Published:Updated:

`பிரிக்கப்படாத பிறந்தநாள் கேக் பார்சல்!’ - கொரோனா பணிக்குப்பின் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு

மரணம்
மரணம் ( மாதிரிப் படம் )

தனக்கு வேண்டப்பட்ட காவலரின் பிறந்தநாளைக் கொண்டாட ஆசைப்பட்ட காவலர் சரண்யா, ஊரடங்கிலும் கேக்கிற்கு ஆர்டர் செய்தார். ஆனால், காவலர் வராமல் ஏமாற்றியதால் சரண்யா தற்கொலை செய்துகொண்டார்.

கொரோனா பணியில் தமிழக போலீஸார் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றனர். சென்னையில் 10-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையிலும் துரிதமாக போலீஸார் பணியாற்றிவருகின்றனர். ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கபசுரக் குடிநீரை சமீபத்தில் வழங்கினார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

இந்தச் சூழலில் கொரோனா பணி முடிந்து வீடு திரும்பிய சென்னைப் பெண் காவலர், சரண்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சக காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஓட்டேரி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னை அயனாவரம், பிடிஆர்சி 12-வது தெரு, ஐ பிளாக்கைச் சேர்ந்தவர் சரண்யா (21). இவர் தென்னக ரயில்வேயில் பெண் காவலராகப் பணியாற்றிவந்தார். கடந்த 2017-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தார். கடந்த 30.4.2020-ல் கொரோனா பாதுகாப்பு பணி முடிந்து வீடு திரும்பினார் சரண்யா. சரண்யாவும் காவலர் ஏழுமலையும் பழகிவந்தனர்.

`விடுதியில் மர்மமாக இறந்த மருத்துவ மாணவி' -அதிர்ச்சியில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம்
காவலர் சரண்யா
காவலர் சரண்யா

காவலர் ஏழுமலைக்கு 30-ம் தேதி பிறந்தநாள். அதனால் பிறந்தநாளை ஊரடங்கு நேரத்திலும் சிறப்பாகக் கொண்டாட சரண்யா திட்டமிட்டார். இதற்காக பிறந்தநாள் கேக்கை ஆர்டர் செய்தார். அந்தக் கேக்கை வீட்டில் வைத்து வெட்டி காவலர் ஏழுமலையுடன் சேர்ந்து கொண்டாட ஆசைப்பட்டுள்ளார். அதுகுறித்து ஏழுமலைக்கும் அவர் தகவல் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ஏனோ ஏழுமலை, சரண்யா வீட்டுக்கு வரவில்லை.

அதன் காரணமாக பிறந்தநாள் கேக் பார்சல் பிரிக்கப்படாமல் இருந்தது. ஏழுமலை பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வராமல் ஏமாற்றியதால் சரண்யா மனம் உடைந்தார். அதனால், துப்பட்டவால், மின்விசிறியில் தூக்குப் போட்டு சரண்யா தற்கொலை செய்துகொண்டார்.

ரயில் நிலையம்
ரயில் நிலையம்

தகவல் கிடைத்ததும் அவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். சரண்யா தற்கொலை குறித்து விசாரித்துவருகிறோம்" என்றனர்.

இந்தச் சம்பவம் சரண்யாவுடன் பணியாற்றிய காவலர்களையும் அவரின் குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு