Published:Updated:

காதல் தகராறு; சிறுமிக்குக் கத்திக் குத்து! - சென்னை இளைஞர் சேலத்தில் தற்கொலை

தற்கொலை செய்துகொண்ட சதீஷ்
தற்கொலை செய்துகொண்ட சதீஷ் ( எம். விஜயகுமார் )

சுமதி தன்னை டார்ச்சர் செய்ததாகவும், இதனால் மனமுடைந்து சுமதியைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பி வந்ததாகவும் சதீஷ் குறிப்பிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

காதல் பிரச்னையால் 16 வயது சிறுமியைக் கத்தியால் குத்திய விவகாரத்தில், தலைமறைவான சென்னையைச் சேர்ந்த இளைஞர், சேலத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்கொலை
தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் சதீஷ். இவர் தேவாலயம் ஒன்றில் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். சதீஷும் சுமதியும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்துவந்திருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் இவர்களின் காதலை அறிந்த சுமதியின் பெற்றோரும் ஊர்க்காரர்களும் இருவரையும் அழைத்து, பஞ்சாயத்துப் பேசி பிரித்துவைத்திருக்கிறார்கள்.

பிறகு சதீஷ் சென்னைக்குச் சென்றுவிட்டார். இருப்பினும் சதீஷ் அவ்வப்போது செல்போனில் சுமதியைத் தொடர்புகொண்டு பேசிவந்திருக்கிரா. இந்தநிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் சதீஷ் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறர். இதற்காக ஐப்பசி மாதம் நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்து அதற்கான அழைப்பிதழையும் தயார்செய்திருக்கிறார்.

 சென்னை: `உன் பெற்றோரிடம் சொல்லட்டுமா?'- மாணவியின் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்

அந்த அழைப்பிதழை சதீஷ், தனது காதலியான சுமதிக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பிவைத்திருக்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுமதி, தன்னை நேரில் சந்தித்துவிட்டு, திருமணம் செய்துகொள்ளுமாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று சதீஷ் சென்னையிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் சின்னசேலத்துக்கு வந்திருக்கிறார். பின்னர் சதீஷும் சுமதியும் தனிமையில் சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது. அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு முற்றியிருக்கிறது.

இதில், ஆத்திரமடைந்த சதீஷ் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து சுமதியைச் சரமாரியாகக் குத்திவிட்டு, தப்பியோடிவிட்டார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் சுமதியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் உயிர் பிழைத்த சுமதி, கள்ளக்குறிச்சி போலீஸாரிடம் நடந்ததைக் கூறியிருக்கிறார். இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீஸார் சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து தேடிவந்திருக்கிறார்கள்.

விசாரணை
விசாரணை

இந்தநிலையில் சதீஷ், சேலம் உடையாப்பட்டி பைபாஸ் அருகிலுள்ள பெருமாள் கோயில் மேடு பகுதியிலிருக்கும் மரங்கள் அடர்ந்த புதரில் நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதை அறிந்த அம்மாப்பேட்டை போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து சதீஷின் உடலை மீட்டனர். சதீஷ் தன் சட்டைப்பையில் கடிதம் ஒன்று எழுதிவைத்திருந்தார்.

அதில், சுமதி தன்னை டார்ச்சர் செய்ததாகவும், இதனால் மனமுடைந்து சுமதியைக் கத்தியால் குத்திவிட்டு தப்பி வந்ததாகவும் சதீஷ் குறிப்பிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், போலீஸார் தன்னைத் தேடுவதை அறிந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் சதீஷ் எழுதியிருந்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர். சதீஷின் உடலை சேலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததோடு, அவரது இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இந்தத் தகவல் சதீஷின் குடும்பத்தினருக்கும் கள்ளக்குறிச்சி காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு