Published:Updated:

`நீங்கள் ஏன் ஹெல்மெட் அணியவில்லை?' - போலீஸ் அனுப்பிய நோட்டீஸால் ஷாக்கான பெண்

எஸ்.மகேஷ்

நீங்கள் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதால் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என யானைக்கவுனி போக்குவரத்து போலீஸார் பெண் ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

Police notice
Police notice

சென்னை கொட்டிவாக்கம் 9-வது தெரு வெங்கடேஷபுரத்தைச் சேர்ந்தவர் பரணி. வழக்கறிஞர். இவரின் மனைவி நந்தினி. இவருக்கு கடந்த 25-ம் தேதி யானைக்கவுனி போக்குவரத்து போலீஸிடமிருந்து ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், வாகனத்தின் பதிவு எண் டிஎன் 12 டி 4491, பெயர் நந்தினி, செல்போன் நம்பர், வீட்டின் முகவரி என அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டள்ளன. மேலும், நீங்கள் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டி போக்குவரத்து விதியை மீறியதற்காக 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப்பார்த்து பரணியும் நந்தினியும் அதிர்ச்சியடைந்தனர்.

police notice
police notice

இதையடுத்து அவர்கள், வழக்கறிஞர் டென்னி மூலம் சென்னை போக்குவரத்து போலீஸ் அதிகாரியிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதில், ``நீங்கள் குறிப்பிட்டுள்ள வாகனத்தின் பதிவு எண் டிஎன் 12 டி 4491, பைக்கின் நம்பர் அல்ல. காரின் பதிவு எண். எனவே, தவறுதலாக எனக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், காரில் எப்படி ஹெல்மெட் அணிந்து செல்ல முடியும். எனவே, சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், வாகனத்தில் பதிவு எண் தவறுதலாக பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.

வழக்கறிஞர் டென்னியிடம் பேசினோம். ``நந்தினி என்பவருக்கு சென்னை போக்குவரத்து போலீஸார் அனுப்பிய நோட்டீஸ் மூலம் போலீஸாரின் கவனக்குறைவு தெளிவாகத் தெரிகிறது. சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணை போக்குவரத்து போலீஸார் ஆய்வு செய்தால் அது கார் என்பது தெரிந்துவிடும். ஆனால், அதைக்கூட சரிபார்க்காமல் ஹெல்மெட் அணியவில்லை என்று நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.

car
car

வழக்கமாக போலீஸார் அனுப்பும் நோட்டிஸில் விதிமீறல் செய்ததற்கான புகைப்படம் இருக்கும். ஆனால், நந்தினிக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் அப்படி எந்தப்புகைப்படமும் இல்லை

இந்த நோட்டீஸிக்குப் பின் பல சந்தேகங்கள் உள்ளன. அதை போலீஸார் தெளிவுப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனரை (வடக்கு) சந்தித்து புகார் அளித்துள்ளோம். மேலும் நந்தினி குடும்பத்தினர் போலீஸார் குறிப்பிட்ட தேதியில் காரில் வெளியில் எங்கும் செல்லவில்லை" என்றார்.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து துணை கமிஷனர் வடக்கு சியமளாதேவியிடம் பேசினோம். ``இந்த நோட்டீஸ் குறித்து சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதுகுறித்து உதவி கமிஷனர் ரவிசந்திரன் நம்மிடம் நோட்டீஸ் குறித்து கூறுகையில், ``போக்குவரத்து சிக்னலில் பணியிலிருக்கும் போலீஸார் விதிகளை மீறுபவர்களின் வாகனங்களின் எண்களைக் குறித்து எங்களிடம் தெரிவிப்பார்கள். அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறோம். நந்தினி என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பிய சம்பவத்தில் வாகனத்தின் நம்பர்கள் தவறுதலாக பதிவு செய்திருக்கவே வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் அதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது" என்றார்.