Published:Updated:

காதலியிடம் ஆள் மாறாட்டம்; `இரட்டை வேட’ நாடகம்! - சென்னையில் ஒரு `தில்லுமுல்லு’ சம்பவம்’

காதலியிடம் ஆள் மாறாட்டம் செய்த விலான்டர்
காதலியிடம் ஆள் மாறாட்டம் செய்த விலான்டர்

`தில்லு முல்லு’ படத்தில் அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன், அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரன் என நடிகர் ரஜினி கூறி ஏமாற்றிவருவார். அதைப்போல சென்னையில் காதலியிடம் இரட்டை வேடம் போட்டவர் சிக்கிக்கொண்டார்.

சென்னை ஆவடியைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 12.8.2021-ம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் தனியார் நிறுவனம் ஒன்றில் (HR) ஹெச்.ஆராகப் பணியாற்றி வருகிறேன். கடந்த 2019-ம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் பிபிஓ-ஒன்றில் பணியாற்றியபோது சென்னை அரும்பாக்கம், திருவீதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விலான்டர் பெனட்ராயன் என்பவர் எனக்கு அறிமுகமாகினார். 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் என்னைக் காதலிப்பதாக விலான்டர் கூறினார். சில மாதங்களுக்குப் பிறகு நானும் விலான்டரின் காதலை ஏற்றுக்கொண்டேன். என் வீட்டில் விலான்டரைத் திருமணம் குறித்துப் பேசக் கூறினேன். அதன்படி 2020-ம் ஆண்டு, நவம்பர் மாதம் என் வீட்டுக்கு பெண் கேட்டு அவரின் தாயார் செலினாவுடன் விலான்டர் வந்தார்.

விலான்டர்
விலான்டர்

என்னைக் காதலிக்கும்போதும், தோழியாக இருக்கும்போதும் தனக்கு அண்ணன் இருப்பதாகவும் `அவனும் நானும் இரட்டை சகோதரர்கள்’ என்றும் கூறிவந்தார். அண்ணன் பெயர் வில்சன் எனவும் கூறியிருந்தார். என் வீட்டில் பெண் கேட்டு வந்தபோது விலான்டரின் அம்மா செலினாவும் தனக்கு இரட்டைக் குழந்தைகள் என்றும், பெரியவன் துபாயில் இருப்பதாகவும், அவன் மனைவி ஒடிசாவில் குழந்தைகளுடன் அம்மா வீட்டில் இருப்பதாகவும் கூறினார். இளைய மகளை வியாசர்பாடியில் திருமணம் செய்து கொடுத்திருப்பதாகவுதம் தெரிவித்தார். மேலும் தன்னுடைய குழந்தைகள் சிறு வயதாக இருக்கும்போதே கணவர் இறந்துவிட்டதாக செலினா கூறினார். அதோடு `நாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதால், மதம் மாறிய திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள மாட்டோம். என் மகன் ஆசைப்பட்டதால் என் சொந்த பந்தங்களுக்குக் கூறாமல் இந்தத் திருமணத்துக்கு ஓகே சொல்கிறேன்’ என்று செலினா கூறினார்.

அதையடுத்து என்னுடைய பெற்றோரிடம், `நீங்கள் ஒரே பெண் பிள்ளை வைத்திருப்பதால் உங்கள் முறைபடியே திருமணம் செய்துகொள்ளலாம்’ என்றார். அதனால் எனது பெற்றோரும் தந்தையில்லாமல் இத்தனை ஆண்டுகள் இருந்து பிள்ளைகளை வளர்த்திருக்கிறார் என்ற அடிப்படையில் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டனர். திருமணப் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு எனது சொந்தங்களுக்கு தகவல் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தோம். புடவை, தாலி, கல்யாண நாள் குறித்து ஆலோசித்தோம். 2021, மே 14-ம் தேதி திருமணத்துக்கு நாள் குறித்தோம். அப்போது விலான்டர் என்னிடம் `தற்போது திருமணத்துக்கு என்னிடம் பணம் இல்லை. நீ எனக்கு லோன் போட்டு 3.5 லட்சம் கொடு’ என்று கேட்டார். நாங்கள் பழகும்போது என்னிடம் அவசரத் தேவைகளுக்காக விலான்டர் பணம் வாங்கியிருந்தார். அதை அவர் திருப்பி தந்திருக்கிறார். அதனால் நம்பி விலான்டர் கேட்ட பணத்தை ஆன்லைன் மூலம் 20.3.2021, 23.3.2021 ஆகிய தேதிகளில் அனுப்பிவைத்தேன்.

போலி ஆவணம்
போலி ஆவணம்

இந்தச் சமயத்தில் விலான்டர் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்தபோது அதை விலான்டரும், அவரின் அம்மா செலினாவும் தட்டிக் கழித்தனர். மேலும் திருமணத்துக்கு நண்பர்களை அழைக்காததும் எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அதனால் விலான்டரின் நண்பர்களைத் தொடர்புகொண்டு பேசினேன். அப்போதுதான் விலான்டர், ட்வின்ஸ் இல்லை எனத் தெரியவந்தது. மேலும் அவருக்குக் கல்யாணமாகி குழந்தைகள் இருப்பதாகத் தெரிவித்தனர். அதோடு என்னை அவரின் நண்பர்களிடம் தோழி என்றே அறிமுகப்படுத்திவைத்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து ஏப்ரல் 13-ம் தேதி விலான்டர் வீட்டுக்கு நாங்கள் குடும்பத்தோடு சென்றோம். அங்கு எங்களைப் பார்த்து விலான்டரின் அம்மா செலினா அதிர்ச்சியடைந்தார். அப்போது விலான்டரின் திருமண போட்டோக்கள் ஆகியவற்றை அவரிடம் காண்பித்தேன். அதற்கு விலான்டரின் அம்மா, தன்னை மன்னித்துவிடும்படி கூறியதோடு விலான்டருக்கு போன் செய்தார். அப்போது விலான்டர் `நான் ஆண், உன்னால் முடிந்ததைப் பார்’ என்று கூறினார். இதையடுத்து செலினா எங்களிடமிருந்து தப்பிக்க முயன்றார். உடனடியாக அவரை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். அதன் பிறகு விலான்டரும் காவல் நிலையத்துக்கு வந்தார். போலீஸாரிடம் விலான்டரும் அவனின் அம்மா செலினாவும் குற்றத்தை ஒப்புக்கொண்டு என்னிடம் வாங்கிய 3,50,000 ரூபாயில் 2,50,000 ரூபாயை 30 நாள்களுக்குள் திருப்பித் தந்துவிடுவதாக எழுதிக் கொடுத்தனர். ஆனால் பணத்தை திருப்பித் தரவில்லை.

முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை

அதோடு எனக்கு தொல்லை கொடுத்தார். அண்ணன் இருப்பதாகப் பொய்யான ஆவணங்களை தயாரித்து அனைவரையும் விலான்டர் நம்பவைத்தார். அதன் பிறகு வீட்டுக்கு ஆள் அனுப்பிய விலான்டர், `நீ வாழ்ந்தால் என்னுடன் வாழ். இல்லையெனில் உன்னைக் கொன்றுவிடுவேன்’ என்று மே 8-ம் தேதி என்னையும் குடும்பத்தினரையும் மிரட்டினார். வீட்டுக்கு வந்த விலான்டரின் ஆதரவாளர்கள், `நீ இந்தக் கல்யாணத்துக்கு ஒப்புகொள்ளாவிட்டால் அவன் (விலான்டர்) எதுவும் செய்வான், உன் மீது ஆசிட் அடிக்க வாய்ப்புள்ளது’ என்று மிரட்டினர். எனவே என்னை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதால் ஆசிட் ஊற்றிக் கொன்று விடுவேன் என ரௌடிகளை வைத்து மிரட்டிய விலான்டர் மீதும் அவரின் அம்மா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொள்கிறேன். அதன்பேரில் ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

கொரோனா பரவல்... காதலியை வெளியே அழைத்துச் செல்ல ஆலோசனைக் கேட்ட இளைஞர்... போலீஸின் பதில் என்ன?!

இது குறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``குற்றம் சுமத்தப்பட்ட விலான்டர், போரூரிலுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் ஆவடியைச் சேர்ந்த இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய முயன்றிருக்கிறார். நண்பர்கள் மூலம் விலான்டரின் சுயரூபத்தைத் தெரிந்துகொண்ட இளம்பெண், திருமணத்தை நிறுத்தியதோடு காவல் நிலையத்திலும் புகாரளித்திருக்கிறார். அதன்பேரில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 406. 420, 506 (1) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறோம். விலான்டரிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பியபோது , அது தன்னுடைய சகோதரர் வில்சன் எனக் கூறி போலி ஆவணங்களைத் தயாரித்து புகாரளித்த பெண்ணை நம்ப வைத்திருக்கிறார். அதற்கு அவரின் அம்மாவும் உடந்தையாக இருந்திருக்கிறார்" என்றனர்.

போலி ஆவணம்
போலி ஆவணம்

ஆவடியைச் சேர்ந்த இளம்பெண் புகாரளித்தும் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பிறகு இந்தப் புகார் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகுதான் முதல் தகவல் அறிக்கையை ஆவடி அனைத்து மகளிர் போலீஸார் பதிவு செய்திருக்கின்றனர். அதன் பிறகும் சம்பந்தப்பட்டவர்களை போலீஸார் கைதுசெய்யாமல் இழுத்தடிவருவதாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

`இத்தனை ஏமாற்று வேலை பார்க்கும் இவர்களால் நான் மனம் உடைந்துபோனேன். வேலைக்கோ, வெளியிலோ என்னால் சுதந்திரமாகச் செல்ல முடியவில்லை. தயவு கூர்ந்து நானே முதலும் கடைசியாக பாதிக்கப்பட்ட பெண்ணாக இருக்க வேண்டும்’ எனக் கண்ணீர்மல்க ஆவடியைச் சேர்ந்த பெண் போலீஸாரிடம் கூறியிருக்கிறார். அதன் பிறகுகூட போலீஸார் துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர்.

அடுத்த கட்டுரைக்கு