Published:Updated:

`போலீஸ் எஸ்.ஐ-யால் வாழ்க்கையே நரகமாகிவிட்டது!' -சென்னைக் கமிஷனரிடம் புகாரளித்த இன்ஜினீயர் மனைவி

பானு ரேகாவுடன் போலீஸ் எஸ்.எஸ்.ஐ பிரபாகரன்
பானு ரேகாவுடன் போலீஸ் எஸ்.எஸ்.ஐ பிரபாகரன்

`சென்னை போலீஸ் எஸ்.ஐ-யாகப் பணியாற்றிவரும் பிரபாகரனால் 2 திருமணம் செய்துகொண்டேன்' எனக் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார் பானுரேகா.

சென்னை வேப்பேரியைச் சேர்ந்த பானுரேகா என்பவர் இன்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், `எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். என்னுடைய முன்னாள் கணவர் பிரபாகரன், காசிமேடு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருகிறார். சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்து நகரில்தான் பிறந்தேன். நான், பி.இ இன்ஜினீயரிங் படித்துள்ளேன். எனக்கு சிறு வயது முதல் பிரபாகரனை நன்றாகத் தெரியும்.

கமிஷனர் அலுவலகத்தில் பானுரேகா
கமிஷனர் அலுவலகத்தில் பானுரேகா

நான், 1993-ம் ஆண்டு பி.இ படித்து முடித்தபோதுதான் பிரபாகரனுக்கு தமிழகக் காவல்துறையில் வேலை கிடைத்தது. அந்தச் சமயத்தில் எனக்கும் பிரபாகரனுக்கும் காதல் மலர்ந்தது. 1994-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டோம். எங்களின் திருமணத்தை திருவொற்றியூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்தோம். எங்களின் இல்லற வாழ்க்கையை சந்தோஷமாகத் தொடங்கிய நிலையில் பிரபாகரன் குடும்பத்தினரிடமிருந்து மிரட்டல்கள் வந்தன. என் தம்பிக்கும் பெற்றோருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

அந்தச் சமயத்தில் பிரபாகரன் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உறுதுணையாக இருந்தார். ஆனால், பிரபாகரனின் குடும்பத்தினரின் தொல்லை அதிகமானது. பிரபாகரனும் மனம்மாறி என் சம்பளத்தைக் கேட்கத் தொடங்கினார். அதனால் எண்ணூரிலிருந்து பெரம்பூருக்குக் குடிபெயர்ந்தோம். பிரபாகரன் தரப்பிலிருந்து தொல்லைகள் அதிகமாக வந்ததால் என் குடும்பத்தினர் எனக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி சீனிவாசன் என்பவரை 1995-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டேன். எங்களின் திருமண வாழ்க்கை சந்தோஷமாகச் சென்றது. எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்தச் சந்தோஷம் நீடிக்கவில்லை.

போலீஸ் எஸ்.எஸ்.ஐ. பிரபாகரன்
போலீஸ் எஸ்.எஸ்.ஐ. பிரபாகரன்

எனக்கும் பிரபாகரனுக்கும் நடந்த திருமண பதிவுச் சான்றிதழ்களை சீனிவாசனிடம் காட்டினார். அதனால் என்னைவிட்டு 1996-ல் அவர் பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு கைக்குழந்தையுடன் தவித்தேன். என் நிலைமையைப் புரிந்து கொண்ட முருகானந்தம் என்பவரை 1999-ல் திருமணம் செய்து கொண்டேன். என் கடந்தகால வாழ்க்கை முருகானந்தத்துக்கு தெரியும். 2000-ம் ஆண்டு முருகானந்தத்துக்கும் எனக்கும் ஆண் குழந்தை பிறந்தது. அந்தச் சந்தோஷமான வாழ்க்கையும் நீடிக்கவில்லை.

முருகானந்தத்திடமும் பிரபாகரன் திருமணச் சான்றிதழைக் காண்பித்தார். ஆனால், என்னைப் பற்றி முருகானந்தத்துக்கு தெரியும் என்பதால் அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், பிரபாகரன் தரப்பில் இருந்து வந்த மிரட்டல் காரணமாக அவரும் என்னைவிட்டுப் பிரிந்துச் சென்றுவிட்டார். தற்போது 2 குழந்தைகளுக்காக உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். பிரபாகரனுக்குத் தெரியாமல் 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை சென்னை அயனாவரத்தில் குடியிருந்தேன். 2006-ல் முருகானந்தம் என்னிடம் சில கையெழுத்துகளை வாங்கிக்கொண்டு, `இனிமேல் உனக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்று கூறிவிட்டுச் சென்றார்.

போலீஸ் எஸ்.எஸ்.ஐ பிரபாகரன்
போலீஸ் எஸ்.எஸ்.ஐ பிரபாகரன்

எல்லா பிரச்னைகளும் முடிந்த பிறகு 2007 முதல் 2017-ம் ஆண்டு வரை பெங்களூரில் குழந்தைகளோடு தங்கியிருந்தேன். 2017-ம் ஆண்டுக்குப் பிறகு எனக்கு கெட்ட நேரம் தொடங்கிவிட்டது. அப்போது உறவினர் திருமணத்துக்காக சென்னைக்கு வந்தேன். அந்தத் திருமணத்துக்கு பிரபாகரனும் வந்திருந்தார். அங்கு என்னைச் சந்தித்த பிரபாகரன், தன்னை மன்னித்துவிடும்படி காலில் விழுந்து கெஞ்சினார். அவரின் நடிப்பைப் பார்த்து நானும் மனமிறங்கினேன். அப்போது என் தலையில் நானே நெருப்பை அள்ளிக் கொட்டியது எனக்குத் தெரியவில்லை. பிரபாகரனின் அன்பான வார்த்தையால் பெங்களூரிலிருந்து சென்னை வந்து அவருடன் குடும்பம் நடத்தினேன்.

சென்னையில் நாங்கள் வாழ்ந்தபோதுதான் பிரபாகரனின் சுயரூபம் தெரியவந்தது. அவர் வீட்டுக்கு மதுபோதையில்தான் வருவார். என்னிடமிருந்து நகை, பணம் கேட்டு சித்ரவதை செய்வார். குழந்தைகளுக்காக அனைத்தையும் சகித்துக் கொண்டேன். இருப்பினும் பிரபாகரனின் டார்ச்சர் தாங்க முடியாமல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அப்போதுதான் பிரபாகரனுக்கு இன்னும் சில பெண்களுடன் பழக்கம் இருப்பது தெரியவந்தது. எனவே, பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்!
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்!

இதுகுறித்து பானுரேகாவிடம் பேசினோம். ``பிரபாகரனை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். அதன்பிறகுதான் அவரின் சுயரூபம் எனக்குத் தெரிந்து அவரைவிட்டு விலகினேன். ஆனால், அவர் எனக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்தார். அவர் எப்போது அந்நியனாக மாறுவார், அன்பாக இருப்பார்" எனத் தெரியாது" என்றார் சுருக்கமாக.

பானுரேகாவின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த எஸ்.எஸ்.ஐ பிரபாகரன், `` பானுரேகாதான் முதலில் என்னிடம் காதலைத் தெரிவித்தார். நண்பர்கள் கட்டாயப்படுத்தியதால், இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். ஆனால், தனித்தனியாக அவரவர் குடும்பத்தில் வாழ்ந்துவந்தோம். அப்போது பானுரேகா வேலைபார்த்த இடத்தில் சீனிவாசன் என்பவரைச் சந்தித்து பழகியுள்ளார். அந்தத் தகவல் எனக்குத் தெரிந்ததும் கண்டித்தேன்.

அதன்பிறகுதான் என் வாழ்க்கை சோகமானது. பானுரேகா, என்னைவிட்டுப் பிரிந்து சென்றதால் 2 தடவை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். மதுவுக்கும் அடிமையானேன். என் நிலைமையைப் பார்த்து வீட்டில் இருந்தவர்கள், திருமணம் செய்துவைத்தனர். தற்போது பானுரேகா, எனக்குப் பலவகைகளில் தொல்லை கொடுத்துவருகிறார். என் மீது அவர் கொடுத்த புகாரை சட்டப்படி எதிர்கொள்வேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு