Published:Updated:

`பட்டப்பகலில் கொள்ளையர்களுடன் போராடிய கேஷியர்!' - காவலாளிகளால் தப்பிய ரூ. 20 லட்சம்

சென்னை, தி.நகரில் பைக்கில் கொண்டு வந்த 20 லட்சம் ரூபாயைக் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை
கொள்ளை

திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடந்த கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்னை தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரபலமான தனியார் தங்க நகை அடகுக் கடையில் ரூ. 20 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சம்பந்தப்பட்ட அடகுக் கடையின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் உள்ளது. அங்கிருந்து ஊழியர்கள் சென்னைக்கு நகைகள் மற்றும் பணத்தை எடுத்து வருவது வழக்கம். சில தினங்களுக்கு முன் பெங்களூருவில் இருந்து 20 லட்சம் ரூபாயுடன் கேஷியர் கிரிஷ் (30) தனியார் பஸ்ஸில் கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.

CASH
CASH

அவரை பைக்கில் தி.நகருக்கு அழைத்து வர காவலாளி சந்திரகுமார் கோயம்பேடு பஸ் நிலையத்துக்குச் சென்றார். இருவரும் பைக்கில் தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை, பாரதிநகர், 2 -வது தெருவில் உள்ள அடகுக் கடையின் அருகே வந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த முகமூடி அணிந்து வந்த 3 நபர்கள் கிரிஷ்ஷிடம் இருந்து பணப்பையைப் பிடுங்க முயன்றனர். ஆனால், கிரிஷ் பணப்பையைக் கொடுக்காமல் கொள்ளையர்களுடன் போராடினார். காரில் வந்த கொள்ளையர்கள் துப்பாக்கி, இரும்பு ராடு ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் விடுத்தனர். திருடன் திருடன் எனக் கிரிஷும் சந்திரகுமாரும் கூச்சலிட்டபடி கடைக்குள் சென்று தப்பித்தனர்.

இதைக்கண்டதும் தரைத்தளத்தில் நின்றுகொண்டிருந்த கடையின் செக்யூரிட்டி சையத்சுல்தான் தனது துப்பாக்கியுடன் வெளியே ஓடிவந்தார். அவரைக் கண்டதும் காரில் வந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிது. இதுகுறித்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் கலியன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் சிவப்பு நிற காரில் வந்தது தெரியவந்தது. கோயம்பேட்டில் பைக்கில் செக்யூரிட்டி சந்திரகுமாருடன், கிரிஷ் புறப்பட்ட இடத்தில் இருந்து போலீஸார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

CCTV
CCTV

அப்போது அந்தக் கார், கிரிஷ் வந்த பைக்கை பின்தொடர்ந்து வந்தது தெரியவந்தது. அந்த காரின் பதிவு நம்பரை வைத்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், கடைக்கு அருகில் வந்தபோது ஒரு பைக் கிரிஷ் எதிரே மெதுவாக வேவுபார்ப்பது போல வந்துள்ளது. அந்த பைக்கில் வந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொள்கின்றனர். மேலும், முகமூடி அணிந்த நபர்கள் இந்தியில் பேசியதாக மற்றொரு காவலாளி சத்குரு போலீஸ் விசாரணையின்போது கூறியுள்ளார். இதனால் அவர்கள் வடமாநிலக் கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது" என்றனர்.

சம்பந்தப்பட்ட அடகுக் கடையில் 2016-ம் ஆண்டு இதேபோல கொள்ளை முயற்சி நடந்தது. 2017-ம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த வழக்கில் கடையின் ஊழியர் உட்பட கொள்ளைக் கும்பலை பாண்டிபஜார் போலீஸார் பெங்களூரு சென்று கைது செய்தனர். மேலும், கடந்த 2018-ம் ஆண்டும் கொள்ளை முயற்சி நடந்தது.

`சுவரில் துளை; பலகோடி ரூபாய் நகைகள் மாயம்!' - திருச்சியை அதிர வைத்த கொள்ளை

இந்த ஆண்டும் தற்போது ரூ. 20 லட்சம் கொள்ளை முயற்சி நடந்துள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணம் கொண்டு வரும்போது உரிய பாதுகாப்புடன் கொண்டு வர வேண்டும் அல்லது வங்கிமூலம் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று போலீஸார் கூறினாலும், அதைக் கண்டுகொள்ளாத போதுதான் கொள்ளைச் சம்பவங்கள் நடக்கின்றன என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.