Published:Updated:

சென்னை: `சாமி போட்டோக்களில் ரத்தம்!' - போலீஸ் இன்ஃபார்மரான வி.சி.க பிரமுகர் கொலை

கொலை செய்யப்பட்ட வி.சி.க பிரமுகர் கேசவன்
கொலை செய்யப்பட்ட வி.சி.க பிரமுகர் கேசவன்

சென்னை, தண்டையார்பேட்டை பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்வது குறித்த தகவலை போலீஸாருக்குக் கூறிவந்த இன்ஃபார்மரான வி.சி.க பிரமுகர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, வண்ணாரப்பேட்டை வீராகுட்டி தெருவைச் சேர்ந்தவர் கேசவன் (40). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆர்.கே.நகர் பகுதிக்குத் துணைச் செயலாளராக இருந்தார். இவரின் மனைவி பிரியா (38). இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். கேசவன், தன்னுடைய வீட்டின் அருகில் அம்மன் கோயில் ஒன்றைக் கட்டிவந்தார். நேற்று ஆடிமாதக் கடைசி நாள் என்பதால், கோயிலில் கூழ் காய்ச்சிக்கொண்டிருந்தார்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

அப்போது அங்கு வந்த ஆறு பேர்கொண்ட மர்மக் கும்பல், கேசவனிடம் தகராறில் ஈடுபட்டது. பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் கேசவனை அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டியது. அந்தக் கும்பலிடமிருந்து தப்பிக்க கேசவன் ஓடினார். ஆனால், அவரை விடாமல் துரத்திய அந்தக் கும்பல், அவரைச் சுற்றி வளைத்து, வெட்டிச் சாய்த்தது. கேசவனின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்தனர். அதைப் பார்த்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

`குடும்பத்தினருடன் பிரச்னை; பாலியல் வன்கொடுமை!’- உ.பியை அதிரவைத்த 13 வயது சிறுமி கொலை

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கேசவனை மீட்ட பொதுமக்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்துத் தகவலறிந்ததும், தண்டையார்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். கேசவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கேசவனின் கொலை குறித்து போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மதனின் வீட்டைச் சேதப்படுத்தும் பெண்
மதனின் வீட்டைச் சேதப்படுத்தும் பெண்

இது குறித்து தண்டையார்பேட்டை போலீஸார் கூறுகையில், ``வி.சி.க பிரமுகர் கேசவனை கோயில் அருகில்வைத்து ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டியுள்ளது. அதைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு ஓடிவந்துள்ளனர். அதனால், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறது. அப்போது அங்கிருந்த ஆட்டோ, பைக் மற்றும் பொருள்களை அந்தக் கும்பல் சேதப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது.

கேசவன் கொலைக்கு கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை தொழில் போட்டியே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. சி.சி.டி.வி கேமரா பதிவு மூலம் கேசவனைக் கொலை செய்தவர்களை அடையாளம் கண்டிருக்கிறோம். இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த மதன் என்பவரைப் பிடித்திருக்கிறோம். அவர், நீண்டகாலமாகக் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்று வந்திருக்கிறார்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்
சென்னை: `செல்போனுக்கு வந்த முகம் சுளிக்கவைக்கும் வீடியோக்கள்!’ - இளைஞரைச் சிக்கவைத்த தாய், மகள்

மதனிடம் விசாரித்தபோது, கேசவனும் சமீபத்தில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்று வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கேசவன், கள்ளச்சந்தையில் மதன் மதுபானம் விற்ற குறித்த தகவலை காவல் நிலையத்துக்கு தெரிவித்து வந்துள்ளார். போலீஸ் இன்ஃபார்மரான கேவசனைக் கொலை செய்ய மதன் தலைமையிலான கும்பல் நீண்டகாலமாகத் திட்டமிட்டுவந்திருக்கிறது. தனியாக நின்று கொண்டிருந்த கேவசனை, மதன் கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தில் தலைமறைவாக இருப்பவர்களைத் தேடிவருகிறோம்"என்றனர்.

கொலைக் கும்பலிடமிருந்து தப்பிக்க கேசவன் ஓடியதால், அவரின் ரத்தம் ஆங்காங்கே சிதறிக்கிடந்தது. கோயிலில் வைக்கப்பட்டிருந்த சாமி போட்டோக்களின்மீதும் கேசவனின் ரத்தம் விழுந்திருந்தது. அவரைக் கொடூரமாகக் கொலை செய்த கும்பல், அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக், ஆட்டோ ஆகியவற்றைச் சேதப்பட்டப்படுத்திவிட்டுச் சென்றிருந்தது.

உருட்டுக்கட்டையோடு ஓடும் பெண்
உருட்டுக்கட்டையோடு ஓடும் பெண்

கேசவன் கொலை குறித்து துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, கார்த்திக் மற்றும் போலீஸார் சம்பவம் நடந்த இடத்தில் விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது கேசவனின் உறவுக்காரப் பெண் ஒருவர் உருட்டுக்கட்டை ஒன்றை தூக்கிக்கொண்டு மதன் வீட்டை நோக்கி ஓடினர். அங்கு அவரின் வீடு பூட்டிப்பட்டிருந்தது. அதனால் வெளியிலிருந்த சுவிட்ச் போர்டை உருட்டுகட்டையால் அந்தப் பெண் தாக்கி உடைத்தார். அந்தப் பெண்ணின் மகள், `வேண்டாம் அம்மா...’ என்று கூறினார். அதன் பிறகு அந்தப் பெண், போலீஸ் கண் எதிரிலேயே உருட்டுக்கட்டையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டுச் சென்றார். இந்தக் கொலைச் சம்பவம், போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்துக்கு அருகிலேயே நடந்துள்ளது. அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறாமலிருக்க அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

`கள்ளச்சந்தையில் நடந்த மதுபான விற்பனையை, கமிஷன் வாங்கிக்கொண்டு போலீஸார் தடுக்கவில்லை’ என கேசவனின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு