Published:Updated:

சென்னை: இரண்டாவது மாடி; தவறிவிழுந்த செல்போன்!- பட்டதாரிப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

செல்போன்
செல்போன் ( Representational Image )

சென்னையில் இரண்டாவது மாடியிலிருந்து பேசிக்கொண்டிருந்த பட்டதாரிப் பெண்ணின் கையிலிருந்த செல்போன் தவறி கீழே விழுந்தது. அதைப் பிடிக்க முயன்றபோது அந்தப் பெண் தவறி விழுந்து உயிரிழந்தார்.

சென்னை, அயனாவரத்தை அடுத்த நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் யாமினி (25). இவர் பி.காம் பட்டதாரி. சென்னை அண்ணா சாலையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவந்தார். கடந்த 25 -ந் தேதி யாமினியின் தாயார் தாட்சாயிணியும் அவரின் உறவினர்களும் வீட்டின் மாடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

பட்டதாரிப் பெண் யாமினி
பட்டதாரிப் பெண் யாமினி

அப்போது யாமினி செல்போனைப் பயன்படுத்தியபடி பால்கனியில் அமர்ந்திருந்தார். அந்தச் சமயத்தில் அவரின் கையிலிருந்து செல்போன் தவறி, கீழே விழுந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த யாமினி, செல்போனைப் பிடிக்க முயன்றிருக்கிறார். அதில் கால் தவறி யாமினி மாடியிலிருந்து கீழே விழுந்தார். அதைப் பார்த்து அவரின் தாயும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். கீழே விழுந்த யாமினி, படுகாயமடைந்தார். உடனே அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாமினி உயிரிழந்த தகவல் கிடைத்ததும், அவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து யாமினியின் மரணம் குறித்து அவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். யாமினியின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிந்திருக்கிறார்கள்.

சென்னை: `காலையில் பெண் பார்க்கும் படலம்; இரவில் தற்கொலை' - பெண் இன்ஜினீயரின் விபரீத முடிவு
திருமணம்
திருமணம்
representational image

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``யாமினியின் தந்தை இறந்துவிட்டார். அவரின் மூத்த சகோதரிக்குத் திருமணம் முடிந்துவிட்டது. அதனால் யாமினியும் அவரின் அம்மாவும் தனியாக வசித்துவந்தனர். கீழ்த்தளத்திலுள்ள வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு இரண்டாவது மாடியில் யாமினியும் அவரின் அம்மாவும் வசித்துவந்தனர். தற்போது யாமினிக்கு அவரின் குடும்பத்தினர் வரன் பார்த்துவருகின்றனர். சம்பவத்தன்றும் யாமினியின் திருமணம் தொடர்பாக அவரின் குடும்பத்தினர் இரண்டாவது மாடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில்தான் யாமினி மாடியிலிருந்து கீழே விழுந்திருக்கிறார். அவரின் குடும்பத்தினர் செல்போனைப் பிடிக்க முயன்றபோது யாமினி கீழே விழுந்ததாகக் கூறுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு