Published:Updated:

`டியூஷன் படிக்கவந்த மாணவிக்கு பாலியல் தொல்லை!' - தி.நகர் வழக்கை திசைமாற்றுகிறதா போலீஸ்?

புகார் கொடுத்த மாணவியை மிரட்டி பணம், நகை பறிக்கப்பட்டது விசாரணையின்போது தகவல் வெளியானது. ஆனால், எவ்வளவு பணம், நகைகளை பறிமுதல் செய்தோம் என்ற தகவலையும் போலீஸார் தெரிவிக்கவில்லை.

Representational Image
Representational Image

சென்னை தி.நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் சஞ்சனா. பட்டப்படிப்பை முடித்துவிட்டு வீட்டிலேயே ப்ளஸ் டூ, பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு டியூஷன் எடுத்து வந்தார். பெரும்பாலானவர்கள் காரில்தான் டியூஷனுக்கு வருவார்கள். மாலை நேரங்களில் சஞ்சனா குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் கார்கள் அணிவகுத்து நிற்கும்.

representational image
representational image

சஞ்சனாவிடம் டியூஷன் படித்த ஒரு மாணவியின் குடும்பத்தினர் சென்னை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். பின்னர், அந்தப் புகாரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவு போலீஸாருக்கு அனுப்பிவைத்தார் கமிஷனர். இந்த வழக்கை துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் லூர்துமேரி விசாரித்து வந்தார். மாணவி கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட டியூஷன் சென்டருக்குப் போலீஸார் சென்றனர்.

டீச்சர் சஞ்சனா, அவரின் ஆண் நண்பர் பாலாஜி ஆகியோரிடம் போலீஸார் நடத்தினர். விசாரணைக்குப்பிறகு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில், `சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி, 10-ம் வகுப்பு படித்துவருகிறார். இவர், தி.நகரில் குடியிருக்கும் சஞ்சனா என்பவரிடம் டியூஷன் படித்துவந்துள்ளார். அங்கு மாணவியிடம் சஞ்சனாவின் ஆண் நண்பர் பாலாஜி, தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவந்துள்ளார்.

arrest
arrest

பாலாஜி, மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்கு டியூஷன் ஆசிரியை சஞ்சனாவும் உடந்தையாக இருந்துள்ளார். நடந்த சம்பவத்தை மாணவி, தன்னுடைய தந்தையிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தந்தை, தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போக்ஸோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த பாலாஜி (38), தி.நகரைச் சேர்ந்த டியூஷன் ஆசிரியை சஞ்சனா (28) ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் இந்த சஞ்சனா, பாலாஜி?

வசதியானவர்கள் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் சஞ்சனாவின் குடும்பத்தினர் குடியிருந்துவருகின்றனர். சஞ்சனாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. படித்துவிட்டு வீட்டிலேயே டியூசன் நடத்திவந்துள்ளார். சஞ்சனாவின் வீட்டின் அருகில் வசித்தவர் பாலாஜி. இவர் செல்போன் கடை ஒன்றில் வேலைபார்த்துவந்துள்ளார். அதன்பிறகு கிடைத்த வேலைகளைச் செய்துள்ளார்.

கழுத்தில் இறுக்கப்பட்ட கயிறு; பாலியல் வன்கொடுமை! - பாக்., மாணவிக்கு நேர்ந்த துயரம்

பெரும்பாலும் வேலைக்குச் செல்லாமல் பாலாஜி வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போதுதான் பாலாஜிக்கும் சஞ்சனாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சஞ்சனாவிடம் டியூஷன் படிக்கும் மாணவ, மாணவிகளிடமும் பாலாஜி பழகியுள்ளார். போலீஸில் புகார் கொடுத்த மாணவிக்கும் பாலாஜி அறிமுகமாகியுள்ளார். அதன்பிறகுதான் பாலாஜி தன்னுடைய சுயரூபத்தை வெளிகாட்டியுள்ளார். அதற்கு சஞ்சனாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால்தான் இருவரையும் கைது செய்துள்ளோம் என்கின்றனர் விசாரணை அதிகாரிகள். மேலும், பாலாஜிக்கு திருமணமாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வீடியோ எடுத்தது உண்மையா?

போலீஸில் புகார் கொடுத்த மாணவியைக் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சொகுசு பங்களாவுக்குக் கல்வி சுற்றுலா அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குதான் மாணவிக்குக் கொடுமை நடந்ததாகவும் வீடியோ எடுக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், வீடியோ, போட்டோ எடுக்கப்பட்டதை போலீஸார் உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்.

புகார் கொடுத்த மாணவியை மிரட்டி பணம், நகை பறிக்கப்பட்டது விசாரணையின்போது தகவல் வெளியானது. ஆனால், சஞ்சனா, பாலாஜி ஆகியோரிடமிருந்து எவ்வளவு பணம், நகைகளை பறிமுதல் செய்தோம் என்ற தகவல்களைப் போலீஸார் தெரிவிக்கவில்லை.

மூன்றில் ஒருவர் பள்ளிக்கு செல்வதில்லை! - பாலியல் வன்கொடுமைக்கு பின் சிறுமிகளின் நிலை

பாலாஜியின் பேச்சைக் கேட்டதால் சஞ்சனாவும் கைது செய்யப்பட்டுள்ளார். சஞ்சனா குடியிருக்கும் பகுதியில் அவருக்கு நல்ல பெயர்தான் உள்ளது. குடும்பத்தினரோடு வாழ்ந்துவந்த சஞ்சனா, ஆண் நண்பர் பாலாஜியின் கட்டுப்பாட்டுக்குள் ஏதோ ஒரு காரணத்துக்காக இருந்துள்ளார். தொடக்கத்தில், மாணவியிடம் பாலாஜி நெருங்கிப் பழகியதை சஞ்சனா தடுத்துள்ளார். இருப்பினும், பாலாஜியின் பேச்சை அவரால் மீற முடியவில்லை.

இந்தச் சம்பவத்துக்குப்பிறகு சஞ்சனாவின் வீடும் பாலாஜி குடியிருந்த வீடும் பூட்டிக் கிடக்கிறது. அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, `கைது சம்பவத்துக்குப்பிறகு சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் இங்கு வருவதில்லை' என்கின்றனர்.

எத்தனையோ போக்ஸோ வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் தகவல்களை கூறும் காவல்துறையினர், தி.நகர் சம்பவத்தில் மட்டும் விவரங்களைச் சொல்ல மறுக்கின்றனர். `இதன் பின்னணியில் பல்வேறு மர்மங்கள் அடங்கியிருக்கின்றன' என்ற தகவலும் வலம் வருகிறது.