

வெங்கடேசன் காதலித்த பெண்ணிடம் போலீஸார் விசாரித்தபோது, `அவனை திருத்தத்தான் அப்படிக் கூறினேன்' என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு