Published:Updated:

சென்னை: நேற்று கணவர்; இன்று மனைவி; கமிஷனர் அலுவலகத்தில் மாறி மாறிப் புகார்! - நடந்தது என்ன?

ரூபாவதி
ரூபாவதி

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தன் மனைவி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் டிரைவராக வேலை பார்க்கும் காவலர் இருவர் மீதும் கூரியர் ஆபீஸ் நடத்திவரும் ஜெயபிரகாஷ் என்பவர் நேற்று புகாரளித்தார். இன்று ஜெயபிரகாஷின் மனைவி புகார் கொடுத்தார்.

சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் ரூபாவதி (37). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் எனது வயதான தாயருடன் வசித்துவருகிறேன். எனக்கும், என் கணவருக்கும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகன் இருக்கிறான். திருமணநாள் முதல் கணவருடன் மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். எனது கணவருக்கு குடிப்பழக்கம் இருக்கிற்து. அவர் மதுவுக்கு அடிமையானதால் அதற்காகச் சிகிச்சை பெற்றுவருகிறார்.

மனைவி ரூபாவதியுடன் ஜெயபிரகாஷ்
மனைவி ரூபாவதியுடன் ஜெயபிரகாஷ்

எனக்கும், என் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. எனது தந்தை இறந்த பிறகு எனது தாய், எனக்கும் எனது சகோதரிகளுக்கும் சொத்தைப் பிரித்து கொடுத்தார். அதில் எனக்கு கொடுத்த பாகத்தை எனது பெயரில் படூரில் வீடு வாங்கினேன். அந்த வீட்டை என் கணவரின் பெயரில் எழுதாத காரணத்தால் எனது மாமியார், நாத்தனார்கள் தூண்டுதலின்பேரில் தினமும் குடித்துவிட்டு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் என்னை துன்புறுத்திவந்தார். மனவேதனையடைந்த நான் 6.6.2021-ம் தேதி தற்கொலைக்கு முயன்றேன். சிகிச்சை முடிந்த பிறகு எனது அக்காள் வீட்டில் ஓய்வெடுத்தேன். அதன் பிறகு வீட்டுக்கு வந்தபோது எனது கணவர் என் தாலி உட்பட 25 சவரன் தங்க நகைகள், வீட்டுப் பத்திரம், என்னுடைய ஆதார்கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், மருத்துவச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் சென்றுவிட்டார். என் மகனையும் அவரோடு அழைத்துச் சென்றுவிட்டார்.

எனது கணவர் எடுத்துச் சென்ற ஆவணங்களைக் கேட்டபோது தர மறுத்துவிட்டார். எனவே, நான் என் கணவரிடம் காவல் நிலையத்தில் புகாரளிப்பேன் என்று கூறினேன். அதனால் 13.7.2021 அன்று எனது கணவர் என்னைத் தாக்கினார். அதைத் தட்டிக்கேட்ட சகோதரியை அவமரியாதையாகப் பேசினார். அதனால் சட்டரீதியாக விவகாரத்து செய்ய நீதிமன்றத்தை அணுகிவருகிறேன். ஏற்கெனவே காவல் நிலையத்தில் இரண்டு தடவை புகாரளித்திருக்கிறேன். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

சென்னை: `போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவரும், என் மனைவியும் மிரட்டுகிறார்கள்’ - கணவர் பரபரப்பு புகார்!
போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவர் பெஞ்சமின், ரூபாவதி
போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவர் பெஞ்சமின், ரூபாவதி

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மாலை ரூபாவதியின் கணவர் ஜெயபிரகாஷ் புகாரளித்தார். அதில் ரூபாவதி மீதும் சென்னை காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு டிரைவராக இருக்கும் காவலர் பெஞ்சமின் மீதும் குற்றம் சுமத்தியிருந்தார். இந்தநிலையில், ரூபாவதி, கணவர் ஜெயபிரகாஷ் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்திருக்கிறார். கணவனும் மனைவியும் மாறி மாறி கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்திருக்கின்றனர். ரூபாவதியிடம், காவலர் பெஞ்சமின் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு பதில் சொல்லாமல் சென்றுவிட்டார். கமிஷனர் அலுவலகத்திலிருந்து வெளியில் வந்த ரூபாவதி அங்கு பைக்கில் காத்திருந்த ஒருவருடன் சிட்டாகப் பறந்து சென்றுவிட்டார்!

அடுத்த கட்டுரைக்கு