Published:Updated:

சென்னை: டூவீலரை எடுத்துச் சென்ற போலீஸார்! - அவமானத்தில் இறந்த திருநங்கை

திருநங்கை சபினா
திருநங்கை சபினா

சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் டூவிலர் எடுத்துச் சென்றதால் அவமானத்தில் திருநங்கை தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சபினா (19). திருநங்கை. இவர், தன்னுடைய டூவீலரை வள்ளுவர் கோட்டம் அருகே நிறுத்தியிருந்தார். கடந்த 9-ம் தேதி நுங்கம்பாக்கம் போலீஸார் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். காவல் நிலையத்துக்குச் சென்ற சபினா, டூவீலரை கேட்டுள்ளார். அப்போது நாளை வந்து டூவீலரை எடுத்துக்கொள்ளும்படி போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த மனவருத்தத்தில் அவர் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் கோடம்பாக்கம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

திருநங்கை தற்கொலை
திருநங்கை தற்கொலை
மாதிரிப் படம்

சபினா தற்கொலை குறித்து சிபிகா (18) என்ற திருநங்கை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``நான் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் காமராஜர் காலனியில் குடியிருந்து வருகிறேன். நாங்கள் மேற்கண்ட முகவரியில் 3 பேர் குடியிருந்து வருகிறோம். கடந்த 6 மாதங்களாக நாங்கள் மூன்று பேரும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் பாலியல் தொழில் செய்வோம்.

9.7.2020-ல் இரவு வள்ளுவர் கோட்டம் கோடம்பாக்கம் சாலையில் மாரியம்மன் கோயில் அருகில் நின்று கொண்டு இருந்தோம். அப்போது காவல்துறையின் வாகனம் வந்தது. உடனே நானும் சபினா (19) மற்றும் அங்கு இருந்த திருநங்கைகள் பயந்து ஓடிவிட்டோம். எங்களுடைய டூவிலர் அங்கு நின்று கொண்டிருந்தது. நாங்கள் திரும்பி வந்து டூவிலரைப் பார்த்தபோது அதை நுங்கம்பாக்கம் போலீஸார் எடுத்துச் சென்றது தெரியவந்தது. உடனே நாங்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்குச் சென்றோம்.

தற்கொலை
தற்கொலை
Representational Image

அங்கு எங்களுடைய டூவீலர் நின்றுகொண்டிருந்தது. நாங்கள் டூவீலரைக் கேட்டபோது காலையில் வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று போலீஸார் கூறினர். அப்போது நானும் சபினாவும் உடனே வீட்டுக்கு வந்துவிட்டோம். வீட்டுக்கு வந்து எங்களுடைய மாமியிடம் நடந்ததைக் கூறினோம். அதற்கு மாமி, காலையில் சென்று டூவீலரை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினர். வண்டி காவல் நிலையத்தில் நிற்பதாலும் அப்பா அம்மாவுக்கு தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என சபினா வருத்தப்பட்டாள். அவள் செல்போனை எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றாள். நான் தங்கியிருக்கும் அறையில் இருந்தேன். சபினா கீழே இறங்கி வராததால் மாடிக்குச் சென்ற பார்த்தபோது துப்பட்டாவால் அவள் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தாள்.

உடனே சத்தம் போட்டேன். அதைக் கேட்டு மாமி தீபிகா அங்கு வந்தார். சபினா தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியோடு சபினாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கிருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினார். உடனே அங்கு சென்றபோது சபினா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்னர். சபினாவின் டூவீலர் காவல் நிலையத்தில் இருந்தது வீட்டுக்குத் தெரிந்தால் அசிங்கமாகிவிடம் என மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவளின் சடலத்தை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

திருநங்கைகளுடன் காதல்; நேவி ஆபீஸர்; சீட்டிங்! - தூத்துக்குடி இளைஞரின் அதிர்ச்சிப் பின்னணி

இதுகுறித்து கோடம்பாக்கம் போலீஸார் கூறுகையில், ``திருநங்கை சபினா தற்கொலை குறித்து விசாரித்தபோது, சம்பவத்தன்று கூட்டமாகத் திருநங்கைகள் அங்கிருந்துள்ளனர். போலீஸைப் பார்த்ததும் அவர்கள் எஸ்கேப் ஆகிவிட்டனர். அதனால்தான் அநாதையாக நின்றுகொண்டிருந்த டூவீலரை போலீஸார் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். திருநங்கை சபினாவின் தற்கொலைக்கு டூவீலரை போலீஸார் எடுத்துச் சென்றதே காரணம் எனப் புகாரளித்துள்ளனர். அது உண்மையா என்று விசாரித்து வருகிறோம்" என்றனர்.

திருநங்கை சபினா தற்கொலை சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு