Published:Updated:

பாஜக-வைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது கந்துவட்டி புகார்!

ஜெயலட்சுமி
ஜெயலட்சுமி

பா.ஜ.க பிரமுகரும், சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி மீது கந்துவட்டி புகாரை மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்திருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை பாடி, தெற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் கீதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, `எனது கணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். நானும் சில பெண்களும் சேர்ந்து `வெள்ளை செம்பருத்தி’ என்ற பெயரில் மகளிர் சுய உதவிக்குழுவை நடத்திவருகிறோம். இந்தச் சூழலில் சின்னத்திரை நடிகையும், பா.ஜ.க-வைச் சேர்ந்தவருமான ஜெயலட்சுமி என்பவர், எங்களுக்கு அறிமுகமானார்.

கீதா
கீதா

எங்கள் குழுவிலுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் பத்து பைசா என்ற வட்டியில் கடனாகப் பணத்தைச் செலுத்தினார். அதற்காக எங்களிடமிருந்து வங்கிக் காசோலைகளை ஜாமீனாக பெற்றுக்கொண்டார். நாங்களும் மாதா மாதம் பணம் செலுத்தினோம். தற்போது நாங்கள் கொடுத்த பணத்தை வட்டி என்று கூறுகிறார். நடிகை ஜெயலட்சுமியும், வழக்கறிஞர் ஒருவரும் சேர்ந்து எங்களைக் கூண்டோடு அழித்துவிடுவோம் என்றும், எங்களிடமிருந்து பெற்ற காசோலைகள், 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர், பூர்த்தி செய்யப்படாத பச்சை காகிதத்தில் பெற்ற கையெழுத்துகளைக் கொண்டு எங்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்வதாக மிரட்டுகிறார்கள். எனவே, இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்து கீதா கூறுகையில், ``நான் வெள்ளை செம்பருத்தி என்ற மகளிர் சுய உதவிக்குழுவின் தலைவியாக இருக்கிறேன். கடந்த ஆண்டு, பா.ஜ.க உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காக நடிகை ஜெயலட்சுமி எங்கள் பகுதிக்கு வந்தார். அப்போது நாங்கள் நடத்தும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் குறித்துக் கேட்டறிந்த அவர், வங்கி மூலம் கடன் வாங்க ஏற்பாடு செய்துதருவதாகத் தெரிவித்தார். அதனால் எங்கள் குழுவிலுள்ள பெண்கள், பா.ஜ.க-வில் உறுப்பினர்களாகச் சேர்ந்தோம்.

ஜெயலட்சுமி
ஜெயலட்சுமி
`உள்ளாட்சி இல்லாவிட்டால் எம்.எல்.ஏ-வுக்குப் போட்டியிடுவேன்!'- பா.ஜ.க-வில் சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி
நடிகை ஜெயலட்சுமியுடன் கீதா, மகளிர் சுயஉதவிக்குழுவினர்
நடிகை ஜெயலட்சுமியுடன் கீதா, மகளிர் சுயஉதவிக்குழுவினர்

நடிகை ஜெயலட்சுமி எங்களை பா.ஜ.க கூட்டத்துக்கு அழைத்துச் சென்றார். இந்தச் சமயத்தில்தான் நடிகை ஜெயலட்சுமி, எங்களின் வங்கி கணக்குக்கு கடன் தொகையை அனுப்பினார். வட்டி, அசலை நாங்கள் செலுத்திய பிறகும் எங்களை அவரும், வழக்கறிஞர் ஒருவரும் மிரட்டுகின்றனர். நடிகை ஜெயலட்சுமி போனில் எங்களை மிரட்டிய ஆடியோவையும் ஆதாரமாக காவல் துறையிடம் கொடுத்திருக்கிறோம்" என்றார்.

இது குறித்து நடிகை ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் சார்லஸிடம் கேட்டபோது, ``எங்கள் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. சட்டப்படி அதை நாங்கள் சந்திப்போம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு