Published:Updated:

``வீட்டில் தனியாக இருந்த சென்னைப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை"- புத்தாண்டில் போலீஸுக்கு வந்த போன் கால்

நள்ளிரவு 12 மணிக்கு சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் காலில் பதற்றத்துடன் பெண் ஒருவர் பேசினார். அவர், ``சார், என்னை ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்" என்று அழுதபடி கூறினார்.

Representational Image
Representational Image

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு 12 மணியளவில் ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், தன்னுடைய வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக பதற்றத்துடன் கூறியிருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் அந்த போன் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை காவலர்கள், அந்த போன் நம்பரை வைத்து விசாரித்தனர். விசாரணையில் அந்த முகவரி ஆவடியை அடுத்த கரிமேடு, எம்.ஜி.ஆர். தெரு என்று தெரியவந்தது.

காவலன் செயலி
காவலன் செயலி

அந்த இடம், முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதி எனத் தெரியவந்தது. உடனடியாக முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்றனர். அந்த முகவரியில் குடியிருக்கும் பெண்ணிடம் போலீஸார் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளனர். அப்போது, அவர் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகக் கூறினார். இதையடுத்து, அந்த இளைஞர் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்தனர்.

விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் முகேஷ் என்றும், அதே பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து முகேஷிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் தனக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்துவருகிறது. அதனால் அடிக்கடி எங்களுக்குள் தகராறு ஏற்படும் என்று கூறினார். மேலும், அந்தப் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கவில்லை என்று முகேஷ் தெரிவித்தார்.

`இரண்டு வருடங்களில் 6,000 பாலியல் குற்றப் புகார்கள்!' - அதிரவைக்கும் ஊபர் அறிக்கை

இதையடுத்து, போலீஸார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தகவல் தெரிவித்த பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அவர், குடிபோதையில் வீட்டுக்குள் நுழைந்த முகேஷ், தன்னைத் தாக்கினார். ஆனால், பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். வீட்டுக்குள் நுழைந்த முகேஷைப் பார்த்ததும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக தவறாகக் கூறிவிட்டேன் என்று அந்தப் பெண் விசாரணையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்பேரில் முகேஷ் மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தகவல் தெரிவித்த பெண்ணின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் தனியாக அந்தப் பெண் வசித்துவருகிறார். முகேஷ், பட்டரவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.

போலீஸ்
போலீஸ்

புத்தாண்டையொட்டி மது அருந்திய முகேஷ், அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அதைப் பார்த்ததும் அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். அதோடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இருவரிடமும் விசாரித்து முகேஷை கைது செய்துள்ளனர்" என்றனர்.

தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் காவலன் செயலி குறித்த தகவலையும் போலீஸார் விளக்கமாகக் கூறினர். புத்தாண்டையொட்டி ஆவடியில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.