Published:Updated:

`படுக்கையறையில் கம்மல்; காட்டிக்கொடுத்த மோப்ப நாய்!' - 3 மணிநேரத்தில் சிக்கிய கொள்ளையன்

சிசிடிவி கேமராவால் கண்டுபிடிக்க முடியாத இந்தச் சம்பவத்தில் மோப்ப நாய் அர்ஜூன் கொள்ளையனைப் பிடித்துக் கொடுத்துள்ளது.

மோப்ப நாய் அர்ஜூன்
மோப்ப நாய் அர்ஜூன்

சென்னை திருவல்லிக்கேணி, அகத்திமுத்தன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர், மனைவி, மாமியார், மச்சான் என கூட்டுக்குடும்பமாக வசித்துவருகிறார். கார்த்திக், கேமரா கடை ஒன்றில் வேலை பார்த்துவருகிறார். கடந்த 20-ம் தேதி கார்த்திக் வேலைக்குச் சென்றுவிட்டார். அவரின் மனைவியும் மாமியாரும் திருமண உதவித் தொகை பெற மதியம் 12.30 மணியளவில் வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை கதவின் மேல் உள்ள ஆணியில் தொங்கவிட்டுச் சென்றனர்.

representational image
representational image

பின்னர் மாலை 3.30 மணியளவில் அவர்கள் இருவரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது படுக்கையறையில் பீரோவின் அருகில் கம்மல் விழுந்து கிடந்தது. அதைப்பார்த்த கார்த்திக் மனைவியும் மாமியாரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே பீரோவை பார்த்தபோது அதன் லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது.

பீரோவிலிருந்த கம்மல், கைச்செயின், நெக்லஸ், மோதிரம், செயின் ஆகியவையும் 5,000 ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கார்த்திக் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் கொள்ளை போன நகைகள் குறித்த விவரங்களைக் குறிப்பிட்டு புகார் கொடுத்தார். துணை கமிஷனர் தேஸ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் பாஸ்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி வழக்கு பதிவுசெய்தார்.

எப்ஐஆர்
எப்ஐஆர்

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், அங்கு விசாரித்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். மேலும் கொள்ளை நடந்த இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளைப் பதிவு செய்தனர். மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டின் அருகில் உள்ள இன்னொரு வீட்டுக்குள் அர்ஜூன் சென்றது. அதனால் அந்த வீட்டில் உள்ளவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது, அந்த வீட்டுக்கு அரும்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் அன்றைய தினம் வந்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் மூலம் சதீஷ் குறித்த தகவல்களைச் சேகரித்த போலீஸார் அவரைப் பிடித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கார்த்திக்கின் வீட்டின் அருகே குடியிருப்பவரின் வீட்டுக்கு சதீஷ், அடிக்கடி வந்து செல்வார். அப்போது கார்த்திக்கின் வீட்டின் கதவைப் பூட்டி சாவியை கதவின் மேல் உள்ள ஆணியில் தொங்கவிடுவதைப் பார்த்துள்ளார். வழக்கமாக கார்த்திக்கின் மாமா மற்றும் மூதாட்டி ஒருவர் மதியம் சாப்பிட வருவார்கள். அதற்காகத்தான் சாவியை அங்கு வைப்பது வழக்கம்.

`அண்ணனுக்காக மயங்கிய தங்கை; மகனுக்காக நடித்த குடும்பம்!'- சென்னையில் சிக்கிய பின்னணி

சம்பவத்தன்று மூதாட்டியும் கார்த்திக்கின் மாமாவும் மதியம் சாப்பிட்டுவிட்டு சாவியை அதே இடத்தில் வைத்துள்ளனர். சாவியை எடுத்த சதீஷ், கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளார். பீரோ பூட்டியிருந்ததால் கம்பி மூலம் லாக்கரை உடைத்துள்ளார். அவசரத்தில் நகைகளை எடுத்தபோது கம்மல் கீழே விழுந்துள்ளது.

அதைக் கவனிக்காத சதீஷ், கிடைத்ததுவரை லாபம் என்று 7 சவரன் நகைகள், 5,000 ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் கதவைப் பூட்டிவிட்டு சாவியை ஆணியில் தொங்கவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். குறுகிய சந்துப் பகுதி என்பதால் சிசிடிவி கேமராவால் கொள்ளையனை அடையாளம் காண முடியவில்லை. இந்தச் சமயத்தில்தான் மோப்ப நாய் அர்ஜூன், பக்கத்து வீட்டையே சுற்றி வந்தது. அதனால்தான் கார்த்திக் வீட்டில் கொள்ளையடித்த சதீஷைப் பிடிக்க முடிந்தது. கொள்ளை நடந்த 3 மணி நேரத்தில் அவரைக் கைது செய்ததோடு நகைகள், பணத்தை மீட்டுள்ளோம். அவர் மீது ஏற்கெனவே குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது" என்றனர்.