Published:Updated:

சென்னை: மெட்ரோ ரயில் பணி; புதையலில் கிடைத்த தங்கம்! ஆசையைத் தூண்டி பெண்ணை ஏமாற்றிய மர்ம கும்பல்!

தங்கம் எனக் கூறி மோசடி
தங்கம் எனக் கூறி மோசடி

சென்னை அயனாவரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட இரும்புக் குண்டுமணிகளை, தங்கம் என்று கூறி நகை, பணத்தை ஏமாற்றிய வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.

சென்னை அயனாவரம், சோமசுந்தரம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரின் மனைவி ஜெயந்தி. இவர் தனது வீட்டின் கீழ்தளத்தில் பெட்டிக்கடை நடத்திவருகிறார். இவரது கடைக்கு கடந்த பத்து நாள்களுக்கு முன் வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், ஒரு பெண் என மூன்று பேர் வந்து குளிர்பானத்தை வாங்கியிருக்கின்றனர். பின்னர் அடிக்கடி ஜெயந்தி கடைக்குப் பொருள்கள் வாங்க வந்திருக்கின்றனர். அதனால் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுடன் ஜெயந்தி சகஜமாகப் பேசிவந்திருக்கிறார்.

தங்கம்
தங்கம்

அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தாங்கள் மூன்று பேரும் மெட்ரோ ரயில்வே பணியில் ஈடுபட்டுவருகிறோம். சில தினங்களுக்கு முன் பள்ளம் தோண்டும்போது சில குண்டுமணிகள் கிடைத்தாக ஜெயந்தியிடம் கூறியிருக்கின்றனர். மேலும் அவர்கள் இந்த ஊரில் தங்களுக்கு யாரையும் தெரியாது. எனவே இது தங்கக் குண்டுமணியா என்று நகைக்கடையில் கேட்டு சொல்ல முடியுமா என்று கேட்டிருக்கின்றனர். உடனே அயனாவரம் பகுதியிலுள்ள நகைக்கடையில் அந்தக் குண்டுமணிகளைக் கொண்டு சென்று சோதனை செய்திருக்கிறார் ஜெயந்தி. அப்போது அது தங்க குண்டுமணிகள்தான் என்று நகைக்கடையில் கூறியதோடு அதற்கு 4,000 ரூபாயைக் கொடுத்திருக்கிறார்கள். அதை வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் ஜெயந்தி கொடுத்திருக்கிறார். அதற்கு ஜெயந்திக்கு நன்றி கூறி வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் சில குண்டுமணிகளை ஜெயந்தியிடம் கொடுத்திருக்கின்றனர். அதையும் ஜெயந்தி விற்றுக் கொடுத்திருக்கிறார்.

அந்தச் சமயத்தில், ``பள்ளம் தோண்டியபோது ஏராளமான தங்க குண்டுமணிகள் கிடைத்திருக்கின்றன. அதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும். எனவே அதை விற்றுக்கொடுத்தால் நாங்கள் மூன்று பேரும் எங்களின் சொந்த ஊருக்குச் சென்றுவிடுவோம்" என ஜெயந்தியிடம் கூறியிருக்கின்றனர். ஏற்கெனவே இரண்டு முறை தங்க குண்டுமணிகளை வாங்கி விற்றுக் கொடுத்த ஜெயந்தி, இந்த முறை நம்பிக்கையின் பேரில் வடமாநிலத்தவர்கள் கொடுத்த குண்டுமணிகளை வாங்கியிருக்கிறார். அதன் விலை 50 லட்சம் ரூபாய்வரை இருக்கும் எனக் கூறிய வடமாநிலத்தவர்கள், ``உங்களால் முடிந்த பணத்தை இப்போது கொடுங்கள், மீதிப் பணத்தை பிறகு வாங்கிக்கொள்கிறோம்" என்று கூறியிருக்கின்றனர்.

மோசடி
மோசடி

அதனால் ஜெயந்திக்கு வடமாநிலத்தவர்கள் கொடுத்த குண்டுமணிகளை வாங்க வேண்டும் என ஆசை வந்திருக்கிறது. தற்போதைக்கு தன்னிடம் பணமாக 2 லட்சம் ரூபாயும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மட்டுமே இருக்கின்றன என்று ஜெயந்தி கூறியிருக்கிறார். ``சரி, பரவாயில்லை. அதைக் கொடுங்கள். மீதியைப் பிறகு வாங்கிக்கொள்கிறோம்" என மூன்று பேரும் கூறியிருக்கின்றனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த குண்டுமணிகளை வாங்கிக்கொண்ட ஜெயந்தி, அதற்கு பதிலாக பணத்தையும் தங்க நகைகளையும் கொடுத்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பிறகு அந்த குண்டுமணிகளை நகைக்கடைக்கு கொண்டு சென்று ஜெயந்தி சோதனை செய்தார். அப்போது அவை அனைத்தும் இரும்புக் குண்டுமணிகள். தங்கம்போல இருக்க, அவற்றில் தங்க முலாம் பூசப்பட்டிருப்பதாக நகைக்கடை ஊழியர்கள் தெரிவித்தனர். அதைக் கேட்டு ஜெயந்தி அதிர்ச்சியடைந்தார். வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை ஜெயந்தியும் அவரின் குடும்பத்தினரும் தேடினர். ஆனால் அவர்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை.

சென்னை: ஐ.சி.எஃப்-ல் வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி; 7 பேர் கைதான பின்னணி!
போலீஸ்
போலீஸ்

அதனால் ஜெயந்தி தரப்பில் அயனாவரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அயனாவரம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். ஜெயந்தி கடைக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், ஒரு பெண் ஆகிய மூன்று பேரும் வந்தபோது பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளைக்கொண்டு போலீஸார் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் அயனாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு