Published:Updated:

`மயக்க சாக்லேட் கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள்!' - 3 சவரன் செயினால் கணவனிடம் சிக்கிய மனைவி

என்னிடம் பணம் இல்லாததால் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை கழற்றிக் கொடுத்தேன். அதை வாங்கியவர்கள் மீண்டும் பணம் கேட்டு மிரட்டினார்கள்.

 மனைவி
மனைவி

சென்னை தி.நகர். துணை கமிஷனர் அசோக்குமாரைச் சந்தித்த இளம் தம்பதிகள், சில குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளனர். அப்போது பேசிய கணவர், ``நான் தச்சுவேலை செய்துவருகிறேன். வேலைக்காக ஒரு மாதம் வெளியூர் சென்றிருந்தேன். அப்போது வீட்டில் என் மனைவி மட்டும் தனியாக இருந்தார். வேலை முடிந்து வீடு திரும்பியபோது என் மனைவியின் கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்கச் செயினைக் காணவில்லை. அதுகுறித்து அவரிடம் கேட்டபோது அம்பத்தூரைச் சேர்ந்த இருவர் என்னுடைய மனைவியை மிரட்டி 3 சவரன் தங்கச் செயினை பறித்துவிட்டு சென்றுள்ளனர்" என்று கூறினார்.

representational image
representational image

இதையடுத்து, துணை கமிஷனரிடம் பேசிய அந்தப் பெண், ``வீட்டில் தனியாக இருந்தபோது அம்பத்தூரைச் சேர்ந்த குமார் என்பவர் வீட்டுக்கு வந்தார். அவர் எங்கள் குடும்பத்துக்கு அறிமுகமானவர். குமாருடன் அவரின் நண்பர் ஒருவரும் வந்திருந்தார். இருவருடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, அவர்கள் சாக்லேட் ஒன்றைக் கொடுத்தனர். அதைச் சாப்பிட்டதும் நான் மயங்கிவிட்டேன். மயக்கம் தெளிந்தபோது, எனக்கு நடந்த கொடுமைகளை உணர்ந்தேன்.

குமாரும் அவரின் நண்பரும் என்னை அவர்களின் செல்போனில் படம் எடுத்துக் கொண்டனர். அந்த போட்டோ, வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுவிடுவதாகவும் மிரட்டினர். அதை வெளியிடாமலிருக்க பணம் கேட்டனர். என்னிடம் பணம் இல்லாததால் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை கழற்றிக் கொடுத்தேன். அதை வாங்கியவர்கள் மீண்டும் பணம் கேட்டு மிரட்டினார்கள். வீட்டுக்கு வந்த கணவரிடம் நடந்த விவரங்களைக் கூறினேன்.

`வெளியில் சொல்ல வேண்டாம் என்றார்!' - கராத்தே மாஸ்டர் மீது பாலியல் புகார் அளித்த மகளை தாக்கிய தந்தை

இதையடுத்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அதன்பேரில் போலீஸார் விசாரித்தனர். அப்போது குமாரும் அவரின் நண்பரும் தங்கச் செயினுக்காக 90,000 ரூபாய் தருவதாகக் கூறினார்கள். முதல்கட்டமாக 50,000 ரூபாயைக் கொடுத்தனர். மீதமுள்ள 40,000 ரூபாயைத் தராமல் ஏமாற்றிவருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரிக்க துணை கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் பாதிக்கப்பட்ட பெண், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை விசாரித்த வடபழனி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடிவருகின்றனர்.

` அவனோட தொல்லை தாங்க முடியல!' - மனைவி புகாரால் சென்னை ரவுடியைக் கொன்ற கணவன்

இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``புகார் கொடுத்த தச்சுதொழிலாளியின் முதல் மனைவி இறந்துவிட்டார். இதனால் இரண்டாவதாக இந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்துள்ளார். தச்சுத் தொழிலாளிக்கு 40 வயதாகிறது. இந்தப் பெண்ணுக்கு 26 வயதாகிறது. விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், `தங்கச் செயினை மிரட்டிப் பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என்று அந்தப் பெண் கூறியுள்ளார். இதனால்தான் சம்பந்தப்பட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும், வீட்டுக்கு வந்த இருவரும் அந்தப் பெண்ணுக்கு அறிமுகமானவர்கள். அவர்களிடம் விசாரித்தால்தான் என்ன நடந்தது என்று தெரியவரும். மேலும், சம்பந்தப்பட்ட பெண், தான் பாதிக்கப்பட்டதை உடனடியாக கணவரிடம் தெரிவிக்கவில்லை. கழுத்தில் கிடந்த செயின் குறித்து கணவர் கேட்டபோதுதான் அந்தப் பெண் விவரத்தைக் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்கின்றனர்.