Published:Updated:

`நீதிமன்ற உத்தரவில் அலட்சியம்!'- சென்னையில் இளம்பெண் உயிரைப் பறித்த பேனர்

ராம் பிரசாத்

சென்னையில் சாலையை மறித்து வைக்கப்பட்ட திருமணவிழா பேனரால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

accident
accident

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. பொறியியல் பட்டதாரியான இவர் பெருங்குடியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தனது இருசக்கர வாகனத்தில் அலுவலகத்துக்குச் சென்றுவருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இன்று மதியம் வழக்கம்போல் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பள்ளிக்கரணை வழியாகச் சென்றபோது சாலையின் நடுவே அ.தி.மு.க நிர்வாகி இல்ல திருமண விழாவுக்கான பேனர்கள் மற்றும் கொடிகளும் வைக்கப்பட்டிருந்தன.

Subashree
Subashree

பல்லாவரம் ரேடியன் சாலையில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ மீது பேனர் ஒன்று விழுந்தது. எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் அவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த தண்ணீர் லாரி அவரது வாகனத்தில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பள்ளிக்கரணை போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சுபஸ்ரீ உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தண்ணீர் லாரி ஓட்டுநர் மனோஜை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்ததையடுத்து சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. சாலையின் நடுவே பேனர்களை வைக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி பேனர்கள் வைக்கப்பட்டதால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.