Published:Updated:

சென்னை: கணவரின் அருகில் இறந்துகிடந்த மனைவி! - கொலையா... தற்கொலையா?

ஜீவா
ஜீவா

சென்னை பம்மல் பகுதியில் வீட்டு வேலைகளைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவந்த இளம்பெண், மர்மான முறையில் வீட்டுக்குள் இறந்துகிடந்தார். அதனால் அவரின் இரண்டு குழந்தைகள் ஆதரவின்றி தவித்துவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் எம்‌.ஜி.ஆர் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மனைவி ஜீவா. இவர்களுக்குத் திருமணமாகி 15 ஆண்டுகளாகின்றன. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மது போதைக்கு அடிமையான வெங்கடேசன், வேலைக்குச் சரிவரச் செல்வதில்லை. அதனால் குடும்பம் வறுமையில் தவித்தநிலையில், ஜீவாதான் வீட்டு வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றிவந்தார்.

மர்ம மரணம்
மர்ம மரணம்

வெங்கடேசனுக்கும் ஜீவாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். கடந்த 25-ம் தேதி கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது வீட்டில் இளைய மகன் பிரதாப் மட்டும் இருந்திருக்கிறான். இந்தநிலையில் ஜீவா, வீட்டுக்குள் பேச்சுமூச்சு இல்லாமல் கிடந்திருக்கிறார். அதைப் பார்த்த இளைய மகன் பிரதாப், தன் அத்தை மேகலாவுக்கு போன் செய்து விவரத்தைக் கூறியிருக்கிறான். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மேகலா, உடனடியாக ஜீவா வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது வீட்டுக்குள் தரையில் வெங்கடேசனும் அருகில் ஜீவாவும் படுத்திருந்தனர்.

ஜீவாவின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து எழுப்பியபோது அவர் கண்விழிக்கவில்லை. அதனால் ஜீவாவை ஆட்டோ மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினர். இதையடுத்து ஜீவாவை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஜீவா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதனால் மேகலா, சங்கர்நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.

வெங்கடேசன்
வெங்கடேசன்
சென்னை: இரட்டைக் கொலை; தொட்டிக்குள் சடலங்கள்; தனியாக வசித்த தம்பதியருக்கு நேர்ந்த கொடூரம்!

அதோடு ஜீவாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தும்படி மேகலா, காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி வழக்கு பதிவு செய்து ஜீவாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். ஜீவா மரணம் குறித்து அவரின் கணவர் வெங்கடேசனிடம் விசாரித்தபோது ஜீவா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறினார். இளம்பெண் ஜீவா எப்படி இறந்தார் என சங்கர் நகர் போலீஸார் விசாரித்துவருகின்றனர். ஜீவா உயிரிழந்ததால் அவரின் இரண்டு மகன்களும் தாயை இழந்து தவித்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு