Published:Updated:

`அது புரசைவாக்கம், அடிவாங்குவது அக்கா கணவர்!' - நடுரோட்டில் உருட்டுக்கட்டையால் தாக்கிய பெண்

சென்னை புரசைவாக்கத்தில் நடுரோட்டில் அக்கா கணவரைத் தங்கை உருட்டுக் கட்டையால் தாக்கும் வீடியோ காட்சி வைரலாகிவருகிறது.

அக்கா கணவரைத் தாக்கும் தங்கை
அக்கா கணவரைத் தாக்கும் தங்கை

சமூகவலைதளங்களில், `புரட்டி எடுக்கும் புரட்சிப் பெண்' என்ற பெயரில் சிசிடிவி வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் பாலத்தின் கீழ்பகுதியில் ஒருவரை வெள்ளை நிற சுடிதார் அணிந்த பெண் உருட்டுக்கட்டையால் சரமாரியாகத் தாக்குகிறார். அப்போது இன்னொருவர் வந்து அந்தப் பெண்ணை சமரசப்படுத்துகிறார். இருப்பினும் அந்தப் பெண் மீண்டும் மீண்டும் அந்த நபரை அடித்து உதைக்கிறார். அந்த வீடியோவில் இருப்பவர்கள் யாரென்று விசாரித்தோம்.

புரசைவாக்கம் வீடியோ
புரசைவாக்கம் வீடியோ

சென்னை புரசைவாக்கம், மேம்பாலத்தின்கீழ் குடியிருக்கும் குடும்பத்தினர்தான் கடந்த 28.11.2019-ம் தேதி இரவு 12 மணிக்கு சண்டைப் போட்டுக்கொண்ட காட்சி எனத் தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்தபோது அடிவாங்கியவரின் பெயர் சிவா (25) என்பதும் அவரின் மனைவி இந்து என்பதும் தெரியவந்தது.

குடிப் பழக்கத்துக்கு அடிமையான சிவா, தினமும் குடித்துவிட்டு மனைவி இந்துவை தாக்குவது வாடிக்கை. சம்பவத்தன்றும் இந்துவை சிவா தாக்கியுள்ளார். அதை இந்துவின் தங்கை சங்கீதா தட்டிக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

புரசைவாக்கம் வீடியோ
புரசைவாக்கம் வீடியோ

ஆத்திரமடைந்த சங்கீதா, உருட்டுக்கட்டையை எடுத்து சிவாவைத் தாக்கியுள்ளார். அடிவாங்க முடியாமல் பாலத்தின்கீழ் பகுதியிலிருந்து சர்வீஸ் சாலைக்கு சிவா வந்துள்ளார். அப்போதும் சங்கீதா அவரை விடவில்லை. தொடர்ந்து உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். ஒருகட்டத்தில் அடிவாங்க முடியாமல் சிவா ரோட்டில் கீழே விழுந்துகிடக்கிறார்.

அதன்பிறகும் சங்கீதாவின் கோபம் குறையவில்லை. தொடர்ந்து சிவாவைத் தாக்கியபோது வலிதாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டுள்ளார். இந்தச் சத்தம் கேட்டு அங்கு வந்த ஒருவர், சங்கீதாவை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்கிறார். குடிபோதையிலிருந்த சிவா, காலையில் கண்விழித்தபோது எதுவும் நடக்காதுபோல அமைதியாக இருந்தார்.

புரசைவாக்கம் வீடியோ
புரசைவாக்கம் வீடியோ

இரவில் இவ்வளவு போர்க்களம் நடந்தபோதும், சங்கீதா மீது சிவா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. இதையடுத்து, அந்தக் குடும்பத்தினர் வழக்கம்போல தங்களின் அன்றாடப் பணிகளில் மூழ்கிவிட்டனர். ஆனால், சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகிய பிறகு போலீஸார் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தனர்.

அப்போது, இந்தக் குடும்பத்தினர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் அந்தப்பகுதியில் குடியிருப்பதாகவும் அடிக்கடி இதுபோன்ற அடிதடி சம்பவங்கள் நடக்கும் என்பதும் தெரியவந்தது.