Published:Updated:

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தால் கடன்! - விபரீத முடிவெடுத்த தனியார் நிறுவன அலுவலர்

தற்கொலை செய்துகொண்ட தினேஷ்
தற்கொலை செய்துகொண்ட தினேஷ்

சென்னை, செங்குன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் தனியார் நிறுவன அதிகாரிக்கு அதிக அளவில் கடன் ஏற்பட்டிருக்கிறது. அதனால், விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னையை அடுத்த செங்குன்றம், அண்ணாதெரு, முதல் மாடி பி-பிளாக்கிலுள்ள சாய்பாபா அப்பாட்மென்ட்டில் குடியிருந்தவர் தினேஷ் (32). இவரின் மனைவி சரண்யா (28). இவர்களுக்குக் கடந்த ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சரண்யா மூன்று மாத கர்ப்ப்பிணி. தினேஷ், தனியார் நிறுவனத்தில் அலுவலராகப் பணியாற்றிவந்தார். இவருக்கு ஆன்லைனில் சூதாட்டமாடும் பழக்கம் இருந்துவந்திருக்கிறது. அதன் மூலம் தினேஷுக்குக் கடன் அதிகமானது.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்
Representational Image

இந்தநிலையில், 14.9.2020-ல் காலை 8:30 மணியளவில் மனைவி சரண்யாவிடம், `என்ன சமைக்கப்போகிறாய்?' என்று கேட்டிருக்கிறார். பின்னர், அவர் படுக்கை அறைக்குச் சென்று கதவைப் பூட்டியிருக்கிறார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகமடைந்த சரண்யாவும், தினேஷின் அம்மாவும் கதவைத் தட்டியிருக்கிறார்கள். பிறகு கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார்கள். அப்போது மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தினேஷ் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த சரண்யாவும், தினேஷின் அம்மாவும் கதறி அழுதனர். அழுகைச் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் அங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து தினேஷை மீட்டிருக்கிறார்கள். பின்னர், அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் தினேஷைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து செங்குன்றம் சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ் வழக்கு பதிவு செய்திருக்கிறார். போலீஸார் தினேஷின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தினேஷ் மரணம் குறித்து அவரின் மனைவி சரண்யா, காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அதில் கணவரின் ஆன்லைன் சூதாட்டத்தால் கடன் அதிகம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

எஃப்.ஐ.ஆர்
எஃப்.ஐ.ஆர்
திருச்சி:`கடன் வாங்கி ஆன்லைன் கேம்; பறிபோன பணம்!' - மன உளைச்சலால் காவலர் தற்கொலை

இது குறித்து செங்குன்றம் போலீஸார் கூறுகையில், ``தினேஷுக்கு நல்ல சம்பளம் என்றாலும், அவரின் ஆன்லைன் சூதாட்டப் பழக்கத்தால் அதிக அளவில் கடன் வாங்கியிருக்கிறார். வாங்கிய கடனை அடைக்க ஓர் இடத்தையும் அவர் விற்றதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அதன் பிறகும் ஆன்லைன் சூதாட்டத்தால் கடன் அதிகமானதால், அவர் தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றனர்

ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. அந்தப் பட்டியலில் செங்குன்றம் தினேஷின் பெயரும் இடம்பிடித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு