சென்னை தரமணி, பெரியார் நகர், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் விஜய் (21). இவர் தாய், தந்தை, தங்கையுடன் வசித்து வந்தார். பி.சி.ஏ பட்டதாரியான விஜய், தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். குடும்பச் சுமையை சுமந்த விஜய், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இரவு நேரத்தில் பகுதி நேரமாகப் பணியாற்றினார். அதன்மூலம் குடும்ப தேவைகளைச் சமாளித்து வந்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் விஜய், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியில் இருந்தபோது அந்தப் பகுதியில் குடியிருக்கும் பெண்ணை விஜய், செல்போனில் படம் பிடித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்தத் தகவல் அந்தப் பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. உடனே அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜய்யிடம் விசாரித்தனர்.
அப்போது விஜய், `நான் யாரையும் செல்போனில் படம் எடுக்கவில்லை. வேண்டுமென்றால் என்னுடைய செல்போனை சோதனை செய்து பாருங்கள்' என்றார். ஆனால், அவர் பேசியதை யாரும் கேட்கவில்லை. இன்னும் சிலர் ஆத்திரத்தில் விஜய்யை தாக்கியதாகச் சொல்கிறார்கள். அதனால், விஜய், தரமணி காவல் நிலையத்துக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர்.

போலீஸார், விஜய்யின் செல்போனை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது, விஜய்யின் செல்போனில் தவறான வீடியோவும் போட்டோவும் இல்லை என்று போலீஸார் அங்குள்ளவர்களிடம் கூறினர். ஆனால், விஜய் மீது புகார் தெரிவித்தவர்கள் வீடியோ, போட்டோவை அவர் அழித்துவிட்டதாகக் கூறினர். இதையடுத்து போலீஸார் இருதரப்பினரையும் சமரசப்படுத்தினர். பின்னர் விஜய் வீட்டுக்குச் சென்றார்.
வீட்டுக்குச் சென்ற விஜய், நடந்தச் சம்பவத்தைத் தன்னுடைய அம்மாவிடமும் கூறி வேதனையடைந்தார். அப்போது, எந்த ஒரு தவறும் செய்யவில்லை, என் மீது வீண்பழி சுமத்துகிறார்கள் என்று கண்ணீர்விட்டுக் கதறி அழுதுள்ளார். விஜய்க்கு அவரின் குடும்பத்தினர் ஆறுதல் கூறினர். ஆனால், சமரசமாகாத விஜய், இந்தச் சம்பவம் வெளியில் தெரிந்தால் தனக்கு அசிங்கம் எனப் புலம்பியபடி தூங்கச் சென்றுவிட்டார்.

இன்று காலை அறையிலிருந்து விஜய், எழுந்துவரவில்லை. அதனால் அங்கு சென்று பார்த்தபோது விஜய் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து விஜய்யின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தரமணி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்தக்கு வந்த போலீஸார் விஜய்யின் சடலத்தைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விஜய்யின் மரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து விஜய்யின் உறவினர்கள் கூறுகையில், ``விஜய்யின் அப்பா குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். அதனால் கல்லூரி படிப்பை முடித்ததும் 2 இடங்களில் விஜய் வேலைபார்த்து வந்தார். செய்யாத தவறுக்காக அவர் மீது பழிசுமத்தியதால் அவமானமடைந்து தற்கொலை செய்துகொண்டார். விஜய் மீது குற்றம் சுமத்தியவர்கள், அவரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாரிடம் புகாரளித்துள்ளோம்.
ஆனால் போலீஸார், கொரோனா வைரஸ் பணி காரணமாக 31-ம் தேதிக்குப் பிறகுதான் விசாரணை நடத்த முடியும் என்று அலட்சியமாகப் பதிலளிக்கின்றனர். விஜய்யின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றனர்.
விஜய்யை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தாக்கிய தகவல் போலீஸாருக்குத் தெரியவந்துள்ளது. அதனால் அவரிடமும் விஜய் மீது புகாரளித்த பெண்ணிடமும் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். அதே சமயம் விஜய்யின் செல்போனை முழுமையாக ஆய்வு செய்யவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.