Published:Updated:

`போதையில் உளறிய கஞ்சா வியாபாரி..!' -10 மாதங்களுக்குப் பின் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சென்னை இளைஞர்

கொலை செய்யப்பட்ட லோகேஷ்
கொலை செய்யப்பட்ட லோகேஷ்

`இந்த வழக்கில் இன்னும் சிலரைத் தேடிவருகிறோம். அவர்கள் சிக்கினால்தான் லோகேஷ் என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் தெரியவரும்' என்கின்றனர் போலீஸார்.

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூர், கரிகாலன் நகர், ராஜாஜி சாலையைச் சேர்ந்தவர் தனசேகர். கூலித்தொழிலாளி. இவரின் மனைவி சுமதி. இவர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் கடந்த 29.4.2019-ல் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, `எனக்குத் திருமணமாகி 20 ஆண்டுகளாகின்றன. எனக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். எனது 2-வது மகன் லோகேஷ் (20). 10-வது படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தான்.

சங்கர்நகர் காவல் நிலையம்
சங்கர்நகர் காவல் நிலையம்

கடந்த 5.4.2019-ல் காலை 8 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற லோகேஷ், வீடு திரும்பவில்லை. தெரிந்தவர்கள் வீட்டில் தேடிப் பார்த்தும் அவன் குறித்த தகவல் தெரியவில்லை. காணாமல் போன தினத்தன்று கறுப்பு நிற டீ சர்ட், வெள்ளை நிற பேன்ட் அணிந்திருந்தான். 5 அடி உயரம், மாநிறம், ஒல்லியான தேகம் உள்ள லோகேஷைக் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின் அடிப்படையில் சங்கர்நகர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வமணி, வழக்கு பதிந்து விசாரித்தார்.

பரங்கிமலை துணை கமிஷனர் கே.பிரபாகர் மேற்பார்வையில் சங்கர் நகர் இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வமணி மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் மாயமான லோகேஷ் குறித்து விசாரித்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் கஞ்சா வியாபாரி ஒருவர் போலீஸாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது, அனகாபுத்தூரைச் சேர்ந்த லோகேஷின் நண்பர்கள் பிரவீன் என்கிற மாட்டு பிரவீன் (20), நித்தீஷ் (21) ஆகியோர்தான் லோகேஷைக் கடைசியாக சந்தித்தனர் என்ற தகவலை போதையில் உளறினார்.

கைது செய்யப்பட்ட பிரவீன்
கைது செய்யப்பட்ட பிரவீன்

இதையடுத்து, போலீஸாரின் சந்தேகப் பார்வை பிரவீன், நித்தீஷ் மீது திரும்பியது. அவர்களிடம் விசாரித்தபோது, `லோகேஷ் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது' என்று முதலில் கூறினர். அப்போது, `கஞ்சா வியாபாரி எல்லா தகவல்களையும் எங்களிடம் கூறிவிட்டார், லோகேஷை நீங்கள் இருவரும் என்ன செய்தீர்கள் என்ற தகவல் தெரியும். உண்மையைக் கூறிவிட்டால் தண்டனை குறையும்' எனப் போலீஸார் கூறினர். அதைக்கேட்டு பிரவீனும் நித்தீஷும் அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகே லோகேஷைக் கொலை செய்த தகவலை இருவரும் கூறியதோடு சடலத்தை கிணற்றில் வீசியதையும் தெரிவித்தனர்.

`ஒரு ரிமாண்ட்டைக்கூட ஒழுங்கா செய்ய முடியல..!' -கால்முறிவிலும் காவலர்களை வசைபாடிய `கஞ்சா' மணி

இதன்பின்னர், பிரவீன், நித்தீஷ் ஆகியோரை அழைத்துக் கொண்டு அனகாபுத்தூர் பகுதியில் ராணுவத்துக்குச் சொந்தமான பாழடைந்த கிணற்றுக்கு போலீஸார் சென்றனர். கிணற்றில் தண்ணீர் இருந்தது. அதனால் முதலில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் நீண்ட தேடுதலுக்குப் பிறகு மனித எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டது. அதைப் போலீஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லோகேஷைக் கொலை செய்த குற்றத்துக்காக பிரவீன், நித்தீஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

நித்தீஷ்
நித்தீஷ்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடு லோகேஷ் என்பவருடையதா என்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதேநேரத்தில் லோகேஷை சிலருடன் சேர்ந்து அடித்துக்கொன்றதாக பிரவீனும் நித்தீஷும் கூறியுள்ளனர். அதனடிப்படையில் இருவரையும் கைது செய்துள்ளோம்.

இந்த வழக்கில் இன்னும் சிலரைத் தேடிவருகிறோம். அவர்கள் சிக்கினால்தான் லோகேஷ் என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் தெரியவரும். முதற்கட்ட விசாரணையில் அனகாபுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலில் லோகேஷ் கொலை செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது" என்றனர்.

10 மாதங்களுக்குப் பின் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சென்னை இளைஞர். மேலும் தெரிந்துகொள்ள : http://bit.ly/36R8no0

Posted by Junior Vikatan on Tuesday, February 4, 2020
அடுத்த கட்டுரைக்கு