Published:Updated:

`மேஸ்திரி உடனான நட்புக்குத் தடையாக இருந்தான்!' -வளர்ப்பு மகனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய தாய்

கொலை செய்யப்பட்ட சதீஷ்
கொலை செய்யப்பட்ட சதீஷ்

``கணவர் இறந்தபிறகு கட்டட வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினேன். அப்போதுதான் எனக்கும் மேஸ்திரி காமராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. எங்களின் நட்புக்கு சதீஷ் தடையாக இருந்தான்" என்று அஞ்சலி போலீஸாரிடம் கூறியுள்ளார்.

சென்னை திருநின்றவூர் வத்சலாபுரத்தில் கடந்த 2-ம் தேதி இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவரின் பெயர் சதீஷ் (19), ஆவடியைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. இந்த வழக்கில் சதீஷின் வளர்ப்புத் தாய் அஞ்சலை என்கிற அஞ்சலி, அவரின் ஆண் நண்பர் காமராஜ் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ் ஆகியோரைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சதீஷின் நண்பர் குமாரை போலீஸார் தேடிவருகின்றனர்.

கொலை நடந்த இடத்தில் போலீஸ்
கொலை நடந்த இடத்தில் போலீஸ்

கைதான சதீஷின் அம்மா அஞ்சலி போலீஸாரின் விசாரணையில், ``எனக்கு 3 பெண் குழந்தைகள். ஆண் குழந்தை இல்லை. இதனால் 19 ஆண்டுகளுக்குமுன் கோவைக்குச் சென்றபோது ஒரு மாதக் குழந்தையாக இருந்த சதீஷை சென்னைக்கு கொண்டுவந்து வளர்த்தேன். சதீஷ், வீட்டுக்கு வந்த நேரத்தில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. இருப்பினும் 5 குழந்தைகளையும் பாசமாக வளர்த்துவந்தேன்.

இந்தச் சமயத்தில் என் கணவர் வீரபத்திரன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதனால் கட்டட வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றிவந்தேன். அப்போதுதான் மேஸ்திரி காமராஜ் என்பவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. எங்கள் நட்பு சதீஷுக்குத் தெரிந்தது. இதற்கிடையில் சதீஷ், என் வளர்ப்பு மகன் என்ற தகவல் உறவினர் மூலம் அவனுக்குத் தெரியவந்தது. அதன்பிறகு, அடிக்கடி என்னோடு தகராறில் ஈடுபட்டுவந்தான்.

``மகள்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு மகன்?" - கூலிப்படை மூலம் கொலை செய்த சென்னைத் தாய்
கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

மேலும், காமராஜ் என் வீட்டுக்கு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தான். அதனால் நானும் காமராஜும் சேர்ந்து சதீஷைக் கொலை செய்ய முடிவு செய்தோம். இதையடுத்து, குமார் மற்றும் விக்னேஷ், சுரேஷ் ஆகியோரிடம் சதீஷைக் கொலை செய்ய 1,50,000 ரூபாய் தருவதாகக் கூறினோம். முன்பணமாக 25,000 ரூபாய் கொடுத்தோம். பணத்தை வாங்கிய பிறகு மூன்று பேரும் திருநின்றவூருக்கு சதீஷை பைக்கில் அழைத்துச் சென்றனர். அங்கு பாழடைந்த வீட்டில் வைத்து அவனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.

பின்னர் சதீஷின் பைக்கில் மூன்று பேரும் அங்கிருந்து புறப்பட்டு வந்துள்ளனர். சதீஷ், கொலை செய்யப்பட்ட தகவல் எனக்குத் தெரிந்தும் அமைதியாக இருந்தேன். ஆனால், போலீஸ் விசாரணையில் சிக்கிக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கில் கைதான காமராஜ் கூறுகையில், ``என் வழியில் சதீஷ் குறுக்கே வந்தான். அதனால்தான் அஞ்சலியின் அனுமதியோடு கூலிப்படை மூலம் சதீஷைக் கொலை செய்ய திட்டமிட்டோம். அதன்படி பணத்தை வாங்கிய கூலிப்படையினர் சதீஷைக் கொலை செய்துவிட்டனர். அந்தத் தகவலை எங்களுக்கு தெரிவித்தனர். ஆனால், எதுவும் நடக்காதுபோல வழக்கம்போல கட்டட வேலைக்குச் சென்றுவந்தேன்" என்று கூறியுள்ளார்.

சதீஷ்
சதீஷ்

கைதான சுரேஷ், விக்னேஷ் ஆகியோர் போலீஸாரிடம் கூறுகையில், ``சம்பவத்தன்று குமார்தான் சதீஷை திருநின்றவூருக்கு அழைத்துவந்தான். 4 பேரும் மது அருந்தினோம். போதையிலிருந்த சதீஷை அரிவாளால் வெட்டினோம். பின்னர் அரிவாளை பாழடைந்த வீட்டின் அருகில் உள்ள முட்புதரில் வீசினோம். பின்னர், சதீஷ் பைக்கில் பாக்கம் சென்றோம். அங்குள்ள கால்வாயில் சட்டைகளை வீசிவிட்டு குளித்தோம். பின்னர் ஒரே பைக்கில் மூன்றுபேரும் அங்கிருந்து புறப்பட்டு வந்தோம். குமார், எங்களுக்குப் புதிய சட்டைகளை வாங்கிக் கொடுத்தார்" என்று கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட சதீஷின் பைக்கை பழைய இரும்புக் கடையிலிருந்து போலீஸார் மீட்டுள்ளனர். மேலும் ஒரே பைக்கில் குமார், சுரேஷ், விக்னேஷ் செல்லும் சிசிடிவி காட்சிகள்தான் முக்கியத் தடயமாக இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு