Published:Updated:

சென்னை: `கொலைக்கு முன் மாமா ரூ.3,000 கொடுத்தார்' - பஞ்சாயத்துத் தலைவர் மருமகன் அதிர்ச்சித் தகவல்

கொலை செய்யப்பட்ட பரமகுரு
கொலை செய்யப்பட்ட பரமகுரு

சென்னையை அடுத்த திருநின்றவூர் அருகே உள் கொசவன்பாளையத்தின் தி.மு.க பஞ்சாயத்துத் தலைவர் பரமகுரு கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

கொலை

சென்னை திருநின்றவூர், கொசவன்பாளையம், லட்சுமிபதி நகரைச் சேர்ந்தவர் பரமகுரு (38). இவர் 14-ம் தேதி மாலை 4.45 மணியளவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழை நீர் கால்வாய் வேலையைப் பார்வையிட்டு விட்டு பூந்தமல்லி மெயின்ரோட்டிற்கு வந்தார். அப்போது 3 பைக்கில் வந்தவர்கள் பரமகுருவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

பரமகுரு
பரமகுரு

இந்தச் சம்பவம் தொடர்பாக பரமருவின் உறவினர் பொன்ராஜ பெருமாள் (21) என்பவர் திருநின்றவூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, நான் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். என் அப்பா மணிவாசகம் கொசவன்பாளையத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். என் தாய்மாமா பரமகுரு, தற்போது கொசவன்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். அவருக்கு ஷீபா என்பருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

ரூ.3,000

என் மாமா பரமகுரு கொசவன்பாளையம் அருந்ததிபாளையத்தில் சாக்கடை கால்வாய், சிமென்ட் ரோடு போடுகிற கான்ட்ராக்ட் வேலை செய்து வருவதால், நான் அவருக்கு உதவியாக கூடவே இருந்து வருகிறேன். 14-ம் தேதி சுமார் 3 மணியளவில் என் மாமா திருநின்றவூர் பஜாருக்கு சென்றுவிட்டு கொசவன்பாளையம் அருந்ததி பாளையத்தில் வேலை நடக்கிற இடத்துக்கு வந்தார். அங்கு எங்களுடனும் வேலை செய்த ஆட்களுடனும் அவர் பேசிக்கொண்டு இருந்தார். மாலை சுமார் 4.45 மணியளவில் டிராக்டர் ஓட்டிக்கொண்டிருந்த முனுசாமி, டிராக்டர் வாடகை கேட்டது சம்பந்தமாகக் கொசவன்பாளையம் அருந்நதி பாளையம் மெயின்ரோடு பஸ் ஸ்டான்ட் பக்கத்தில் நானும் என் மாமா பரமகுரு அப்பகுதியைச் சேர்ந்த பாலன் என்பவரும் சேர்ந்து முனுசாமியிடம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது டிராக்டர் ஓனரான குணசேகரன் அங்கு வந்தார்.

எப்ஐஆர்
எப்ஐஆர்

என் மாமா 3,000 ரூபாயை பாலனிடம் கொடுக்க அதை அவர் குணசேகரிடம் கொடுத்தார். அப்போது 3 பைக்குகள் வந்தன. 2 பேர் தனித்தனி பைக்கிலும் ஒரே பைக்கில் எனக்கு தெரிந்த ராஜேஷ், மற்றும் வேறு ஒரு ஆளும் மொத்தம் 4 பேர் வண்டியை நிறுத்தினார்கள். திடீரென்று தின்னனூர் பாலாறு கிணறு தெருவைச் சேர்ந்த ராஜேஷும் அவன் கூட பைக்கில் வந்தவரும் கத்தியோட ஓடிவந்து என் மாமா பரமகுருவை வெட்டினாங்க. தடுக்கப்போன எங்களை அவர்கள் கூட வந்த ஒருத்தன் கத்தியை வீசி வெட்டுவது போல் ஓடிவந்ததால் நாங்கள் அனைவரும் பயந்து ஓரமாக ஒதுங்கிப் போய்விட்டோம். ஒருத்தன் மட்டும் பைக் பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்தான்.

6 பேர் கைது

மாமா பரமகுருவை கத்தியால் வெட்டிவிட்டு ராஜேசும் அவன் கூட வந்த மூன்று பேரும் பைக்கில் ஏறி கொசவன்பாளையம் ஆற்றுப் பக்கமா வேகமாகப் போயிட்டாங்க. நாங்கள் எங்க மாமா பரமகுரு அருகில் போய் ஓடிப் பார்த்தபோது அவர் தலையிலும் மார்ப்பிலும் வெட்டுபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். ராஜேஷையும் அவன் கூட வந்த 3 பேரையும் நாங்கள் அடையாளம் காட்டுவோம். என் மாமா பரமகுருவை எந்தக் காரணத்துக்காக வெட்டினார்கள் என எனக்குத் தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் திருநின்றவூர் இன்ஸ்பெக்டர் குணசேகரன் 302, 506 (2) ஐபிசி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.

ராஜேஷ்
ராஜேஷ்

இந்தக் கொலை வழக்கில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருநின்றவூர் மேட்டு தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (33), அதே பகுதியைச் சேர்ந்த அப்புன் என்கிற ரவிக்குமார் (33), திருநின்றவூர் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கலாநிதி (28), மேட்டு தெருவைச் சேர்ந்த ஆஜி என்கிற ஐயப்பன் (28), மேட்டுத் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் (23), கோமதி புரத்தைச் சேர்ந்த சரவணன் (30)ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மண் அள்ளுவதைத் தடுத்தார்

போலீஸார் நடத்திய விசாரணையில் கைதான ராஜேஷுக்கும் கொலை செய்யப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் பரமகுருவுக்கும் கொசவன்பாளையம் பகுதியில் உள்ள ஆற்றில் மண் அள்ளுவது சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்தது தெரியவந்தது. ராஜேஷ், ரவிக்குமார் ஆகிய இருவர் மீது திருநின்றவூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. கொலை செய்யப்பட்ட பரமகுரு, தி.மு.க-வில் உள்ளார். கைது செய்யப்பட்ட இருவர் தி.மு.க-வில் உறுப்பினர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரவிக்குமார்
ரவிக்குமார்
சென்னை: `பாதாள சாக்கடை தகராறு; மகன் கண்முன் தந்தை கொலை’ - கணவனைக் காப்பாற்றிய மனைவி

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``இந்த வழக்கில் உள்ளாட்சி தேர்தல் பகை என்ற கோணத்தில்தான் முதலில் விசாரணை நடத்தினோம். அப்போதுதான் பரமகுருவின் உறவினர் பொன்ராஜ பெருமாள், திருநின்றவூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தலைமையில் வந்தவர்கள்தான் பரமகுருவை வெட்டியதை நேரில் பார்த்ததாகக் கூறினார். அதனால் ராஜேஷைத் தேடியபோது அவர் தலைமறைவாகிவிட்டார். அவரையும் அவரின் கூட்டாளிகளைப் பிடித்து விசாரித்தபோது ஆற்றில் மண் அள்ளுவதை பரமகுரு தட்டிக் கேட்டதோடு வருவாய் துறையினருக்கு தகவலும் கொடுத்துள்ளார். அதனால்தான் இந்தக் கொலை நடந்துள்ளது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு