Published:Updated:

`யாருடனும் பேச மாட்டாள்; டென்ஷனாக இருப்பாள்!' - ஒரே சேலையில் தாய், மகள் தற்கொலை

தற்கொலை
தற்கொலை ( மாதிரிப் படம் )

சென்னை கீழ்கட்டளையில் கணவர் இறந்த துக்கத்திலிருந்த மனைவி, தன்னுடைய மகளுடன் ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

குடும்பம்

சென்னை கீழ்கட்டளை காமராஜர்நகர், ராஜீவ் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (81). இவரின் மூன்றாவது மகள் பிரபாவதி. இவரின் மகள் சொப்னா. இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் கீழ்கட்டளை துரைசாமி நகர், 1-வது தெருவில் குடியிருந்தனர். பிரபாவதியின் கணவர் கோவிந்தசாமி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். கணவரை இழந்த பிரபாவதிக்கும் பேத்திக்கும் செல்வராஜ் ஆறுதலாக இருந்தார். வயதான காலத்திலும் மகளின் குடும்பச் செலவுக்கு செல்வராஜ் பணம் கொடுத்து வந்தார்.

தற்கொலை
தற்கொலை
Representational Image

கடந்த 28-ம் தேதி காலை மகளையும் பேத்தியையும் சந்தித்துவிட்டு செல்வராஜ் சென்றார். 29-ம் தேதி காலை 8 மணியளவில் மகளையும் பேத்தியையும் பார்க்க செல்வராஜ் சென்றார். அப்போது பிரபாவதியின் வீட்டுக் கதவு பூட்டியிருந்தது. செல்வராஜ் கதவைத் தட்டியும் திறக்கவில்லை. அதனால் செல்வராஜ் திரும்பிச் சென்றுவிட்டார். பின்னர் 29-ம் தேதி மாலை 4 மணியளவில் இளைய மகள் கவிதாவுடன் பிரபாவதியின் வீட்டுக்கு வந்தார். அப்போதும் வீடு பூட்டியிருந்தது.

தற்கொலை

கதவைத் தட்டியும் திறக்கவில்லை. பின்னர், ஜன்னல் வழியாக செல்வராஜ், அவரின் மகள் கவிதா ஆகியோர் எட்டிப் பார்த்தபோது ஒரே சேலையில் பிரபாவதியும் சொப்னாவும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர். அதைப்பார்த்து செல்வராஜ், கவிதா ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். தாய், மகள் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய், மகள் மரணம் குறித்து இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் விசாரித்துவருகிறார்.

சென்னை: மனைவி மீது 73 வயது கணவருக்கு சந்தேகம்! -அதிர்ச்சி கொடுத்த கொலை, தற்கொலை
எப்ஐஆர்
எப்ஐஆர்

மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் செல்வராஜ் அளித்த புகாரில், ``எனக்கு 4 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கடைசி மகளும் மூன்றாவது மகளும் கீழ்கட்டளையில் குடியிருந்து வருகின்றனர். கடைசி மகள் கவிதா வீட்டில் நான் 3 மாதங்களாகக் குடியிருந்து வருகிறேன். மூன்றாவது மகள் பிரபாவதியின் கணவர் இறந்துவிட்டதால் அவளை நான்தான் கவனித்து வந்தேன். கணவர் இறந்த பிறகு பிரபாவதி யாருடனும் சரியாகப் பேசமாட்டார். அடிக்கடி டென்ஷனாக இருப்பார். கணவர் இறந்த துக்கத்திலிருந்த பிரபாவதி, அவள் மகளுடன் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இருவரின் சடலங்களையும் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

போலீஸ் விசாரணையில் வயதான காலத்தில் தந்தையை கஷ்டப்படுத்த விரும்பாத பிரபாவதி மகளுடன் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளதாகக் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு