Election bannerElection banner
Published:Updated:

திருடப்பட்ட ஆட்டோவை புத்திசாலித்தனமாகக் கண்டுபிடித்த இளைஞர் - சென்னையில் ஒரு பொல்லாதவன்!

ஆட்டோ
ஆட்டோ

சென்னை கே.கே.நகரில் திருடப்பட்ட ஆட்டோவை, இரண்டு மாதங்களுக்குப் பிறகு புத்திச்சாலித்தனமாகக் கண்டுபிடித்திருக்கிறார் கேட்டரிங் பிசினஸ் செய்துவரும் பிரிதிவிராஜ்.

சென்னை, கே.கே.நகர் பகுதி ராணி அண்ணாநகரைச் சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (23). இவர் கேட்டரிங் பிசினஸ் செய்துவருகிறார். இதற்காகக் கடந்த ஜனவரி மாதம் எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த சேகர் என்பவரிடமிருந்து TN-09-AW-6791 என்ற பதிவு எண் கொண்ட ஆட்டோவை 60,000 ரூபாய்க்கு வாங்கினார். அந்த ஆட்டோவை பிரிதிவிராஜ், தன்னுடைய கேட்டரிங் பிஸ்னஸுக்காகப் பயன்படுத்திவந்தார்.

ஆட்டோ
ஆட்டோ

கடந்த பிப்ரவரி மாதம், 2-ம் தேதி ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்திவிட்டுச் சென்றார். பின்னர் நள்ளிரவில் வந்து பார்த்தபோது ஆட்டோ மாயமாகியிருந்து. அதனால் அதிர்ச்சியடைந்த பிரிதிவிராஜ், பல இடங்களில் ஆட்டோவைத் தேடினார். தனக்குத் தெரிந்த நண்பர்களிடமும் விவரத்தைக் கூறினார். எதுவும் பலனளிக்கவில்லை. இதையடுத்து ஆட்டோ திருடப்பட்டது குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் பிரிதிவிராஜ் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸாரும் வழக்கம்போல கண்டுபிடித்துத் தருவதாகக் கூறினர். இரண்டு மாதங்கள் கடந்த பிறகும் பிரிதிவிராஜின் ஆட்டோ குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில், பிரிதிவிராஜும், அவரது நண்பர் சிவாவும் தொழில்ரீதியாக பைக்கில் பரங்கிமலை ரயில் நிலையம் பகுதிக்குச் சென்றனர். சிவா பைக்கை ஓட்ட பிரிதிவிராஜ் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது பைக்கைக் கடந்து ஒரு ஆட்டோ வேகமாகச் சென்றது. அதைப் பார்த்த பிரதிவிராஜ், இது தன்னுடைய ஆட்டோபோல இருப்பதை உணர, இருவரும் பைக்கில் அந்த ஆட்டோவைப் பின்தொடர்ந்தனர்.

பைக்கில் செல்லும்போது பிரிதிவிராஜுக்கு ஒரு யோசனை தோன்றியது. ஆட்டோவைத் திருடியவனைக் கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என முடிவு செய்தார். அதற்காக சிவாவிடம், `நான் ஆட்டோவில் சவாரி கேட்டு கே.கே.நகருக்குச் செல்கிறேன். நீ பின்தொடர்ந்து பைக்கில் வா’ என்று கூறிவிட்டு கீழே இறங்கினார். அதன் பிறகு, அந்த ஆட்டோவை நிறுத்தி அதை ஓட்டிச் சென்றவரிடம், `` சார், எமர்ஜென்ஸி. உடனடியாக செல்ல வேண்டும். எவ்வளவு ரூபாய் கேட்டாலும் தருகிறேன்” என்று சிவா கூறினார்.

சென்னை: அதிகாலையில் தனியாகச் சென்ற சிறுமி! - இரு ஆட்டோ டிரைவர்களால் நேர்ந்த கொடுமை

உடனே ஆட்டோ டிரைவரும் `ஓகே’ என்று பிரிதிவிராஜை ஏற்றிக்கொண்டு வேகமாக புறப்பட்டார். பின்னால் அமர்ந்திருந்த பிரிதிவிராஜ், ஆட்டோவை கண்களால் ஸ்கேன் செய்தார். அப்போது அது அவருடைய ஆட்டோ என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார். அதன் பிறகு போனில் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பினார். ஆட்டோ டிரைவரும் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் பிரிதிவிராஜ் கூறிய முகவரிக்குச் சென்றுகொண்டிருந்தார்.

எஃப்.ஐ.ஆர்
எஃப்.ஐ.ஆர்

கே.கே.நகர் பகுதியில் பிரிதிவிராஜின் நண்பர்கள் காத்திருந்தனர். குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும், ஆட்டோவிலிருந்து கீழே இறங்கிய பிரிதிவிராஜ் `எவ்வளவு சார்?’ என்று கேட்டார். அதற்கு டிரைவர், தொகையைக் கூறியதும் அங்கிருந்தவர்களிடம் பிரிதிவிராஜ், சைகை மூலம் தகவலைத் தெரிவித்தார். அடுத்த சில நொடியில் பிரிதிவிராஜின் நண்பர்கள் ஆட்டோவையும் டிரைவரையும் மடக்கினர். பின்னர் டிரைவரிடம் விசாரித்தபோது அவர் ஆட்டோவைத் திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து ஆட்டோ டிரைவரை பிரிதிவிராஜும் அவரின் நண்பர்களும் கே.கே.நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். போலீஸாரிடம் விவரத்தைக் கூறி டிரைவரை ஒப்படைத்தனர். போலீஸார், டிரைவரிடம் விசாரித்தபோது அவரின் பெயர் நாகராஜ் என்று தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ திருடிய குற்றத்துக்காக நாகராஜை போலீஸார் கைதுசெய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``பிரிதிவிராஜின் ஆட்டோவைத் திருடிய நாகராஜ், பதிவு நம்பரை TN-09-5768 என்று மட்டும் மாற்றியிருக்கிறார். பின்னர் அந்த ஆட்டோவை அவர் சென்னையில் ஓட்டிவந்திருக்கிறார். தற்செயலாக பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் பிரிதிவிராஜ் ஆட்டோவைப் பார்த்ததும் அதே ஆட்டோவில் ஏறி கே.கே.நகருக்கு வந்திருக்கிறார். அங்கு அவரை மடக்கிப்பிடித்து, ஆட்டோ திருடியவரை எங்களிடம் ஒப்படைத்தார். நாகராஜிடம் விசாரித்தபோது வறுமையின் காரணமாக ஆட்டோவைத் திருடி பதிவு நம்பரை மாற்றி ஓட்டி வந்ததாகக் குறிப்பிட்டார். நீதிமன்ற நடவடிக்கைக்குப் பிறகு பிரிதிவிராஜிடம் ஆட்டோ ஓப்படைக்கப்படும்" என்றனர்.

நாகராஜ்
நாகராஜ்

இது குறித்து பிரிதிவிராஜிடம் பேசினோம். ``கேட்டரிங் பிசினஸுக்காக ஆட்டோவை வாங்கியிருந்தேன். என்னுடைய பெயருக்கு ஆட்டோவை மாற்றுவதற்குள் அதை யாரோ திருடியது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பிறகு, நானும் என் நண்பர்களும் செல்லும் இடமெல்லாம் ஆட்டோவைத் தேடிவந்தோம். இந்தச் சமயத்தில்தான் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் நானும் என் நண்பன் சிவாவும் பைக்கில் சென்றபோது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றில் ஸ்டிக்கர் ஒன்றைப் பார்த்தேன். அது திருடப்பட்ட என்னுடைய ஆட்டோவில் நான் ஓட்டிய ஸ்டிக்கர் எனத் தெரிந்ததும், பதிவு நம்பரை பார்த்தேன். அது மாறியிருந்தது. அதனால் சந்தேகத்தின் பேரில் பைக்கிலிருந்து இறங்கி ஆட்டோவில் சவாரி செல்ல முடிவு செய்தேன். ஆட்டோவுக்குள் ஏறிய பிறகுதான் அது என்னுடைய ஆட்டோ என்று தெரிந்தது. உடனே நண்பர்கள் மூலம் ஆட்டோ திருடியவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தேன். இரண்டு மாதங்களுக்குப்பிறகு ஆட்டோ கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு