சென்னை: விவாகரத்து... கட்டாய தாலி... துன்புறுத்தல்! -தற்கொலை முடிவெடுத்த கணவர்

சென்னையில் விவாகரத்தான மனைவிக்குத் தாலிகட்ட வைத்து கொடுமைப்படுத்தியதால் மனமுடைந்த கணவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரித்திவி என்கிற ராபின்சன் (34), இவர், அம்பத்தூர் பாடி மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வந்தார். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன் சத்யா என்பவருடன் திருமணம் நடந்தது. கணவன், மனைவிக்கு இடையே நடந்த தகராறில் இருவரும் பிரிந்தனர். 2019- ஜூலை மாதம் விவாகரத்து பெற்றார். ஊரடங்கு காரணமாகப் பிரித்திவி வேலைக்குச் செல்லவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் 6-ம் தேதி வேலைக்குச் சென்ற பிரித்திவி, அன்றைய தினம் வீடு திரும்பவில்லை.

7-ம் தேதி இரவு வீட்டுக்கு வந்த பிரித்திவி, `சத்யாவின் குடும்பத்தினரால் மீண்டும் பிரச்னை, அதனால் எனக்கு வாழப் பிடிக்கவில்லை' எனக் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். 8-ம் தேதி காலையில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு அவர் தீக்குளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தீயை அனைத்து தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைப் பலனின்றி பிரித்திவி நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து அவரின் அம்மா பஞ்சம்மாள் (60) மதுரவாயல் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 365, 342, 323, 324, 506 (2) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.
பிரித்திவியின் அம்மா பஞ்சம்மாள் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ``என் கணவர் மகாலிங்கம் காவலாளியாகப் பணியாற்றிவருகிறார். எங்களுக்கு 2 மகள்கள், பிரித்திவி என்கிற ராபின்சன் (34), பிரதாப் என 2 மகன்கள். பிரித்திவிக்கும் ஏழுமலை என்பவரின் மகள் சத்யாவுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2019 ஜூலையில் விவாகரத்து பெற்றனர். இதனால் சத்யாவும் அவரின் குடும்பத்தினரும் என் மகன் மீது கோபத்தில் இருந்தனர். 6-ம் தேதி லேத் பட்டறைக்கு வேலைக்குச் சென்ற பிரித்திவியை சத்யாவின் சகோதரர்கள் டாடா மேஜிக் வாகனத்தில் வந்து வலுக்கட்டாயமாகப் பிரித்திவியை கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் பிரித்திவியை அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதன்பிறகு காஞ்சிபுரம் மாவட்டம் பட்டுபுலம் சின்ன கோயிலில் வைத்து விவாகரத்து பெற்ற மனைவி சத்யாவின் கழுத்தில் மீண்டும் தாலி கட்ட வைத்துள்ளனர். `சத்யாவுடன் நீதான் வாழ வேண்டும். நான் சொல்வதைக் கேட்டுதான் நடக்க வேண்டும் இல்லையென்றால் நீ சாகத்தான் வேண்டும்' என்று கூறி மிரட்டியுள்ளார்.
இனி இங்கிருந்து நீ எங்கும் தப்ப முடியாது. தப்ப முயற்சி செய்தால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டி வைத்துள்ளனர். ஆனால், என் மகன் பிரித்திவி 7-ம் தேதி மாலை அங்கிருந்து தப்பி எங்கள் வீட்டுக்கு இரவு 8 மணியளவில் வந்துவிட்டான். அங்கு நடந்த சம்பவம் அனைத்தையும் எங்களிடம் கூறி மிகவும் மனவருத்தப்பட்டு தனக்கு வாழப் பிடிக்கவில்லை என்று கூறினான். அதன்பிறகு 8-மந்தேதி காலை தீக்குளித்தான். எனவே, என் மகனைக் கடத்தி அடித்து மிரட்டி தற்கொலைக்குத் தூண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரித்திவி உயிரிழந்ததையடுத்து பஞசம்மாள் கொடுத்த புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306-ஐ போலீஸார் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து மதுரவாயல் போலீஸார் கூறுகையில், ``உயிரிழந்த பிரித்திவிக்கும் சத்யாவின் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவருகிறது. முதல் மனைவி சத்யாவை விவாகரத்து செய்த பிரித்திவிக்கு 2-வதாகத் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளன. அதனால்தான் சத்யாவின் சகோதரர்கள் பிரித்திவியை மிரட்டி தாலி கட்ட வைத்துள்ளனர். அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில்தான் பிரித்திவி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களைத் தேடிவருகிறோம். பிரித்திவி, சத்யா தம்பதியினருக்கு ஒரு குழந்தையும் உள்ளது" என்றனர்.