Published:Updated:

`சிறைக்குச் செல்லத் தயார்; அதற்குமுன் ஒரு கடமை!’- போலீஸாரை ஆச்சர்யப்படுத்திய `புறா’ கார்த்திக்

``என்னைச் சிறையில் அடையுங்கள். அதற்கு முன் எனக்கு ஒரு கடமை இருக்கிறது" என்று புறா கார்த்திக் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

புறா கார்த்திக்
புறா கார்த்திக்

சென்னை சங்கர்நகர் காவல் நிலையத்தில் தங்கச் செயின் பறித்தது தொடர்பான புகாரின் பேரில் சூளையைச் சேர்ந்த புறா கார்த்திக்கை துணை கமிஷனர் பிரபாகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பசுபதி கைது செய்துள்ளார். விசாரணையின்போது போலீஸாரிடம் புறா கார்த்திக், ``நான் 9- ம் வகுப்பு வரை படித்துள்ளேன். அதன்பிறகு அடிதடி, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டேன். பிரபல தாதாவான காக்கா தோப்பு பாலாஜி டீமில் இருந்தேன். அந்த டீமிலிருந்து சில காரணங்களுக்காக விலகினேன்.

புறா கார்த்திக்
புறா கார்த்திக்

எனக்குத் திருமணமாகி குடும்பத்துடன் சென்னையில் வசித்துவந்தேன். அப்போது என்னைவிட்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இந்தச் சமயத்தில்தான் ஈரோட்டைச் சேர்ந்த ஜெயலட்சுமி எனக்கு அறிமுகமாகினார். அவரைத் திருமணம் செய்துகொண்டு ஈரோட்டில் குடியிருந்தேன். 7 மாதம் குழந்தை உள்ளது. நான் திருடன் என்பது ஜெயலட்சுமிக்குத் தெரியாது.

எனக்கு சின்ன வயதிலிருந்து புறா மற்றும் நாய்களை வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஈரோட்டுக்கு வந்தபிறகு நாய்களையும் புறாக்களையும் வளர்க்க ஆரம்பித்தேன். அதற்குப் பணம் அதிகளவில் தேவைப்பட்டது. அதனால், சென்னை எனக்கு தெரிந்த இடம் என்பதால் அங்கு சென்று வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டேன்.

புறா கார்த்திக்
புறா கார்த்திக்

சென்னைக்கு வந்ததும் பைக் ஒன்றை முதலில் திருடுவேன். பின்னர் அந்தப் பைக்கில் சென்று வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவேன். ஸ்டான்லி அரசு மருத்துவமனை பகுதியிலிருந்து திருடிய பைக் மூலம் வயதான பெண் ஒருவர் அணிந்திருந்த தங்கச் செயினைப் பறித்தேன். அந்தச் செயினை அடகு கடையில் விற்று, அந்தப் பணத்தில் நாய்களுக்கும் புறாக்களுக்கும் உணவு வாங்கினேன். தினமும் நாய்களுக்கு 50 கிலோ இறைச்சி தேவைப்படும். புறா ரேஸிலும் ஈடுபடுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

என்னிடம் 100-க்கும் மேற்பட்ட புறாக்களும் 50-க்கு மேற்பட்ட நாய்களும் இருந்தன. திடீரென நாய்களும் புறாக்களும் இறந்தன. இதனால் எனக்கு மனவருத்தம் ஏற்பட்டதோடு நஷ்டம் ஏற்பட்டது. நாய்கள், புறாக்கள் மீது அதிக பாசம் வைத்திருந்தேன். ஆனால், அவைகள் இறந்தபோது என்னால் அந்த மனவேதனையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மீண்டும் நாய்ப் பண்ணை மற்றும் புறாக்களை வளர்க்க முடிவு செய்து அதற்காக வழிப்பறி செய்ய சென்னைக்கு அடிக்கடி சென்றுவந்தேன். கிடைத்த பணத்தில் புறாக்களும் நாய்களும் வாங்கிவந்தேன்.

புறா கார்த்திக்
புறா கார்த்திக்

விலங்குகள், பறவைகள் மீது அதிக பாசம் வைத்திருந்த நான், பெண்களை அடித்து துன்புறுத்தி எப்போதுமே தங்க நகைகளைப் பறிக்க மாட்டேன். அதனால்தான் வயதான பெண்களிடம் அன்பாகவும் அக்கறையாகவும் முதலில் பேசுவேன். அரைமணி நேரம் முதல் 2 மணி வரை கூட அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பேன். என்னை முழுமையாக நம்பி குடும்பக் கதைகளை பெண்கள் சொல்லும்போதுதான் பின்னாலிருந்து தங்கச் செயினை அறுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவேன். சிசிடிவி கேமராவில் சிக்காமலிருக்க ஹெல்மெட் அணிந்து கொள்வேன். பைக்கின் பதிவு நம்பர் மூலம் என்னை கண்டுபிடிக்க முடியாது என்பதால் தைரியமாக இருந்தேன்.

வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட பிறகு அந்த பைக்கை நிறுத்தி ஏதாவது ஓர் இடத்தில் பார்க்கிங் செய்துவிட்டு ஈரோடு சென்றுவிடுவேன். நான் திரும்பி வரும்வரை அந்தப் பைக் அங்கேயே நின்றால் மீண்டும் அதில் செல்வேன். இல்லையென்றால் அடுத்த பைக்கை திருடி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடுவேன். என்னைப்பற்றி முழுமையான தகவல்களைச் சேகரித்த போலீஸார் நாய் ஒன்று விலைக்கு உள்ளதாகக் கூறி என்னை நம்ப வைத்து பிடித்துவிட்டனர்" என்று கூறியுள்ளார்.

புறா கார்த்திக்
புறா கார்த்திக்

சென்னை போலீஸாரிடம் சிக்கிய புறா கார்த்திக், ``என்னை சிறையில் அடையுங்கள். அதற்கு முன் நான் வளர்க்கும் நாய்களுக்கும் புறாக்களுக்கும் தேவையான ஏற்பாடுகளை செய்துவிட்டு வருகிறேன்" என்று கூறியுள்ளார்.